ஆய்வக உதவியாளர் பணிக்கான அறிவிப்பை ரத்து செய்யக்கோரி வழக்கு- தேர்வு நடைமுறையில் குழப்பம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 19, 2015

ஆய்வக உதவியாளர் பணிக்கான அறிவிப்பை ரத்து செய்யக்கோரி வழக்கு- தேர்வு நடைமுறையில் குழப்பம்!


தேர்வு நடைமுறையில் குழப்பம் இருப்பதாக கூறி ஆய்வக உதவியாளர் பணிக்கான அறிவிப்பை ரத்து செய்யக்கோரி தொடர்ந்த வழக்கில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர்பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

ஆய்வக உதவியாளர் பணி

நெல்லை பாளையங்கோட்டை காமராஜர்நகரை சேர்ந்தவர் ஆறுமுகராஜா. இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-

நான், 1976-ம் ஆண்டு மேல்நிலைக்கல்வி படிப்பை முடித்தேன். அதன்பின்பு, பட்டப்படிப்பை முடித்தேன். 1989-ம் ஆண்டு நெல்லை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளேன். தமிழகம் முழுவதும் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசு முடிவு செய்தது. அதன்படி, நெல்லை மாவட்டத்தில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி 21.4.2015 அன்று அறிவிப்பு வெளியிட்டார்.

எழுத்துத்தேர்வு

இந்த பணிக்கான எழுத்துத்தேர்வு வருகிற 31-ந் தேதி நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வில் 130 கேள்விகள் எஸ்.எஸ்.எல்.சி. பாடத்திட்டத்தில் இருந்தும், மீதமுள்ள 30 கேள்விகள் பொது அறிவு கேள்விகளாகவும் கேட்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த அறிவிப்பில், எஸ்.எஸ்.எல்.சி. பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்படுவதாக கூறப்படும் கேள்விகளை பொறுத்தமட்டில் தற்போதைய எஸ்.எஸ்.எல்.சி. பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்படுமா அல்லது பழைய எஸ்.எஸ்.எல்.சி. பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்படுமா என்பது குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

37 ஆண்டுகளாக காத்திருப்பு

புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்பட்டால் பழைய எஸ்.எஸ்.எல்.சி. பாடத்திட்டத்தின் கீழ் படித்தவர்கள், தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாது. நான், கடந்த 37 ஆண்டுகளாக அரசு வேலைகிடைக்காமல் காத்திருக்கிறேன். புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் தேர்வு நடத்தப்பட்டால் என்னை போன்று பழைய பாடத்திட்டத்தின் கீழ் எஸ்.எஸ்.எல்.சி. முடித்தவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போய்விடும்.எனவே, நெல்லை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப 21.4.2015 அன்று நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். பழைய எஸ்.எஸ்.எல்.சி., புதிய எஸ்.எஸ்.எல்.சி. பாடத்திட்டத்தின் அடிப்படையில் தனித்தனியாக கேள்வித்தாள் தயாரித்து எழுத்துத்தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

நோட்டீசு

இந்த மனு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் நெல்லை வக்கீல் வி.கண்ணன் ஆஜராகி வாதாடினார்.மனுவை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கு சம்பந்தமாக தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை செயலாளர், நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆகியோர் பதில் அளிக்க நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.

2 comments:

  1. hello sir... 1989 la irundhu govt job ku wait pannnnnnnnitttteeee irukinga... epo velaki povinga

    ReplyDelete
  2. பழைய பாடத்திட்டமாவது
    புதிய பாடத்திட்டமாவது.....

    நன்கு கடின உழைப்பில் படித்தால் மட்டும் தான் வேலைக்கு போக வேண்டும் என்ற உங்கள் திட்டம் வெற்றி பெறும்....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி