Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jun 6, 2016

அரசுப் தொடக்கப்பள்ளியில் அட்மிஷனுக்கு அடிதடி நடந்து யாராவது பாத்திருக்கீங்களா? அட்மிஷனுக்காக அலைமோதும் கூட்டம்!

காலை ஐந்து மணியிலிருந்து லைன்ல குடும்பத்தோட வந்து தேவுடு காத்து நின்னாலும், பியூனிலிருந்து பிரின்சிபல் வரை சரிக்கட்டி வச்சாலும், பல லட்சங்களை அப்டி..யே அள்ளிக்கொடுக்கத் தயாரா இருந்தாலும், 'ரெக்கமண்டேஷன் எதும் இருக்கா...?' னு கேட்பாங்க. எதுக்கு...?மூணு வயசு குழந்தைய ‘இன்டெர்நேஷனல்’ ஸ்கூலில் எல்.கே.ஜிசேர்க்க. ஆனா எங்கேயாவது அரசு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் அட்மிஷனுக்கு அடிதடி நடந்து யாராவது பாத்திருக்கீங்களா?

ஒரு கிராமத்தின் அரசுப் பள்ளியில் அட்மிஷனுக்கு மக்கள் அலைமோதிய கண்கொள்ளாக் காட்சி நடந்தேறிய இடம், மதுரை யானைமலை ஒத்தக்கடையில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி. 1933 ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ஊராட்சி பள்ளிதான், மதுரை மாவட்டத்தின் முதல் பெரிய தொடக்கப்பள்ளி. நகர வாடை வீசாத கிராமப்பகுதி. சுற்றுவட்டாரத்திலுள்ள பதினெட்டுப் பட்டிக்கும் இதாங்க ஒரே பள்ளி. இங்கதான் 2016-2017 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு அலைமோதிய கூட்டத்தால் அந்த ஏரியாவே திணறிப்போனது. இந்த ஒரு அரசுப் பள்ளியால், அப்பகுதியிலுள்ள எட்டு தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் வெகுவாக மாணவர் சேர்க்கை குறைந்து, ஒருபள் ளியையும் இழுத்து மூடிவிட்டனராம்.

இப்படி போட்டிப்போட்டு இன்றைய தேதி வரை கூட தொடர்ந்து அட்மிஷன் நடைபெற்று வரும் அந்த ஊராட்சிப் பள்ளியின் ஸ்பெஷாலிட்டி என்ன என விசாரித்தோம்.ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரையுள்ள இப்பள்ளியில், 500 மாணவ-மாணவியர் பயில்கின்றனர். தலைசிறந்த ஆசிரியர்கள், சிறந்த உட்கட்டமைப்பு வசதி, கணினி மயமாக்கப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறை, ஃபேவர் ப்ளாக் அமைக்கப்பட்ட வளாகம் மற்றும் சிறந்த சுகாதாரம் நிறைந்ததாகக் காணப்படும் இப்பள்ளியின் பெரிய பலமே, அங்கு பயிலும் மாணவர்களும் அவர்களது பெற்றோர்களுமே எனக் கூறுகிறார் இப்பள்ளியின் தலைமையாசிரியர் தென்னவன். மேலும் அவர், " 2010ம் ஆண்டு இந்த ஊராட்சி பள்ளியில் நான்  வந்து சேர்ந்த சமயம் இப்பள்ளியின் மாணவர் எண்ணிக்கை வெகு குறைவாக இருந்தது.'எவ்வித அடிப்படை வசதியும் இல்லாமல் இருப்பது பெரும்குறை' என ஆசிரியர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து ஒவ்வொன்றாகச் சரிசெய்வது என முடிவெடுத்தோம். முதற்கட்டமாக சுகாதாரத்தை ஏற்படுத்த' பள்ளி வளாகத்தில் 10 லட்சம் ரூபாய் செலவில் ஃபேவர் ப்ளாக் அமைக்கப்பட்டது. பின்னர் சிறந்த கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தினோம். பள்ளியின் கட்டமைப்பை சரி செய்த பின்னர், ஊர் ஊராக, தெருத் தெருவாக சென்று மாணவர்களை பள்ளியில் சேர்ப்பதன் அவசிய த்தை எடுத்துக்கூறி, நாங்கள் ஆசிரியர்கள் அனைவரும் பிரசாரம் செய்தோம். துளி அளவும் பயனில்லை. மனம் தளராமல் எங்கள் பள்ளியில் பயின்றுகொண்டிருந்த மாணவர்களின் ஆற்றல்களைக் கண்டறிந்து வெளிக்கொணர ஆரம்பித்தோம். வகுப்பறை செயல்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன.

 மாணவர்களின் சிறந்த ஒத்துழைப்பால் மதுரை ஊராட்சிப் பள்ளிகளிலே முதன்முறையாக “திறமை திருவிழா” (வழக்கமான ஆண்டுவிழா போல் இல்லாமல்) என்றதொரு விழா நடத்தி, ஒட்டுமொத்த கிராமத்தையும் அசரடித்துவிட்டனர் எங்கள் மாணவர்கள். அதுதான் எங்கள் முதலும் பெரிய வெற்றியுமாக அமைந்தது. வெறும் பிரச்சார வார்த்தைகளால் சாதிக்க முடியாததை செயலால் சாதித்துக் காட்டினோம். ‘நம்ம வீட்டுப் பிள்ளையும் இப்படித்தானே படிச்சா திறமையா வருவான்’ என்ற கிராமத்துப் பெற்றோர்களின் நம்பிக்கைதான் எங்கள் பள்ளிக்குக் கிடைத்த பெரிய விருது. அதன் பலன் மாணவர் சேர்க்கையில் வெளிப்பட்டது. கிராமப்பகுதி மாணவர்களுக்கு சிறந்த கல்வி கிடைக்கணும் என்பது மட்டுமே குறிக்கோள்" என்றார்.இப்பள்ளியினர் அரசாங்கத்தின் எவ்வித உதவியும் இன்றி, கணினிகள் நிறைந்த ஒரு ஸ்மார்ட் க்ளாஸ் ரூமை பொதுமக்கள் உதவியுடன் அமைத்திருக்கிறார்கள். அரசுப்பள்ளிகளுக்கான திட்டங்களை எல்லாம் முழுமையாகப் பயன்படுத்தி, மாணவர்களுக்கான நாற்காலி, மேசைகள் வாங்கிப்போட்டுள்ளனர். ஆசிரியர்களே ஒன்று சேர்ந்து பள்ளிக்கு துப்புரவு தொழிலாளர்களை அமைத்திருக்கிறார்கள்.

கிராமத்து மக்களில் 100 பேர் தன்னார்வத்துடன் இணைந்து, தலைக்கு 1000 ரூபாய் வசூலித்து ஒரு லட்ச ரூபாயை பள்ளியின் பெயரில் வங்கியில் டெபாசிட் செய்திருக்கிறார்கள். இதன்மூலம் வரும் வட்டியிலிருந்துதான் பள்ளியின் மின்கட்டணம், துப்புரவு தொழிலாளருக்கான சம்பளம் எல்லாம் அடங்கும்.இவை தவிர, மாணவர்களின் தலைமைப்பண்பினை வளர்க்க ஸ்கூல் பார்லிமெண்ட், லீடர்ஷிப் கேம்ப், கற்பனைத் திறன்களை வளர்க்க தமிழ்நாட்டின் சிறந்த கதைச் சொல்லிகளை எல்லாம் வரவழைத்து நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளனர். ஐந்தாம் வகுப்புவரையுள்ள தொடக்கப்பள்ளிதான். ஆனால் இங்குள்ள மாணவ-மாணவியருக்கு கைத்தொழில் கற்றுத்தரப்படுகிறது. இப்பள்ளியின் மாணவர் ஒருவர் சன் சிங்கரில் பாடகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். மேலும் இப்பள்ளி மாணவர்கள் போட்டோ ஷாப், ஃப்ளெக்ஸ் டிசைனிங், போட்டோ ஆல்பம், மேக்கிங் என ட்ரெண்டிங்கில் போய்க்கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் இப்ள்ளியின் சிறப்பை அறிந்து பல்வேறு சங்கங்கள், தன்னார்வ அமைப்புகள், தனியார் தொழிற் நிறுவனங்கள் என பலரும் தற்போது உதவ முன்வந்துள்ளனர். தமிழக அரசுப் பள்ளிகளிலேயே அதிக மாணவர் சேர்க்கை நடைப்பெற்ற ஊராட்சிப் பள்ளியாக விளங்கும் இந்தத் தொடக்கப்பள்ளி, தமிழகத்தின் தலைச்சிறந்த அரசுப் பள்ளியாக உயர வேண்டும் என்ற முயற்சியில் செயல்பட்டு வருகின்றனர். முன்மாதிரிப் பள்ளிக்கு வாழ்த்துகள்.

5 comments :

 1. MPC TRB coaching center ERODE
  Starts new batch for PG TRB (Mathematics only) from June 3rd week onwords
  Place: 5 KM from erode bus stand Thannerpandalpalayam
  Contact: 9842771667, 9042071667
  " Study material available"

  ReplyDelete
 2. கூட்டு முயற்சிக்கு வித்திட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் தலைமையாசிரியர் அவர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

  ReplyDelete
 3. அனைத்து ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. கூட்டு முயற்சிக்கு வித்திட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் தலைமையாசிரியர் அவர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

  ReplyDelete
 5. வாழ்த்துக்கள்.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி