பொதுத்துறை நிறுவன பணியாளர் தேர்வுக்கு தனி அமைப்பு?:ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அரசுக்கு பரிந்துரை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 20, 2015

பொதுத்துறை நிறுவன பணியாளர் தேர்வுக்கு தனி அமைப்பு?:ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அரசுக்கு பரிந்துரை


'அரசு ஊழியர்களை தேர்வு செய்ய, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இருப்பதுபோல, பொதுத்துறை நிறுவனங்கள், கழகங்கள் மற்றும் வாரியங்களுக்கு பணியாளர்களை நியமிக்க, தனியாக ஒரு பணியாளர் தேர்வு அமைப்பை உருவாக்க வேண்டும்' என, தமிழக அரசுக்கு, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர்.தமிழகத்தில் வாரியங்கள், கழகங்கள், குழுமங்கள், நிறுவனங்கள், பல்கலைகள் போன்றவற்றில் காலியாகும் பணியிடங்களை, அந்தந்த நிறுவனங்களே நிரப்பிக் கொள்ளலாம். காலி இட விவரங்களை வேலை வாய்ப்புத் துறைக்கு தெரிவித்து, கல்வித்தகுதி மற்றும் பதிவு மூப்பு அடிப்படையில், உரிய நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.'வேலை வாய்ப்பகங்களில் பதிவு செய்யாத நபர்களும், உரிய கல்வித்தகுதியுடன் இருந்தால், அவர்களும் விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்க வேண்டும். நாளிதழ்களில், இதற்கான பொது அறிவிப்பை வெளியிட வேண்டும். இதற்கு ஏற்ற வழிமுறைகளை அரசு வகுக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம், சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது.தமிழக அரசு அரசாணை: இந்த நடைமுறைகளை மேற்கொள்ள அனுமதி அளித்து, மார்ச் 11ல், தமிழக அரசு, அரசாணை பிறப்பித்தது. தீர்ப்பின்படி,
உரிய வழிகாட்டுதல் இன்றி அரசாணை பிறப்பிக்கப்பட்டதால், பொதுத்துறை நிறுவன பணியாளர் தேர்வில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து, பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒருவர் கூறியதாவது:அரசுத்துறைகள் போன்று இல்லாமல், வாரியங்கள், கழகங்கள், நிறுவனங்கள் போன்றவை, குறிப்பிட்ட சில எல்லை வரையறைகளுக்கு உட்பட்பட்டவை என்பதால், இதில் நடைமுறை சிக்கல்கள் ஏற்படுகின்றன.

சென்னையை மட்டும் அதிகார எல்லையாக கொண்டு செயல்படும் ஒரு வாரியத்துக்கு, 10 ஓட்டுனர் பணியிடங்களை நிரப்ப, வேலைவாய்ப்பகம் வாயிலாக, ஒன்றுக்கு மூன்று என்ற விகிதத்தில், தகுதியானவர்கள் அழைக்கப்பட்டு, தேர்வு நடத்தி, 10பேரை தேர்வு செய்யலாம்.ஆனால், புது அரசாணைபடி அறிவிப்பு வெளியிட்டால், தமிழகம் முழுவதும் இருந்து, ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பிப்பர். இவர்களின் சான்றிதழ்களை சரி பார்த்து, தேர்வு நடத்தி முடித்து, 10 பேரை தேர்வு செய்ய ஆறு மாதங்களுக்கு மேலாகிவிடும்.தீர்வு என்ன?:இதற்கு, அதிக செலவும்; மனித ஆற்றலும் தேவை. நிர்வாக நடைமுறைகளிலும் சிக்கல்கள் ஏற்படும். எனவே, இது தொடர்பான உயர் நீதிமன்ற தீர்ப்பை அமலாக்க, அனைத்து துறைகளுக்கும் ஏற்ற புதிய வழிமுறைகள் உருவாக்க வேண்டும். தேர்வு முறைகளை மேற்கொள்ள தனி அமைப்பை ஏற்படுத்துதல் உட்பட, பல பரிந்துரைகளை அரசுக்கு அளித்து உள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

புதிய விதிமுறைகள் தேவை:

ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அரசுக்கு அளித்துள்ள பரிந்துரைகள்:

● காலி பணியிடங்களுக்கு உரிய நபர்களை தேர்வு செய்ய, அரசு பணியாளர் தேர்வாணையம் போன்று, வாரியங்கள் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவன பணியாளர் தேர்வுக்கு தனி அமைப்பை உருவாக்கலாம்.
●தற்போதைய சூழலில் மேலும் ஒரு அமைப்பை உருவாக்குவது சிக்கலாகும் என்றால், அரசு பணியாளர் தேர்வாணையத்திடமே இப்பொறுப்பை ஒப்படைக்கலாம்; ஒரு சட்டத் திருத்தம் வாயிலாக இது சாத்தியமாகும்.
●பணியாளர் தேர்வு நடைமுறையை மறு ஆய்வு செய்ய உயர் நிலை குழு அமைத்து, புதிய வழிகாட்டி விதிமுறைகளை உருவாக்க வேண்டும்.
●இத்துடன் வேலைவாய்ப்புத் துறையின் பணிகளையும் மறு சீரமைப்பு செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி