sura books

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

kalviseithi visitors...

Jun 22, 2016

யாரெல்லாம் நல்லாசிரியர் விருதுக்கு தகுதியானவர்கள்?

1958-59 முதல், சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கான தேசிய விருது வழங்கப்பட்டு வருகிறது. டாக்டர் ராதாகிருஷ்ணன் இறந்த வருடத்திற்கு அடுத்தவருடம்... அதாவது 1976 -ம் ஆண்டு, அவர் பிறந்த தினமான செப்டம்பர் -5 முதல் தமிழ்நாட்டில், சிறப்பாக கற்றலை மேம்படுத்திவரும் ஆசிரியர்களுக்காக நல்லாசிரியர் விருது, டாக்டர் ராதாகிருஷ்ணன்  பெயரால் வழங்கப்பட்டு வருகிறது. 2007 முதல் 374- விருதுகள் பள்ளிப் பிரிவுகளைப் பொருத்து பிரித்து வழங்கப்பட்டுள்ளன.

 இதில், CBSE, CISCE, UT (யூனியன் பிரதேசங்கள்), ஐ.ஈ (Integrated Inclusive Education) உட்பட வருடா வருடம் இந்த பெருமைக்குரிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.10 முதல் 15 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர், 20 வருடங்கள்  ஆசிரியர் பணியில் இருந்து தலைமையாசிரியராக இருந்து வருபவர் என ஒவ்வொருக்கும் அவர்களின் செயல்பாடுகளைப் பொறுத்து இந்த விருதானது வழங்கப்பட்டு வருகிறது. தாய், தந்தையருக்குப் பிறகு உயர்ந்த இடத்தில் வைத்துப் பார்க்கப்படும் ஆசிரியர்கள் பலர், டியூசன் சென்டர்களை வைத்து சம்பாதிப்பதால் அவர்களுக்கு இந்த உயரிய விருதானது சென்றடையக் கூடாது என்பதற்காக, 'ஆசிரியர்கள் இனி டியூஷன் எடுத்தால் நல்லாசியர் விருது கிடையாது' என தமிழக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.இந்த உத்தரவு,  ஆசிரியர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு சாரார்,  " டியூசன்என்பது காலம்காலமாய் இருந்து வருகிற ஒன்றுதான். பள்ளி செயல்படாத நேரங்களில்தானே ஸ்பெஷல் வகுப்புகள் எடுக்கிறோம்..? இதன் காரணமாக பள்ளியில் பாடம் நடத்தும் நேரமானது எந்த விதத்திலும் பாதிப்படைவது கிடையாது. மேலும், எந்தெந்த ஆசிரியர்கள் 'டியூஷன்' எடுக்கிறார்கள் என்பதை எப்படி கண்டறிந்து'நல்லாசிரியர்' விருதை கொடுப்பீர்கள்?"  எனகேள்வியை எழுப்பியுள்ளனர்.

மற்றொரு தரப்பினரோ, " உண்மையில் இது சமூகத்திற்கு நன்மை செய்யக் கூடிய உத்தரவு. வரவேற்கத் தக்க ஒன்று. பள்ளி நேரம் தவிர்த்து காலை மற்றும் மாலை நேரங்களில் வகுப்புகள் எடுப்பதன் மூலமாக பள்ளியில் சொல்லிக் கொடுக்கும்போது கவனச்சிதறல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மேலும், பள்ளியில் சரியாக சொல்லிக் கொடுக்காமல் 'டியூசனில்' சரியாக சொல்லிக் கொடுப்பதால், பெற்றோர்கள், 'குழந்தைகள் டியூசனுக்கு செல்வதால்தான் அதிக மதிப்பெண்கள் எடுக்கிறார்கள் என்ற மனநிலைக்கு தள்ளப்பட்டு, குழந்தைகளை வற்புறுத்தி டியூசன் சென்டர்களுக்கு அனுப்பி வைக்கிறார்கள்.'' என்ற கருத்தையும் முன் வைக்கிறார்கள். தமிழக அரசின் இந்த அதிரடி உத்தரவு குறித்து கல்வியாளர் மற்றும் ஆசிரியர் ஆகிய இருதரப்பிலும்  கேட்டோம்.

ஆயிஷா நடராஜன் - கல்வியாளர்

" நியாயமான, சமூகத்திற்கு அக்கறை உள்ள ஒரு உத்தரவாகதான் இதைப் பார்க்கிறேன், வரவேற்கிறேன். மேலும், ஏற்கெனவே விருதைப் பெற்றுள்ளவன் என்ற முறையில் எனக்கு சில அதிருப்தியும் உண்டு. பொதுவாக, டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பெயரால் வழங்கப்படும் 'நல்லாசிரியர்' விருதிற்கு ஆசிரியர்களே, அவர்கள் கையால், அவர்களைப் பற்றி 15 பக்கங்களில் எழுதி 'பள்ளிக் கல்வித்துறை'க்கு அனுப்பி வைக்கவேண்டும். இப்படி அவர்களைப் பற்றி அவர்களே புகழாரம் சூட்டி எழுதி கொடுத்திருக்கும் கடிதத்தை வைத்து 'நல்லாசிரியர் விருதை' கொடுக்கிறதுதமிழக அரசு. இப்படி செய்வதன் மூலமாக எப்படி ஒரு சிறந்த, திறமை மிக்க ஆசிரியரை கண்டறிய முடியும்? விருதிற்கு முன்னால் அந்த ஊரைச் சேர்ந்த சமூக ஆர்வலர், பள்ளி மாணவர்களைக் கேட்டு அந்த விருதுக்கு அவர் தகுதியானவர் என்று தெரிந்தபிறகு கொடுப்பதுதான் சரியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

இந்திராகாந்தி அவர்கள் இருந்த போது, 'எந்த பள்ளிகளிலும் டியூஷன் எனப்படும் சிறப்பு வகுப்புகளை ஆசிரியர்கள் எடுக்கக்கூடாது' என்று அறிவித்திருந்தார். மேலும், மாணவர்களுக்கு எடுத்தாகவேண்டும் என்கிற சூழல் நிலவும்போது, நான்கு மாணவர்களுக்கு மட்டுமே கட்டணம் இல்லாமல் சொல்லிக் கொடுக்கலாம் என்றும் குறிப்பிட்டிருந்தார். இன்று சில ஆசிரியர்கள் தங்கள் பள்ளிக் கூடத்தில் வாங்கும் சம்பளத்தை விட, டியூசன்கள் மூலம்அதிகமாக சம்பாதிக்கிறார்கள். கணக்கில் வராத இந்த பணத்திற்கு வருமான வரியும் செலுத்துவதில்லை என்பது வேதனையான விஷயம். டியூசனுக்கு அனுப்பப்படும் மாணவர்கள், அதிகாலை 3.30 மணிக்கு கண்விழித்து ஒவ்வொரு பாடத்திற்கும் ஒன்பது மணி வரை சென்ற பிறகே, பள்ளிக்கு செல்கிறார்கள். மாலை பள்ளி முடித்ததும்,  மாலை நேர டியூஷன்என மாணவர்களை பெற்றோர்கள் அலைக்கழிக்கும்பழக்கமும் அதிமாகிக் கொண்டே வருகிறது. மதிப்பெண்ணுக்காக மட்டுமே டியூசன் அனுப்பப்படுவதால் குழந்தைகளின் உடல் நலத்தையும், சமூகத்தையும் இது பெரிதும் பாதிக்கிறது.பள்ளிக்கூடங்களுக்குக்கூட கட்டடம் இப்படி இருக்கவேண்டும்.. இத்தனை மாணவர்கள்தான் ஒரு வகுப்பறையில் இருக்கவேண்டும் என்கிற கட்டுப்பாடுகள் உண்டு. ஆனால், டியூஷன்களில் அது போன்ற எந்தகட்டட அமைப்பையோ, அரசு வலியுறுத்தியுள்ள வழிமுறைகளையோ பின்பற்றுவதில்லை. சரியான சுகாதாரம் இல்லாததால் 'தேள் கொட்டி' இறந்த மாணவர்களின் கதையும் இருக்கிறது. பெருமைக்குரிய இந்த விருதானது, மற்ற விருதுகளைப் போல, 'நான் இந்த விருதுக்கு தகுதியானவன் அல்ல.. எனவே, திருப்பித் தருகிறேன்' என்கிற எந்த விதிமுறையும் இதில் இல்லை. இதுவரை யாருடைய விருதையும் திரும்பப்பெற்றதும் இல்லை. எனவே, இந்த 'நல்லாசிரியர்' விருதானது தகுதியானவர்களை சென்றடைய வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம்.

"திலீப்: அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர், சத்தியமங்கலம்."

அரசின் இந்த உத்தரவால் ஓரளவு மட்டுமே டியூசன் சென்டர்கள் குறைய வாய்ப்பிருப்பதாக கருதுகிறேன். இன்னும் சொல்லப்போனால், இந்த விருதுக்கு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது என்றுதான் சொல்லவேண்டும். நம் திறமைக்கான விருது நம்மைத் தேடி வரவேண்டுமே தவிர, விருதைத் தேடி நாம் போகத் தேவையில்லை என்று நினைப்பதால் கூட பல பேர் விண்ணப்பிக்காமல் இருக்கலாம் என்று நினைக்கிறேன்.2011 முதல் தனியார் நிறுவனங்களால், தகுதியான ஆசிரியர்களுக்கு, அரசுடன் இணைந்து விருதுகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் இதுவரை அரசு சாரா நிறுவனங்கள் மூலம் 7 விருதுகள் தமிழக ஆசிரியர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளன.   'தகவல் தொழில் நுட்பத்தை கல்வியில் எப்படிபயன்படுத்தலாம்...?' என்பதை நான் செய்து காட்டி, மாணவர்களுக்கு புதுவித கற்பித்தல் பாணியை செய்ததால், 2012- ம் ஆண்டு ஐ.சி.டி நிறுவனம், எனக்கு 'தேசிய நல்லாசிரியர் விருது - தகவல் தொழில் நுட்பவிருது' அளித்தது.

கிரிக்கெட்டர் அனில் கும்ளேவால் நடத்தப்பட்டுவரும் பியர்ஸன் நிறுவனம், இன்ஃபோசிஸ், தரமணியில் உள்ள எல் கார்ட் நிறுவனம் என பல நிறுவனங்கள் வருடாவருடம் அரசுடன் இணைந்து ஆசிரியர்களுக்கு விருதளித்து வருகின்றன.பள்ளிக்கூடங்களிலேயே கட்டணம் வசூலிக்காமல் சிறப்பு வகுப்புகளை ஆசிரியர்கள் எடுக்கலாம். சில மாணவர்களுக்கு கற்றல் திறன் குறைந்து காணப்படும். இன்னும் சிலர் கற்றலில் அதிக திறனோடு செயல்படுவார்கள். இவர்கள் இருவருக்குமே சிறப்பு வகுப்புகளை பள்ளிகளிலேயே காலை மற்றும் மாலை நேரங்கள் ஒரு மணி நேரம் கூடுதலாக எடுக்கலாம். கட்டணம் ஏதும் வாங்காமல் மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்கும்போது இந்த பணியானது சிறப்பாக இருக்கும். விருதும் அவர்களின் திறமையின் அடிப்படையில் கிடைக்கும் என்பது என்னுடையக் கருத்து.' என்றார் ஆசிரியர் திலீப்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி