பெற்றோர், மாணவர்களை ஈர்க்கும் வகையில் உடுமலையில் கூடுதல் வசதிகளுடன் ‘ஹைடெக்’அரசுப் பள்ளி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 7, 2015

பெற்றோர், மாணவர்களை ஈர்க்கும் வகையில் உடுமலையில் கூடுதல் வசதிகளுடன் ‘ஹைடெக்’அரசுப் பள்ளி

பெற்றோர், மாணவர்களை ஈர்க்கும் வகையில் உடுமலையில் பழமை வாய்ந்த அரசுப் பள்ளி, ‘ஹைடெக்’ பள்ளியாக மாற்றப்பட்டுள்ளது.

உடுமலை - திருப்பூர் சாலை சின்னவீரம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது 90ஆண்டுகள் பழமை வாயந்த அரசு நடுநிலைப் பள்ளி.
தனியார் பள்ளிகள் மீதான மோகம்கிராம மக்களிடையே ஏற்பட்டு வருவதை உணர்ந்து, இப்பள்ளியின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பள்ளியின் மாணவர் சங்க முன்னாள் தலைவர் கே.சோமசுந்தரம் கூறியதாவது:

மாணவர் சங்க முன்னாள் நிர்வாகிகள், உறுப்பினர்கள், பெற்றோர்கள் ஆதரவுடன் மழலையர் (எல்.கேஜி., யு.கே.ஜி.) வகுப்புகளை தொடங்கியுள்ளோம். 60 குழந்தைகள் படிக்கின்றனர். அவர்களுக்கான புத்தகங்கள், நோட்டுகள் பெற்றோரையும், ஆசிரியர்களுக்கான சம்பளம் சங்கத்தையும் சேர்ந்தது. அங்கன் வாடி மையமும் உள்ளது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், அருகே உள்ள கிராமங்களில் இருந்தும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சேர்த்து வருகின்றனர்.குழந்தைகளை கவனித்துக்கொள்ள ஆயா, காவலாளி மற்றும் ஆசிரியர் கல்வி பயின்ற பட்டதாரிகளை, கூடுதல் ஆசிரியர்களாக நியமித்துள்ளோம்.

பாதுகாப்பான குடிநீர் வசதி, விளையாட்டு மைதானம், தூய்மையான வகுப்பறைகள், சூழல் நிறைவு செய்யும் மரங்கள், மூலிகைச் செடிகள், கலையரங்கம், வாலிபால், டென்னிஸ் விளையாட வசதி, கம்ப்யூட்டர் வசதி, இணைய உதவியுடன் அகன்ற திரையில்அறிவியல், கணினி பாடங்கள், ஆங்கிலப் பேச்சாற்றல், பொது அறிவுக்கு சிறப்புப்பயிற்சிகள், கராத்தே, யோகா, நடனம், சிலம்பம், பேண்டு வாத்தியக்குழு என பல்வேறு கூடுதல் வசதிகளுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
பள்ளித் தலைமையாசிரியர் நா.இன்பக்கனி கூறும்போது, “இதனை நான் உட்பட என்னுடன் பணிபுரியும் ஆசிரியர்களின் முழு ஆதரவுடன் செயல்படுத்தி வருகிறோம். மாவட்ட அளவில் சிறந்த பள்ளியாக விருது பெற்றுள்ளோம். மாவட்ட ஆட்சியர் உட்பட பல்வேறு அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.

முன்னாள் மாணவர் சங்கத்தின் உதவியால், இப்பள்ளி பிற அரசுப் பள்ளிகளுக்கு முன்மாதிரியாக இருக்கிறது” என்றார்.கல்வித் துறையின் சிறப்பு அனுமதியின்பேரில், 1 முதல் 3-ம் வகுப்பு வரை ஆங்கில வழி வகுப்பும் நடைபெறும் இப் பள்ளியில், தற்போது 200 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். கடந்த ஆண்டைவிட, நடப்பு ஆண்டு மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.பெரும்பாலானவர்கள் ஏழை குழந்தைகள் என்பதால், சேவை மனப்பான்மையுடன் கே.மணி மாறன் (கராத்தே), கமலா ஸ்ரீனிவாசன் (நடனம்), செந்தில் குமார் (சிலம்பம்),ராஜேஸ்வரி (யோகா) ஆகியோர் சிறப்புப் பயிற்சி அளித்து வருகின்றனர். இதுமட்டுமின்றி வாரந்தோறும் நீதி போதனை, திருவாசகம் ஆகிய சொற்பொழிவுகளும் நடைபெறுகின்றன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி