கல்விக்கு பயன்படும் பழைய பொருள்கள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 27, 2015

கல்விக்கு பயன்படும் பழைய பொருள்கள்!





உபயோகமற்ற பழைய பொருள்களை பொதுமக்களிடமிருந்து சேகரித்து, அவற்றை மறுசுழற்சி செய்வதன் மூலம் கிடைக்கும் தொகையை கல்விக்காக அளித்து வருகின்றனர் "பேப்பர் மேன்' எனும் தன்னார்வ அமைப்பினர்.

அன்றாடம் நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்கள், காகிதங்கள், மின்னணுப் பொருள்களைப் பயன்படுத்திய பிறகு ஒரு சிலர் பழைய பொருள்களை வாங்கும் கடைக்காரரிடம் கொடுத்து விடுகின்றனர். பலர் குப்பைத் தொட்டியில் போட்டு விடுகின்றனர்.

தங்களின் வருமானத்துக்காக பழைய பொருள்களை வாங்கும் கடைக்காரர்கள் அந்தத் தொழிலை செய்தாலும், அதனால் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் அவர்கள் எவ்வளவு முக்கியமானவர்களாக இருக்கின்றனர் என்பதை பலர் உணர்வதில்லை.

அவர்கள் மூலம் மொத்த மறுசுழற்சியில் 20 சதவீதம் நடைபெறுகிறது என்றார் கழிவுகளை மறுசுழற்சி செய்ய அவற்றை சேகரிக்கும் "பேப்பர் மேன்' அமைப்பின் நிறுவனர் மேத்யூ ஜோஸ்.

"பேப்பர் மேனின்' பணி என்ன?: சென்னை மாநகர் முழுவதும் சுமார் 180 பழைய பொருள்களை வாங்கும் கடைக்காரர்களோடு இணைந்து பணி புரிகிறது "பேப்பர் மேன்' அமைப்பு.

மேலும், பழைய பொருள்களை அளிக்க விரும்புபவர்களின் வீடுகளுக்கே சென்று கழிவுகளை பெற்றுக்கொண்டு பொருள்களின் மதிப்பு, எடைக்கு தகுந்தாற் போல் பணத்தை அளிக்கின்றனர்.

இதுதவிர, பழைய பொருள்ளுக்குப் பணம் பெறாமல் தானமாக அளித்தால் அவற்றைச் சேகரித்து, மறுசுழற்சி செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானத்தைப் பல தன்னார்வ நிறுவனங்கள் மூலம் குழந்தைகளின் கல்வி, முதியோர்களுக்கான மருத்துவம் உள்ளிட்டவற்றுக்கு அளித்து உதவ ஏற்பாடு செய்கின்றனர்.

மேலும், பழைய பொருள்களை அளிப்பவர்கள் அந்தப் பணத்தை "பேப்பர் மேன்' அமைப்புடன் இணைந்துள்ள 20 என்.ஜி.ஓ-க்களில் (தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்) தங்களுக்கு விருப்பமான ஒன்றுக்கு தானமாக வழங்கும் வசதியும் உள்ளது.

என்னென்ன பொருள்களைத் தரலாம்?: வீட்டில் இருக்கும் பழைய காகிதங்கள், புத்தகங்கள், பால் கவர்கள், உடைந்த பிளாஸ்டிக் பொருள்கள், இரும்பு உள்ளிட்ட உலோகப் பொருள்கள், கண்ணாடி பாட்டில்கள் உள்ளிட்ட அனைத்து கழிவுப் பொருள்களும் பெற்றுக் கொள்ளப்படும். தொலைக்காட்சி, குளிர்சாதனப் பெட்டிகள், செல்லிடப்பேசி, மடிக்கணினி, பேட்டரிகள் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை சனிக்கிழமைகளில் மட்டும் பெற்றுக்கொள்வார்கள்.

தகவல் பெறலாம்: பழைய பொருள்களைத் தருபவர்களுக்கு அதன் விலை விவரங்கள் எஸ்.எம்.எஸ்., மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும். இது தவிர, பழைய பொருள்கள் மூலமாக என்.ஜி.ஓ-க்கள் எப்படி கல்விக்கும், இதர சேவைகளுக்கும் பயன்படுத்துகின்றனர் என்ற விவரமும் தெரிவிக்கப்படும். இதுவரை ரூ. 3.6 லட்சம் குப்பை தானமாகப் பெறப்பட்டுள்ளது.

பேப்பர் மேன் அமைப்பிடம் 1500 வீடுகள், 60 அலுவலகங்கள், 30 பள்ளிகள் தொடர்ந்து பழைய பொருள்களை அளித்து வருகின்றனர் எனவும் ஜோஸ் தெரிவித்தார்.



60 கிலோ காகிதம் = ஒரு மரம்



நாடு முழுவதும் ஆண்டுக்கு 4.3 கோடி டன் கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன. இவற்றை முறையாக மறுசுழற்சி செய்தால் அவற்றிலிருந்து மட்டும் சுமார் ரூ.20,000 கோடி அளவுக்கு நிதி திரட்ட முடியும்.

மேலும், 60 கிலோ காகிதங்களை மறுசுழற்சி செய்தால் ஒரு மரம் வெட்டப்படுவது தடுக்கப்படுகிறது. இதுதவிர, மறுசுழற்சியின் மூலம் கழிவுகளை எரிப்பதால் உருவாகும் சுற்றுச்சூழல் சீர்கேடு, குப்பைக் கிடங்குகளில் இட நெருக்கடி, நிலத்தடி நீர் மாசு உள்ளிட்டவை தவிர்க்கப்படுகிறது. எனவே, பொதுமக்கள் கழிவுகளைத் தூக்கி எறியாமல் மறுசுழற்சிக்கு வழங்க முன்வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.



பழைய பொருள்களை எப்படி அளிப்பது?



"பேப்பர் மேன்' அமைப்பின் தொலைபேசி எண் 8015269831-ஐ காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை (ஞாயிறுக்கிழமை தவிர) தொடர்பு கொண்டு தங்களுக்கு தகுந்த தேதி, நேரத்தில் பழைய பொருள்களை அளிக்க தகவல் தெரிவிக்கலாம். பின்னர், தகவல் தெரிவித்த 3 மணி நேரத்துக்குள் பழைய பொருள்கள் பெற்றுக் கொள்ளப்படும்.சென்னை மாநகராட்சி பகுதிகுள்பட்ட அனைத்து இடங்களிலும் உள்ள வீடுகள், நிறுவனங்கள், பள்ளிகள் ஆகியவற்றிலிருந்து பழைய பொருள்கள் பெற்றுக் கொள்ளப்படும். மேலும், பழைய பொருள்களை அளிக்க விரும்புபவர்கள் www.paperman.in என்ற இணையதளத்தில் "பேப்பர் மேன்' அமைப்பு குறித்த அனைத்து விதமான தகவல்களையும் தெரிந்துகொள்ளலாம் என்றார் மேத்யூ ஜோஸ்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி