7.5 லட்சம் பிளஸ் 1, பிளஸ் 2 பாடப் புத்தகங்கள் புதிதாக அச்சடிக்க உத்தரவு: 'கலைஞர்' பெயரை அழிக்க ரூ.3 கோடி வீண் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 26, 2015

7.5 லட்சம் பிளஸ் 1, பிளஸ் 2 பாடப் புத்தகங்கள் புதிதாக அச்சடிக்க உத்தரவு: 'கலைஞர்' பெயரை அழிக்க ரூ.3 கோடி வீண்

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான வரலாறு மற்றும் பொருளாதார பாடப் புத்தகங்களில் முன்னாள் முதல்வர் மற்றும் பள்ளிக்கல்வி அமைச்சரின் பெயர்கள் இருந்ததால் அந்த புத்தகங்களுக்கு பதில் 7.5 லட்சம் புதிய புத்தகங்களை அச்சடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 2004-2005 கல்வி யாண்டில் திருத்தப்பட்டு அறிமுகப் படுத்தப்பட்ட மேல்நிலைப் பள்ளி பாடப் புத்தகங்கள் 2007-ல் சீரமைக்கப்பட்டன. அந்த ஆண்டு புதிய பாடத் திட்டம் அமலுக்கு வந்தது. பேராசிரியர் மு.நாகநாதன் தலைமையிலான பாடநூல் மேம்பாட்டுக் குழு புதிய பாடத் திட்டங்களை வகுத்தது.அதன் அடிப்படையில் புதிய பாடப் புத்தகங்கள் அச்சடிக் கப்பட்டன.

இதில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வரலாறு, பொருளாதாரம் பாடப் புத்தகங்களின் முகவுரை மற்றும் முன்னுரையில் ‘கல்வி வளர்ச்சியில் என்றும் தனிக்கவனம் செலுத்தும் மாண்புமிகு முதல்வர் கலைஞர் அவர்கள் உடனடியாக பாடப் புத்தகங்களை சீரமைப்பதற்கு மாநிலத் திட்டக்குழுத் தலைவர் அவர்கள் தலைமையில் ஒரு வல்லுநர் குழுவை அமைத்தார்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.மேலும், ‘இம்முயற்சிக்கு உறுதுணையாக இருந்து ஊக்குவித்த தமிழக முதல்வர் கலைஞர், மாண்புமிகு பள்ளிக் கல்வி அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு ஆகியோருக்கு எங்கள் நன்றியினைத் தெரிவித்துக் கொள் கிறோம்’ என்றும் குறிப்பிடப் பட்டிருந்தது. கடந்த 2012-ம் ஆண்டு இந்தப் புத்தகங்களின் மறு பதிப்பு அச்சுக்கு வந்தது. அப்போதும் அதே முகவுரை மற்றும் முன்னுரை தொடர்ந்தது. கடந்த ஆண்டுகளிலும் இதே புத்தகங்கள் தான் மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன.இந்நிலையில் இந்த ஆண்டு புத்தகங்கள் மீண்டும் மறு அச்சு செய்யப்பட்டு மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டது.அப்போது தான், புத்தகங்களின் முன்னுரை மற்றும் முகவுரையில் முன்னாள் முதல்வர் மற்றும் பள்ளிக்கல்வி அமைச்சரின் பெயர்கள் இடம் பெற்றிருப்பது குறித்து கல்வித் துறைக்கு தகவல் சென்றது.

உடனடியாக பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு வரலாறு, பொரு ளாதாரம் ஆகிய பாடங்களில் ஆங்கிலம், தமிழ் ஆகிய இருமொழி புத்தகங்களும் விநியோகிப்பது நிறுத்தப்பட்டது. ஏற்கெனவே வாங்கிய மாணவர் களிடம் இருந்தும் புத்தகங்கள் திரும்ப பெறப்பட்டன.இதுகுறித்து ‘தி இந்து’விடம் கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: பிளஸ் 1மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொருளாதாரம், வரலாறு புத்தகங்களை அச்சடிப் பதற்காக சென்னை, சிவகாசி, திருநெல்வேலி ஆகிய ஊர்களைச் சேர்ந்த 40 அச்சகங்களுக்கு கடந்த ஜூன் 19-ம் தேதி ஆர்டர் அளிக்கப்பட்டுள்ளது. 24, 25 ஆகிய தேதிகளுக்குள் அவர்கள் புத்தகங்களை அச்சடித்து தர வேண்டும். ஆனால், இதுவரை (ஜூன் 25-ம் தேதி மதியம் வரை) புத்தகங்கள் வந்து சேரவில்லை.பிளஸ் 1 வகுப்பு புத்தகங் களுக்கு 109 டன் பேப்பர் தேவைப் படுகிறது. ஒரு டன் பேப்பருக்கு தமிழ்நாடு பாடநூல் கழகம் ரூ.50 ஆயிரம் செலுத்துகிறது. தவிர, அச்சுக் கூலியாக ரூ. 4 லட்சம். 12-ம் வகுப்பு புத்தகங்களுக்கு 125 டன் பேப்பர் தேவைப்படுகிறது.

இதற்கும் ஒரு டன் பேப்பருக்கு ரூ.50 ஆயிரம் செலுத்துகிறது பாடநூல் கழகம். அச்சுக்கூலி ரூ. 9 லட்சம். இந்த வகையில் மொத்தம் ரூ. 1 கோடியே 30 லட்சம் செலவாகிறது. ஏற்கெனவே அச்சடிக்கப்பட்ட புத்தகங்களை அழிக்கும் வகையில் இதே அளவில் நஷ்டம் ஏற்படுகிறது. இதனால் சுமார் ரூ.3 கோடியை அதிகாரிகள் வீண் செய்கின்றனர்.ஒருவேளை அதிகாரி களுக்கு அரசியல் நிர்பந்தம் இருந்திருந்தால் அந்த புத்தகங் களை வாங்கி இரு பக்கங்களை மட்டும் கிழித்திருக்கலாம். இப்போது புதியதாக அச்சடிக்க வீண் செலவு செய்கின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

2 comments:

  1. We are losing your money through these kind of activities

    ReplyDelete
  2. We are losing our money through these kind of activities

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி