கல்லூரிக்குச் செல்லாமலேயே பெறப்படும் பி.எட். பட்டம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 22, 2015

கல்லூரிக்குச் செல்லாமலேயே பெறப்படும் பி.எட். பட்டம்!

ஆசிரியர் கல்வியியல் பட்டப் படிப்பான பி.எட். படிப்பை பலர் கல்லூரிக்குச் செல்லாமலேயே பெறுவதாகவும், இந்த நிலை இப்போது மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கல்வியாளர்கள் கவலை தெரிவித்தனர். இதைத் தடுத்து தரமான ஆசிரியர்கள் உருவாக, சுயநிதி கல்லூரிகளில் தீவிர கண்காணிப்பை அமல்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.


தமிழகம் முழுவதும் 600-க்கும் அதிகமான ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 21 அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளைத் தவிர மற்ற அனைத்தும் சுயநிதி ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகள்.இந்த சுயநிதி கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களில் சிலர் கல்லூரிக்கே வராமல் பட்டம் பெறுவதாக புகார்கள் எழுந்துள்ளன.கடந்த ஆண்டு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் நடத்திய திடீர் ஆய்வில், வெளிநாட்டில் இருந்தபடி, இங்குள்ள சுயநிதி கல்லூரியில் மாணவர் ஒருவர் பி.எட். படித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இப்போது, நிகழாண்டில் படிப்புக் காலம் 2 ஆண்டுகளாக உயர்வதால் கல்லூரிக்கு வராமல் பட்டம் பெறுபவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது எனவும் கல்வியாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.


இதுகுறித்து தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க பொதுச் செயலாளர் சாமி.சத்தியமூர்த்தி கூறியதாவது:சுயநிதி கல்வியியல் கல்லூரிகளில் பி.எட். சேருபவர்களிடம் வசூலிக்கப்பட வேண்டிய கல்விக் கட்டணமாக ரூ. 47,500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பல கல்லூரிகள் இந்தக் கட்டணத்தை ரூ. 65,000 ஆக வசூலித்து வருகின்றன.அதே நேரம், பல்வேறு காரணங்களால் கல்லூரிக்கு தினமும் வர முடியாது என்கிற நிலையில் உள்ள மாணவர்களுக்கு சில சுயநிதி கல்லூரிகள் சலுகைகளை அளித்து வருகின்றன. அதாவது ரூ. 10 ஆயிரம் கூடுதலாக ரூ. 75,000 கல்விக் கட்டணத்தை செலுத்திவிட்டால் போதுமானது. கல்லூரிக்கே வரத் தேவையில்லை. தேர்வு நேரத்துக்கு அல்லது கல்லூரி அழைக்கின்றபோது வந்தால் போதும் என்ற நிலை வெளிப்படையாகவே நடைபெற்று வருகிறது.இப்போது பி.எட். படிப்புக் காலம் இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்படுவதால், இந்த நிலை மேலும் அதிகரிக்கவாய்ப்பு உள்ளது. எனவே, தமிழக அரசும், ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகமும் தீவிர கண்காணிப்பை அமல்படுத்த வேண்டும்.அப்போதுதான் தரமான ஆசிரியர்கள் உருவாக வாய்ப்பு அமையும் என்றார் அவர்.


இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஜி. விஸ்வநாதன் கூறியதாவது:சுயநிதி கல்வியியல் கல்லூரிகள் சிலவற்றில், இதுபோல் மாணவர்கள் கல்லூரிக்கே வராமல் பி.எட். படிப்பைமேற்கொள்வது உண்மைதான்.இதைக் கட்டுப்படுத்த புதிய நடைமுறையை பல்கலைக்கழகம் அறிமுகம் செய்தது. அதாவது, அனைத்து கல்லூரிகளும் மாணவர் தினசரி வருகைப் பதிவேட்டை பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும் என உத்தரவிட்டோம். அதனடிப்படையில் இங்கொன்றும், அங்கொன்றுமாக ஏதாவது ஒரு கல்லூரியை தெரிவு செய்து பல்கலைக்கழக அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்யும் நடைமுறை அமல்படுத்தப்பட்டது.இந்த நடவடிக்கை மூலம் பல கல்லூரிகள் பிடிபட்டன.


சென்னைக்கு அருகே உள்ள ஒரு கல்லூரியில் மாணவர் ஒருவர் வெளிநாட்டில் இருந்தபடி பி.எட். படித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.கடந்த 2014-ஆம் ஆண்டில் மட்டும் 15 கல்லூரிகள் இந்த சர்ச்சையில் சிக்கின. அந்தக் கல்லூரிகள் மீது பல்கலைக்கழகமும், தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சிலும் (என்சிடிஇ) நடவடிக்கை மேற்கொண்டது.இந்த திடீர் ஆய்வு, தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற முறைகேடுகளை தடுக்க முடியும் என்றார்.

6 comments:

  1. சில கல்லூரிகள் என்று கூறுவது தவறு தமிழ் நாட்டில் பல கல்லூரிகள் பல மாணவர்கள் கல்லூரிகே செல்வது இல்லை.தேர்வுக்கு மட்டுமே செல்கின்றனர், கடந்த 5 ஆண்டுகளில் பலர் ஆயிரம் பேர் இந்த முறையில் தான் பட்டம் பெற்று உள்ளனர்.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. Pavan VC onrum ariyathavar...evarelam our kalviyalar...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி