தவறுதலாக எம்.பி.பி.எஸ் இடத்தை ஒப்படைத்த மாணவிக்கு சேர்க்கை வழங்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 21, 2015

தவறுதலாக எம்.பி.பி.எஸ் இடத்தை ஒப்படைத்த மாணவிக்கு சேர்க்கை வழங்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். இடத்தை தவறுதலாக ஒப்படைத்த மாணவிக்கு அதே கல்லூரியில் சேர்க்கை வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக அப்சரா என்ற மாணவி தாக்கல் செய்த மனு விவரம்:-


எனது சொந்த ஊர் கேரள மாநிலம் பாலக்காடு ஆகும். எனக்கு அகில இந்திய ஒதுக்கீட்டில் தேனி மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. அந்த மருத்துவக் கல்லூரி டீன் எனக்கு சேர்க்கை வழங்கினார்.அப்போது, இரண்டாவது, மூன்றாவது கட்ட கலந்தாய்வில் பங்கேற்க எனக்கு விருப்பமுள்ளதா என என்னிடம் கேட்கப்பட்டது. அதற்கு விருப்பமுள்ளதாக நானும் பதிலளித்தேன்.மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கான கட்டணத்தை ஆகஸ்ட் 26-ஆம் தேதி செலுத்திய பிறகு, அந்தக் கல்லூரியில் சேர்க்கை வழங்கப்பட்டது.இந்த நிலையில், அடுத்தக்கட்ட கலந்தாய்வுகளில் பங்கேற்க விருப்பம் தெரிவித்ததை ரத்து செய்ய விரும்பினேன். கம்ப்யூட்டரில் அதைச் செய்துகொண்டிருந்த நிலையில், இயற்கை உபாதையைக் கழிப்பதற்காக வெளியில் சென்று வந்தேன். அப்போது, எனது சகோதரி தவறுதலாக எம்.பி.பி.எஸ். இடத்தை ஒப்படைக்கும் பட்டனை கிளிக் செய்துள்ளார். இது எனக்கு தெரியாது.மருத்துவக் கல்லூரி, விடுதிகளில் சேருவதற்காக செப்டம்பர் 3-ஆம் தேதி தேனிக்குச் சென்றபோது, எனது இடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இது எனக்கும், எனது குடும்பத்தாருக்கும் அதிர்ச்சி அளித்தது.அந்த இடம் இப்போது 2-ஆம் கட்ட கலந்தாய்வுக்கு வழங்கப்பட்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறியாமையால் திரும்ப ஒப்படைக்கப்பட்ட எம்பிபிஎஸ் இடத்தை எனக்கு மீண்டும் வழங்க வேண்டும் என்று கூறிமத்திய சுகாதாரத் துறை டைரக்டர் ஜெனரலுக்கு இமெயில் அனுப்பினேன்.ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அகில இந்திய அளவில் மூன்றாவது கட்ட கலந்தாய்வு செப்டம்பர் 9-ஆம் தேதி நடைபெற உள்ளது. எனவே, இந்த இடத்தை மீண்டும் எனக்கு வழங்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரினார்.


இந்த மனு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.அப்போது, அகில இந்திய அளவில் நடைபெற உள்ள மூன்றாவது கட்ட கலந்தாய்வில் இந்த மாணவிக்கு ஒரு இடத்தை காலியாக வைத்திருக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். இது தொடர்பாக, அரசின் கருத்தறிந்து நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு அரசு வழக்குரைஞருக்கும் அவர் உத்தரவிட்டார்.இந்த மாணவி மூன்றாம் கட்ட கலந்தாய்வில் பங்கேற்க தடையில்லை என்றும், அவருக்கு வழங்கப்பட்ட எம்.பி.பி.எஸ். இடம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்குச் சென்றுவிட்டதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.அதற்கு, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், கலந்தாய்வில் பங்கேற்று இடத்தையும் மனுதாரர் ஏற்கெனவே தேர்வு செய்துவிட்டார்.


அதோடு, அந்தக் கல்லூரியில் சேர்வதற்கான கட்டணத்தையும் செலுத்திவிட்டதால், அவர் அந்தக் கல்லூரியின் மாணவியாகிவிட்டார். எனவே, அவர் விரும்பினாலும் கூட அந்த இடத்தை ஒப்படைப்பது தொடர்பான கேள்வியே எழவில்லை என வாதிட்டார்.விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:மனுதாரருடைய வழக்குரைஞரின் வாதத்தில் நியாயம் இருப்பதாக நீதிமன்றம் கருதுகிறது. மனுதாரரிடம் கட்டணத்தைப் பெற்றுக்கொண்டு, மாணவியாகச் சேர்த்துக்கொண்ட பிறகு, தொழில்நுட்ப காரணங்களுக்காக அவரை தண்டிக்கக் கூடாது.எம்.பி.பி.எஸ். படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான ஆன்-லைன் முறை இந்த ஆண்டுதான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, அதைப் புரிந்துகொள்வதில் மாணவிக்கு சிரமங்கள் இருந்திருக்காலம்.


தேனி மருத்துவக் கல்லூரியில் அவரிடம் சேர்க்கைக் கட்டணம் பெறப்பட்டுள்ளது. இந்த நிலையில், அவரை மீண்டும் கலந்தாய்வில் பங்கேற்குமாறு அறிவுறுத்த நீதிமன்றம் விரும்பவில்லை.மனுதாரரை கல்லூரியில் சேர்க்கப்பட்ட மாணவியாகக் கருத வேண்டும். மாணவி சேர்க்கப்பட்ட பிறகு அந்த இடத்தை காலியிடமாகக் கருதி, அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்க முடியாது என நீதிபதி தனது உத்தரவில்தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி