தரக்குறைவான செயல்களில் ஈடுபடுகின்றனவா தனியார் பள்ளி நிர்வாகங்கள்? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 4, 2015

தரக்குறைவான செயல்களில் ஈடுபடுகின்றனவா தனியார் பள்ளி நிர்வாகங்கள்?


கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் சாதனை படைத்த திருக்கழுக்குன்றம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவியர் குறித்து, அவதுாறு பரப்பிவரும் நபர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.



அதிக மதிப்பெண்கள் பெறுவதிலும், தேர்ச்சி விகிதத்திலும், தனியார் பள்ளிகளுக்கு இணையாக, அரசுப் பள்ளிகளும் சாதனை படைக்கத் துவங்கி விட்டன.

சாதனை

கடந்த கல்வியாண்டு, பிளஸ் 2 பொதுத் தேர்வில், திருக்கழுக்குன்றம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய 627 மாணவியரில், 548 பேர் (87 சதவீதம்) தேர்ச்சி பெற்றனர். கல்வி மாவட்ட அளவில், அதிக மதிப்பெண் பெற்று, அரசு பள்ளிகளில் முதலிடமும் பெற்றது.

இந்த நிலையில், இந்த அரசு பள்ளியை பற்றி, மாவட்டம் முழுவதும், அவதுாறு பரப்பப்பட்டு வருகிறது. உண்மை நிலவரம் அறிய, நாம் விசாரணையில் இறங்கினோம். இதில் பல அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியே வந்தன. இப்படிக்கூட நடக்குமா என்று சந்தேகப்படும் படியாக, அந்த தகவல்கள் அமைந்திருக்கின்றன.

இதன்பின்னணி குறித்து விசாரித்தபோது, கிடைத்த தகவல்கள் வருமாறு: திருக்கழுக்குன்றம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக, ஆங்கில வழி கல்வியும் கற்பிக்கப்படுகிறது. இதனால், சுற்று வட்டாரப் பகுதிகள் மட்டுமின்றி, திருப்போரூர், மாமல்லபுரம், புதுப்பட்டினம், சதுரங்கபட்டினம், கூவத்துார், செங்கல்பட்டு உள்ளிட்ட, பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏழை, நடுத்தர குடும்பங்களைச் சார்ந்த மாணவியர், இப்பள்ளியில் ஆர்வமுடன் சேர்ந்து, கல்வி பயின்று வருகின்றனர். அரசுப் பள்ளியின் வளர்ச்சியால், சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள, தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில், மாணவியர் சேர்க்கை பாதிக்கப்பட்டது.

சேவையாக கருதாமல், கல்வியை வியாபாரமாக மாற்றியதால், தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்தது. இதனை அதிகரிக்க, பல்வேறு யுக்திகளை தனியார் நிர்வாகங்கள் கையாள்கின்றன. இது ஒருபுறமிருக்க, கடந்த இரு மாதங்களுக்கு முன், இப்பள்ளியைச் சேர்ந்த ஒரு மாணவிக்கும், தனியார் தொழில்நுட்ப கல்லுாரி மாணவர் ஒருவருக்கும் இடையிலான, தனிப்பட்ட உறவால் ஏற்பட்ட பிரச்னை, காவல் நிலையம் வரை சென்று, வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

பெற்றோர் குமுறல்

இதனை, தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சில தனியார் பள்ளிகள், அரசுப் பள்ளிக்கு அவப்பெயரை உருவாக்கி, வரும் கல்வியாண்டில் மாணவியர் சேர்க்கையை தடுக்கும் நோக்கில், சிலரை துாண்டிவிட்டு, அரசு பள்ளி மற்றும் மாணவியரை இழிவுபடுத்தும் வகையில், வதந்தி பரப்பி வருவதாக கூறப்படுகிறது. இது, அரசு பள்ளி மாணவியர், பெற்றோர் மத்தியில், மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, மாணவியரின் பெற்றோர் சிலர் கூறுகையில், "வதந்தி பரப்புபவர்கள் மீது, காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவியரும் இளம் பருவத்தில், படிப்பில் கவனம் செலுத்தி, உணர்ச்சிகளுக்கு இடமளிக்காமல், கல்வியை கற்று, பள்ளிக்கும், பெற்றோருக்கும் பெருமை தேடித் தர வேண்டும் என்றனர்.

சுவரொட்டிகளால் பரபரப்பு

பள்ளியின் பெற்றோர் - ஆசிரியர் கழக தலைவராக இருப்பவர், அதே பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியரின் தந்தை அல்லது பாதுகாவலராக இருக்க வேண்டும் என்பது விதி. ஆனால், இதற்கு மாறாக, இப்பள்ளியின் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், பெற்றோர் - ஆசிரியர் கழக கூட்டத்தையும், பல மாதங்களாக நடத்தவில்லை என்று கல்வித் துறை உயர் அதிகாரிகளுக்கு எதிர் தரப்பினர் புகார் தெரிவித்தும், எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதைக் கண்டித்து, நகரெங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.


2 comments:

  1. "எனது நெஞ்சம் நிறைந்த அன்பு சகாக்கள் அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள்..! இதுவரை நாம் கடந்து வந்த பாதையில் இன்று நம்பத்தகுந்த நல்லசெய்தி கிடைத்துள்ளது. அதாவது இன்று காலை எழிலகம் வளாகத்தில் தமிழக அரசின் தலைமை ஆலோசகர் திருமதி. சாந்தா ஷீலா நாயர் IAS முன்னிலையில் இந்தாண்டிற்க்கான பழங்குடியினர் நலன் சார்ந்த திட்ட ஆலோசனை கூட்டம் ஆதிதிராவிடர் நலத்துறை செயலாளர் திருமதி. கண்ணகி பாக்கியநாதன் IAS அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்த திட்ட ஆலோசனை கூட்டத்தில் "ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை குரல்"மானமிகு. அய்யா. கிறிஸ்துதாஸ் காந்தி IAS உட்பட மேலும் பல அரசு துறை செயலாளர்கள் கலந்து கொண்டனர். அந்த ஆலோசனை கூட்டத்தில் நாமும் கலந்து கொண்டு நாம் கடந்து வந்த போராட்ட பாதை, தற்போதுவரை தமிழக அரசின் செயல்பாடுகள் அனைத்தும் எடுத்து கூறி எங்களுக்கு உரிமையை பெற்றுத் தாருங்கள் என்று விவாதித்தோம். அதற்கு நமது நலத்துறையின் செயலாளர் அவர்கள் வருகின்ற புதன்கிழமை (11.03.15) அன்று உங்களுக்கு உரிய வழக்கு முடிக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்படும் என்று உறுதி அளித்துள்ளார்..! எனவே நமது உரிமை விரைவில் நிறைவேற்றப்படும் என்பதில் எவ்வித ஐயமில்லை..! அதுவரை காத்திருப்போம்..! என்றென்றும் தோழமையுடன் ஜித்தன்ஹரி..!

    ReplyDelete
  2. "வதந்தி பரப்புபவர்கள் மீது, காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவியரும் இளம் பருவத்தில், படிப்பில் கவனம் செலுத்தி, உணர்ச்சிகளுக்கு இடமளிக்காமல், கல்வியை கற்று, பள்ளிக்கும், பெற்றோருக்கும் பெருமை தேடித் தர வேண்டும் .வாழ்த்துக்கள்! வளருங்கள்!

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி