குழந்தைகளின் நிஜ பள்ளி... வீதிகளே! உலவ விடுங்கள் பெற்றோர்களே! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 23, 2017

குழந்தைகளின் நிஜ பள்ளி... வீதிகளே! உலவ விடுங்கள் பெற்றோர்களே!


சில ஆண்டுகளுக்கு முன்புவரை, குழந்தைவளர்ப்பு என்பதைப் பற்றி தமிழ்ச் சமூகம் பெரிதாக அலட்டிக்கொண்டதில்லை. 10 பிள்ளைகளைப் பெற்றெடுத்த தாத்தா, பாட்டிகளைக் கொண்ட குடும்பங்கள் இங்கே அநேகம் உண்டு.
குழந்தைகள் வளர்ப்பதிலும் பெரிதான புலம்பல்கள் இருக்காது. பத்தில் ஓரிருவர் தவறினாலும் மீதி இருப்பவர்களை ஆளும் பேருமாக வளர்த்துவிட்டதாக அவர்கள் பெருமைப்பட்டுக்கொள்வார்கள். வறுமை வாட்டினாலும் அதை துணிச்சலாக எதிர்கொண்டு வளர்ந்த குடும்பங்கள் இங்கே நிறைய உண்டு.

இதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்

"உங்க பொண்ணை நம்ம ஸ்கூல் டாய்லெட்டைப் பயன்படுத்த சொல்வீங்களா சார்?" - ஆசிரியருக்கு மாணவியின் கேள்வி!
ஆனால், தற்காலத்தில் குழந்தை வளர்ப்பு என்பது பல்கலைக்கழக பாடத்திட்டம்போல முக்கிய அம்சமாகியிருக்கிறது. ஒரு குழந்தையைப் பெற்று வளர்க்க இன்றைய பெற்றோர்கள் நிறையச் சிந்திக்கிறார்கள், செயல்படுகிறார்கள். இந்தச் சூழ்நிலையில், இன்றைய நவீன காலத்தில் குழந்தைவளர்ப்பில் இருக்கும் சிக்கல்கள் என்னென்ன என்பதைப் பார்க்கலாம்.

இன்றைய குழந்தைகளுக்கு பள்ளி, ட்யூசன், டே கேரில் தொடங்கி பாட்டு க்ளாஸ், ஸ்போர்ட்ஸ் க்ளாஸ் என செலவளிக்க, ஆண்கள், பெண்கள் இருவரும் வேலைக்குச் செல்லும் காலக்கட்டத்தில் இருக்கிறோம். அப்படியான வீடுகளில் வளரும் குழந்தைகள், மாலை தாங்கள் பள்ளியில் இருந்து வந்த பின்னரும் பெற்றோர்கள் வருவதற்குக் காத்திருந்து, இரவு உணவை அவர்களோடு சேர்ந்து சாப்பிட்டுவிட்டு சேர்ந்து உறங்குகிறார்கள். இந்த வாடிக்கையில் என்றாவது பெற்றோர் வரத் தாமதமாகும் நாட்கள் அவர்களுக்கு ஏக்கம் தந்தாலும், அதையும் கடந்துசெல்லப் பழகியிருக்கிறார்கள்.

இந்தக் குழந்தைகளுக்கு வார இறுதியில் பெற்றோர்கள் இருவரும் வீட்டில் இருக்கிறார்கள் என்பது பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது. பெற்றோர்கள் நம்மைப் பார்க்கவேண்டும், நம்முடன் பேசவேண்டும், நம்முடன் விளையாடவேண்டும், அவர்களின் கவனம் தங்கள் மீது இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் இந்தக் குழந்தைகளுக்கு இருக்கின்றன. பெற்றோர்களுக்கு மட்டுமல்ல, அந்தக் குழந்தைகளுக்கும் வார இறுதி நாட்கள் வேகமாக முடிவதுபோல இருக்கிறது. திங்கட்கிழமை காலை மீண்டும் பள்ளிக்குக் கிளம்பும் பிள்ளைகள், அடுத்த சனிக்கிழமை எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பை அந்த நொடியில் இருந்தே சுமக்க ஆரம்பிக்கிறார்கள்

அப்பா, அம்மா இருவரும் பணிக்குச் செல்லும் சில குடும்பங்களில் அவர்கள் வீடு திரும்பிய பின்னரும்கூட டிவி, மொபைல் என நேரம் செலவழிப்பது வேதனையான விஷயம். பிள்ளைகளுடன் எவ்வளவு நேரம் செலவழிக்கிறோம் என்பது குழந்தையின் வளர்ச்சிக்கு முக்கியமானது. சில பெற்றோர்கள் தாங்கள் செல்பேசியை பயன்படுத்துவதோடு நிறுத்தாமல் டேப்லட், ஐபாட் என அந்தக் குழந்தைகளுக்கும் ஏதாவது ஒன்றை வாங்கிக்கொடுத்து பழக்கப்படுத்திவிடுகிறார்கள். நாளடைவில், அந்தக் குழந்தைகளும் தங்கள் பெற்றோரைப் போலவே ஒளிர் திரையில் தலைகவிழ்ந்து கிடக்கிறார்கள். குழந்தைகளை இப்படி கேட்ஜெட்டுகளுக்குப் பழக்கப்படுத்துவது ஆபத்தான ஒன்று. மாறாக, சேர்ந்து விளையாடுவது, கதை சொல்வது, பேசி மகிழ்வது என்று அவர்களை வளர்த்தெடுப்பதே ஆரோக்கியமான குழந்தை வளர்ப்பு.

குழந்தைகளுக்கு விளையாட்டு என்பது முக்கியமான ஒன்று. இன்று நகரமயமாக்கப்பட்ட சூழலில் அடுக்ககங்களில் வாழும் குழந்தைகளுக்கு வீதி என்பதே என்னவென்று தெரியாமல் இருக்கும் அவலம் இருக்கிறது. தெருவிலும், புழுதியிலும் கிடந்து வளர்ந்த ஒரு தலைமுறையின் அடுத்த தலைமுறைக்கு இதெல்லாம் தெரியாமல் போகும் நிலை, சாபம். மொட்டைமாடி, பூங்கா, மைதானம் என ஆவர்கள் ஓடியாடி விளையாடும் சூழலை உருவாக்கித் தர வேண்டியது பெற்றோர்கள் பொறுப்பு. அது அவர்களின் உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமின்றி, படிப்புச் சுமை தரும் ஸ்ட்ரெஸில் இருந்து மீட்டு மன ஆரோக்கியத்துக்கும் கைகொடுக்கும்.

அடுத்ததாக, இன்று தொலைக்காட்சியிலும், இன்டர்நெட்டிலும் குழந்தைகள் எதைப் பார்க்கிறார்கள் என்பதை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். வன்முறைக் காட்சிகளும், ஆபாசக் காட்சிகளும் மலிந்து கிடக்கும் இணைய உலகில், அவர்களுக்கு நிச்சயம் கடிவாளம் தேவை. ஒரு காணொளியின் சங்கிலி இணைப்பாக வைக்கப்பட்டிருக்கும் மற்றொரு காணொளியை அவர்கள் காண நேரும்போது, அது அவர்களின் வயதுக்கு மீறிய விஷயமாகவும் இருந்துவிடக்கூடிய ஆபத்து இருக்கிறது. இதைத் தடுக்க, குழந்தைகளுக்கான பிரத்யேக தேடுபொறி செயலிகளைப் பயன்படுத்தலாம். உதாரணத்துக்கு, YouTube-ல் YouTubeKids செயலி குழந்தைகளுக்கானது.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், அடுத்த ஆபத்து. நாம் பார்க்கும் சினிமாவையும், சீரியல்களையும் நம்முடன் சேர்ந்து பார்க்கும் குழந்தைகள் அதை எப்படிப் புரிந்துகொள்கிறார்கள் என்பது முக்கியமாகிறது. தொலைக்காட்சி, வலைக்காட்சியில் இம்மாதிரி பிரச்னைகள் என்றால், குழந்தைகள் படிக்கும் புத்தகங்களில் என்னென்ன கருத்துகள் சொல்லிக்கொடுக்கப்படுகிறது என்பதையும் பார்க்கவேண்டி இருக்கிறது. வீட்டுவேலைகள்(Household Chores) பற்றி சொல்லிக்கொடுக்கும் புத்தகமொன்றை என் குழந்தைக்காக வாங்கினேன். அந்தப் புத்தகத்தை வாசித்து முடிக்கும்போது, வீட்டு வேலை என்றாலே அதைப் பெண்கள் மட்டும்தான் பார்க்கவேண்டும் என்ற கருத்தை அது வெளிப்படுத்தியிருந்தது வருத்தமாக இருந்தது. புத்தகங்கள் இப்படியென்றால், அவர்கள் விளையாடும் பொம்மைகளும், உடைகளும் நிறத்தை வைத்து பாலின வேறுபாடுகளை சொல்லித்தருகின்றன. எனவே, அறம், பாலின சமத்துவம், நேயம் உள்ளிட்ட பாடங்களைப் பிள்ளைகளுக்குக் கற்றுத்தரும் வாய்பேசும் புத்தகங்களாக பெற்றோர்கள் மாறவேண்டியது முக்கியம்.

இன்றைய தனிக்குடும்ப வாழ்க்கையில் பிள்ளைகளுக்கு தாங்கள் கேட்டவையெல்லாம் கையில் கிடைக்கின்றன. அவர்களுக்கான உலகத்தை அவர்கள் தங்கள் கையிலேயே வைத்திருக்கிறார்கள். அவர்கள் இதில் இருந்து கற்கிறார்கள், நிறையத் தெரிந்துகொள்கிறார்கள் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், வீட்டைத் தாண்டி அவர்கள் செல்லும்போதுதான் அவர்களுக்கு இந்த உலகம் தெரிய ஆரம்பிக்கிறது.

குழந்தைகளை ஒரு கூட்டுக்குள் அடைக்காமல், அவர்களை சமூகமயப்படுத்தவேண்டும். தொலைக்காட்சி, வலைக்காட்சி பிம்பங்களைத் தாண்டி அவர்களுக்கு மனிதர்களுடனான உரையாடல்களை ஊக்குவிக்கவேண்டும். பிள்ளைக்களுக்கான நேரத்தை பெற்றோர்கள் அதிகப்படுத்தவேண்டும். பெற்றோர்களிடம் இருந்து குழந்தைகளும், குழந்தைகளிடம் இருந்து பெற்றோர்களும் கற்றுக்கொள்ள ஆரம்பிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி