தமிழகத்தில் என்ஜினீயரிங் படிப்புக்கு 1.88 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனை ஜூலை 1-ந் தேதி முதல் கலந்தாய்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 28, 2015

தமிழகத்தில் என்ஜினீயரிங் படிப்புக்கு 1.88 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனை ஜூலை 1-ந் தேதி முதல் கலந்தாய்வு

தமிழகத்தில் என்ஜினீயரிங் படிப்புக்கான விண்ணப்ப வினியோகம்நிறைவடைந்தது. இதுவரை 1.88 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஜூலை 1-ந் தேதி முதல் கலந்தாய்வு தொடங்குகிறது.
60 மையங்கள் விற்பனை
தமிழகம் முழுவதும் பல்கலைக்கழகத்துறை என்ஜினீயரிங் கல்லூரிகள்,
அரசு என்ஜினீயரிங் கல்லூரிகள், அரசு உதவி பெறும் என்ஜினீயரிங் கல்லூரிகள், தனியார் சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகள் என மொத்தம் 538 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு கொடுக்கப்பட்ட இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டு மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இந்தநிலையில் 2015-2016-ம் கல்வி ஆண்டில் என்ஜினீயரிங் மாணவர்களை சேர்ப்பதற்கு விண்ணப்பம் கொடுக்கும் பணி கடந்த 6-ந் தேதி (புதன்கிழமை) தொடங்கியது. சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம், குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி. கல்லூரி, புரசைவாக்கத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி உள்படதமிழ்நாடு முழுவதும் 60 இடங்களில் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டு வந்தது. அண்ணா பல்கலைக்கழகத்தில் விண்ணப்பங்கள் வினியோகத்தை துணை வேந்தர் பேராசிரியர் மு.ராஜாராம் தொடங்கி வைத்தார்.
1.88 லட்சம் விண்ணப்பங்கள்
என்ஜினீயரிங் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் சேர தமிழ்நாட்டில் 2 லட்சத்து 10 ஆயிரம் இடங்கள் ஒதுக்கப்பட்டு இருக்கின்றன. இதற்காக தமிழகம்முழுவதும் கடந்த 21 நாட்களாக நடந்து வந்த விண்ணப்பங்கள் வினியோகிக்கும் பணி நேற்றுடன் முடிவடைந்தது. கடைசி நாளான நேற்று விண்ணப்பங்கள் விற்பனை எதிர்பார்த்தப்படி அதிகமாகவே இருந்தது. இதுவரை தமிழகம் முழுவதும் 1.88 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனைசெய்யப்பட்டுள்ளது. இதில் 1 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு மாணவர்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளது.
இதுகுறித்து என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் ரைமண்ட் உத்தரியராஜ் கூறியதாவது:-
ஜூலை 1-ந் தேதி பொது கலந்தாய்வு தமிழகத்தில் 59 மையங்களில் விண்ணப்பங்கள் வினியோகம் செய்யும் பணி நேற்றுடன் முடிவடைந்துள்ளது. சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டும் 29-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படும். இதுவரை (நேற்று மாலை 5.30 மணி வரை)1 லட்சத்து 88 ஆயிரத்து 504 விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 1 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து மாணவர்களுக்கான ரேண்டம் எண் ஜூன் 15-ந் தேதி ஒதுக்கப்படுகிறது. 19-ந் தேதி ரேங்க் பட்டியல் வெளியிடப்பட இருக்கிறது. இதில் விளையாட்டுத்துறை மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூன் 28-ந் தேதியும், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 29-ந் தேதியும் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. மாணவ-மாணவிகளுக்கான பொது கலந்தாய்வு ஜூலை 1-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை நடைபெறுகிறது.
சான்றிதழ் பெறுவதில் தாமதம் ஏற்பட்டால்...
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 29-ந் தேதிக்குள் மாணவர்கள் சமர்ப்பித்து விட வேண்டும். குடியிருப்பு சான்றிதழ், குடும்பத்தில் முதல் பட்டப்படிப்புக்கான சான்றிதழ் போன்ற சான்றிதழ்களை மாணவர்கள் பெறுவதில் தாமதம் ஏற்பட்டால், முதலில் தங்களிடம் உள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து 29-ந்தேதிக்குள் சமர்ப்பித்து விடலாம். பின்னர் உரிய சான்றிதழ்கள் கிடைத்ததும், அதன் நகலை விண்ணப்ப படிவத்தின் எண்ணை குறிப்பிட்டு செயலாளர், தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை, அண்ணா பல்கலைக்கழகம், சென்னை-600025 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். இதன் மூலம் மாணவர் சேர்க்கைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி