தொழிற்சாலைகள் மிகவும் குறைவாக இருப்பதால் தமிழகத்தில் வேலை வாய்ப்பைவிட படித்தவர்கள் அதிகம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 27, 2015

தொழிற்சாலைகள் மிகவும் குறைவாக இருப்பதால் தமிழகத்தில் வேலை வாய்ப்பைவிட படித்தவர்கள் அதிகம்

தமிழகத்தில் வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கும் இளைஞர்களில் 90 சதவீதம்பேர் படித்தவர்கள் என்ற அதிர்ச்சி புள்ளிவிவரங்கள் வெளிவந்துள்ளன. நாட்டில் வேலையில்லா பட்டதாரிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் மக்கள் தொகையான 7.21 கோடியில் 4.5 சதவீதம்பேர் படித்துவிட்டு வேலையில்லாமல் உள்ளனர். 

சென்னை மக்கள் தொகையான 46 லட்சத்து 47 ஆயிரம் பேரில் 6.1 சதவீதம்பேர் வேலையில்லாமல் இருக்கும் படித்தவர்கள். இந்த சதவீதம் கோவையில் 3.6 சதவீதமாகவும், மதுரையில் 4.5 சதவீதமாகவும், திருச்சியில் 4.2 சதவீதமாகவும் உள்ளது. இந்த கணக்கில் தினக்கூலி மற்றும் சிறிய நிறுவனங்களில் பணியாற்றும் படித்தவர்கள் இல்லை. படித்துவிட்டு வேலைக்காக காத்திருப்பவர்கள் மட்டுமே இதில் வருகிறார்கள்.இவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வேலை வாய்ப்புகளைத் தரக்கூடிய தொழிற்சாலைகளும், நிறுவனங்களும் தமிழ்நாட்டில் குறைவாகவே உள்ளன.


வேலை வாய்ப்புக்காக காத்திருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் உயர் கல்வி கற்றவர்கள் என்றும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.இது தொடர்பாக மெட்ராஸ் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் கல்வி மையத்தின் கவுரவ பேராசிரியர் ஒருவர் கூறும்போது, கடந்த 2001ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் கூறப்பட்டுள்ள வேலையில்லா பட்டதாரிகளின் எண்ணிக்கை தற்போது மிகவும் அதிகரித்துள்ளது.நாட்டில் உள்ள பொறியியல் பட்டதாரிகளில் 40 சதவீதம்பேர் தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இவர்களில் 15 சதவீதம்பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கி வருகின்றன. மீதமுள்ளவர்கள் படிப்புக்கு ஏற்ற வேலையைத் தேடி தொடர்ந்து காத்திருக்கிறார்கள் என்றார்.


ஒட்டுமொத்தமாக கணக்கிட்டால் காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க தொழிற்சாலைகள் போதிய எண்ணிக்கையில் இல்லை என்பதுதாம். இன்னும் பத்து ஆண்டுகளில் படித்தவர்களின் நிலை மிகவும் பரிதாபமாக இருக்கும் என்று கல்வியாளர்கள் கூறுகிறார்கள். இவர்களுக்கு உரிய பணியிடங்களைத் தரவேண்டுமானால் தொழிற்சாலைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். சுயதொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகளை மத்திய மாநில அரசுகள் உருவாக்க வேண்டும். தொழில் தொடங்குவதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும் என்று பட்டதாரி இளைஞர்கள் கோரிக்கைவிடுத்து வருகிறார்கள். 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி