நீட் தேர்வை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு: 6 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படுவர் எனக் கருத்து. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 15, 2017

நீட் தேர்வை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு: 6 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படுவர் எனக் கருத்து.

நிகழாண்டு மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்பட்ட தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வினை (நீட்) ரத்து செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அவ்வாறு உத்தரவு பிறப்பித்தால், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற 6 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்காக நாடு முழுவதும் பொது நுழைவுத் தேர்வை நடத்தும் முறையை மத்திய அரசு கொண்டு வந்தது. ஆனால், அதற்கு தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்புத் தெரிவித்தன. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் அடிப்படையில் நீட் தேர்வுக்கான கேள்விகள் தயாரிக்கப்படுவது, மாநில பாடத் திட்டத்தின் கீழ் பயின்ற மாணவர்களைப் பாதிக்கும் என்று குற்றம்சாட்டப்பட்டது. மேலும், இந்த புதிய நடைமுறைக்கு எதிராக தமிழக சட்டப் பேரவையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

இந்தச் சூழலில், அவற்றையெல்லாம் மீறி திட்டமிட்டபடி நீட் தேர்வினை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) கடந்த மே மாதம் நாடு முழுவதும் நடத்தியது. இதில், 11 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தேர்வெழுதினர். ஆங்கிலம், ஹிந்தி மட்டுமன்றி 8 பிராந்திய மொழிகளில் அந்தத் தேர்வு நடைபெற்றது. ஆனால், அதற்கான வினாத்தாள்கள் அனைத்தும் ஒரே மாதிரியாக இல்லாமல் ஒவ்வொரு மொழியிலும் வேறு வேறு கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.
இதற்கு நாடு முழுவதும் விமர்சனங்கள் எழுந்தன. மேலும், பிராந்திய மொழிகளில் கேட்கப்பட்டிருந்த கேள்விகள் கடினமாக இருந்ததாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை விதித்து கடந்த மே மாதம் உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து சிபிஎஸ்இ தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதை விசாரித்த உச்ச நீதிமன்றம், முடிவுகளை வெளியிடுவதற்கான தடையை நீக்கியது.
இதையடுத்து கடந்த மாதம் 23-ஆம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில் முதல் 250 இடங்களுக்குள் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு மாணவர்கூட வராதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுவும் பல்வேறு விமர்சனங்களுக்கு வித்திட்டது.
இதனிடையே, ஆந்திரத்தில் நடைபெற்ற நீட் தேர்வில் மூன்று வகையான வினாத்தாள்கள் வழங்கப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
நீட் தேர்வை செல்லாது என அறிவித்து மறுதேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுக்களில் வலியுறுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில், அவற்றின் மீதான விசாரணை, நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஏ.எம்.கான்வில்கர், எம்.எம்.சந்தானகெளடர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை வந்தது.

அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் வாதாடியதாவது:
அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான வினாத்தாள் வழங்கப்பட்டு பொதுத் தேர்வு நடத்தப்படுமானால், அதன் முடிவுகளை தேசிய அளவில் தரவரிசைப்படுத்தலாம். ஆனால், நீட் தேர்வு அவ்வாறு நடைபெறவில்லை. ஆந்திரத்தில் மட்டும் 3 வகையான வினாத்தாள்கள் வழங்கப்பட்டுள்ளன. இது முழுக்க, முழுக்க விதிகளுக்குப் புறம்பானது. வெவ்வேறு விதமான வினாத்தாள்களை வழங்கிவிட்டு அகில இந்திய அளவில் மாணவர்களை எவ்வாறு தரவரிசைப்படுத்த முடியும்? என்று அவர் கேள்வி எழுப்பினார்.

இதைத்தொடர்ந்து மத்திய அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர் மணீந்தர் சிங் முன்வைத்த வாதங்களாவது:
ஆங்கிலம், ஹிந்தி உள்பட மொத்தம் 10 மொழிகளில் நீட் தேர்வு நடத்தப்பட்டது. அவை அனைத்துக்கும் ஒரே மாதிரியான வினாத்தாள்களைத் தயாரிப்பது மிகவும் கடினமான காரியம். ஏறத்தாழ 1.50 லட்சம் பேர் பிராந்திய மொழிகளில் தேர்வெழுதினர். வினாத்தாள்கள் கசிந்துவிடக் கூடாது என்ற நோக்கத்திலேயே வெவ்வேறு வகையாக அவை தயாரிக்கப்பட்டன என்றார் அவர்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த பிறகு நீதிபதிகள் கூறியதாவது: நிகழாண்டில் நடத்தப்பட்ட நீட் தேர்வினை ரத்து செய்து அறிவிக்க இயலாது. அவ்வாறு உத்தரவிட்டால் அந்தத் தேர்வில் வெற்றி பெற்ற 6.11 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படுவர்.
நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துப் படிப்புகளுக்கான கலந்தாய்வை நடத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இந்த விவகாரத்தில் எந்தவிதமான இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். பின்னர், மனுக்கள் மீதான விசாரணையை வரும் 31-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

1 comment:

  1. POLY.TRB: ENGLISH
    POLY.TRB: CHEMISTRY
    POLY.TRB: COMPUTER SCIENCE/IT
    materials available.

    Poly.TRB NEW UPDATED STUDY MATERIALS coming soon...
    * MATHEMATICS with Question bank
    * PHYSICS

    GROUP 2A: GENERAL TAMIL
    GENERAL ENGLISH

    10% டிஸ்கவுட்டில் மெட்டிரியல்ஸ் காெரியரில் அனுப்பி வைக்கப்படுகிறது.
    CONTACT: 8072230063

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி