உடற்கல்வி ஆசிரியர் பற்றாக்குறை: 13 வகை விளையாட்டுகள் மாயம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 28, 2015

உடற்கல்வி ஆசிரியர் பற்றாக்குறை: 13 வகை விளையாட்டுகள் மாயம்.

அரசு பள்ளிகளில் தொடரும், உடற்கல்வி ஆசிரியர்கள் பற்றாக்குறையால், கடந்த கல்வியாண்டு துவக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட, 13 வகையான விளையாட்டுகள் காணாமல் போனதாகவும், மாணவர்களின் திறமைகளை முடக்கப்படுவதாகவும் விளையாட்டு ஆர்வலர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.


தமிழகத்தில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான தடகள போட்டிகள் கடந்த வாரம் கோவையில் நடந்து முடிந்தது.மாவட்ட, மண்டல அளவில் வெற்றி பெற்ற, 2,300 மாணவர்கள் இப்போட்டிகளில் பங்கேற்றனர். 86 பிரிவுகளில், இம்மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டன. நடந்து முடிந்த போட்டிகளில், 90 சதவீத வெற்றியை தனியார் பள்ளி மாணவர்களே தட்டிச்சென்றுள்ளனர். திறமைகள் இருந்தும் போதிய பயிற்சிகள் இன்மையால், பல அரசு பள்ளி மாணவர்கள் பின்னுக்கு தள்ளப்பட்டனர். அரசு பள்ளி மாணவர்களின் பங்கேற்பும் மிகவும் குறைந்த அளவே இருந்தது. மேலும், கால்பந்து, கூடைப்பந்து, ஹாக்கி, கிரிக்கெட் உள்ளிட்ட குழு விளையாட்டுகளை பொறுத்தவரை, 80 சதவீத அரசு பள்ளிகளில் பெயரளவில் கூட, அணிகளே இல்லை என்பது அவலத்தின் உச்சம். இதே சூழல், ஒவ்வொரு ஆண்டும் தொடர் கதையாக இருந்தும், அதிகாரிகள் போதிய கவனம் செலுத்த முன்வரவில்லை. அரசு பள்ளிகளில்,உடற்கல்வி ஆசிரியர்கள், பிரத்யேக பயிற்சியாளர்கள் இன்மையால், மாணவர்களின் திறமைகள் பள்ளியோடு, முடக்கப்படுகிறது.


உதாரணமாக, கடந்த கல்வியாண்டின் துவக்கத்தில், அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்காக, ஜிம்னாஸ்டிக், குத்துச்சண்டை, ஜூடோ, பென்சிங், சைக்கிளிங் உள்ளிட்ட, 13 வகையான புதிய விளையாட்டுகளை அறிமுகம்செய்து பயிற்சிகள் வழங்க உத்தரவிடப்பட்டது. ஆனால், இதுவரை எவ்வகை பயிற்சிகளும் வழங்கப்படவில்லை. விளையாட்டு ஆர்வலர் மற்றும் கால்பந்து பயிற்சியாளர் ராஜா கூறுகையில், ''விளையாட்டு போட்டிகளில் அரசு பள்ளிகளின் பங்களிப்பு என்பது பெயரளவில் உள்ளது. தனியார் பள்ளி மாணவர்கள் ஒவ்வொரு போட்டிகளுக்கும் தனிப்பட்ட, பிரத்யேக பயிற்சியாளர்களிடம் பயிற்சி பெறுகின்றனர்.


''போதிய பயிற்சி அளிக்க ஆளில்லாமல், அரசு பள்ளி மாணவர்களின் திறமைகள் முடக்கப்படுகின்றன. கடந்த ஆண்டுகளில், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட, 13 விளையாட்டுகள் தற்போது செயல்பாட்டில் இல்லை. பல பள்ளிகளில் மைதான வசதிகளே இல்லாமல் உள்ளது. அரசு பள்ளி மாணவர்களின் நலன் கருதி, உடற்கல்வி ஆசிரியர்பணியிடங்களை நிரப்புவதோடு, பயிற்சியாளர்களையும் பணியமர்த்த வேண்டும்,'' என்றார்.

1 comment:

  1. உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் போதியஅளவு இல்லாத நிலையில் நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவு போட்டிகளுக்கு அனுமதி,விளையாட்டிடம், விளையாட்டு சாமான்கள் ஏதும் இல்லாத நிலையில் உடற்கல்வி ஆசிரியர்கள் பெயரளவில் இருக்கக்கூடிய நிலைதான் நிலவுகிறது. உயர்நிலைப் பள்ளி காலிப்பணியிடங்களுக்கு நடுநிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர்களுக்கு மாறுதல் வழங்க மறுக்கப்படுகிறது.
    இதுசார்ந்த பதிவுகள் செய்து ஏதேனும் மமாற்றம் நிகழுமா என்ற ஏக்கத்தில் நான். நன்றி.
    N. SENTHILKUMAR PHYSICAL EDUCATION TEACHER.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி