இரண்டாம் நாளாக வேலைநிறுத்தம்: பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் மீது தாக்குதல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 23, 2015

இரண்டாம் நாளாக வேலைநிறுத்தம்: பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் மீது தாக்குதல்

பி.எஸ்.என்.எல். ஊழியர்களின் 48 மணி நேரப் போராட்டம் புதன்கிழமையுடன் நிறைவடைந்தது.

இரண்டாவது நாளாக புதன்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் பணிக்குச் சென்றவர்களைத் தடுத்து நிறுத்தி, தொழிற்சங்கத்தினர் தாக்குதல் நடத்தியதாக புகார் கூறப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பி.எஸ்.என்.எல். பங்குகளை தனியாருக்கு விற்க முடிவு, போனஸ் வழங்காமை, எஸ்.சி.எஸ்.டி. ஊழியர்களுக்கான சலுகைகள் குறைப்பு, ஸ்பெக்ட்ரம் அலைக் கற்றை ஒதுக்கீட்டு ஏலத்தில் தனியார் நிறுவனங்களுக்கே முன்னுரிமை போன்றவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் உள்பட நாடு முழுவதும் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் இரண்டு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தில், பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் சங்கம், தொலைத்தொடர்பு ஊழியர்கள் தேசிய கூட்டமைப்பு உள்பட 16 தொழிற்சங்கங்களும் பங்கேற்றனர்.

போராட்டத்தின் இரண்டாவது நாளான புதன்கிழமை, அலுவலக நுழைவு வாயில் கதவுகளைப் பூட்டி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆங்காங்கே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



மோதல்: தமிழகத்தில் சென்னை, தமிழக தொலைபேசி வட்டத்தைச் சேர்ந்த சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர். ஊழியர்கள் பணிக்கு வராததால் வாடிக்கையாளர் சேவை மையங்கள், அலுவலங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

தொலைபேசி பழுது நீக்கம், ப்ரீபெய்டு ரீசார்ஜ் செய்யும் பணி, செல்லிடப்பேசி, இணையதள சேவைகளுக்கான கட்டணம் வசூலிப்பது உள்ளிட்ட பல பணிகளும் பாதிக்கப்பட்டன.

போராட்டம் நடைபெற்ற இரண்டு நாள்களிலும், பணிக்குச் சென்ற பெண், ஆண் ஊழியர்கள், அதிகாரிகளைப் பணி செய்ய விடாமல், தொழிற்சங்க ஊழியர்கள் சிலர் தடுத்து நிறுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதன் காரணமாக, ஊழியர்களுக்கிடையே முதல் நாளான செவ்வாய்க்கிழமை கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, புதன்கிழமை நடைபெற்றப் போராட்டத்திலும் ஊழியர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஊழியர்கள் சிலர் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத பி.எஸ்.என்.எல் ஊழியர் கூறியதாவது:

பெரும்பாலான பி.எஸ்.என்.எல். ஊழியர்கள், அதிகாரிகளும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். பணிக்குச் சென்ற ஒரு சில ஊழியர்கள், அதிகாரிகளை தொழிற்சங்கத்தினர் தடுத்து நிறுத்தினர். ஏற்கெனவே தேசியத் தொலைத்தொடர்பு ஊழியர்கள் சம்மேளனத்தின் சென்னை மாநிலச் செயலாளர் ஒருவரின் செயல்பாடுகளில் அதிருப்தி அடைந்த ஒரு சில ஊழியர்கள் தனியாகப் பிரிந்து சென்றனர்.

போராட்டத்தின்போது, அவர்கள் பணிக்குச் செல்ல முற்பட்டபோது, தேசியத் தொலைத்தொடர்பு ஊழியர்கள் சம்மேளனத்தினர் அந்த ஊழியர்களைப் பணிக்குச் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தித் தாக்கினர். இதில், அதிருப்தியாளர் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு, அவர் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பணிக்குச் செல்ல முற்பட்ட ஊழியர்களைத் தாக்கியவர்கள் மீது காவல் துறையிடமும், பி.எஸ்.என்.எல் நிர்வாகத்திடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி