Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

kalviseithi visitors...

Jul 14, 2017

பெருந்தலைவர் காமராசர் - கவிதைகள்

பெருந்தலைவர் காமராசர்*

* ஆர்ப்பாட்டமில்லாமல் 
பெய்து ஓய்ந்த அடைமழை நீ
மனதின் ஈரம் வற்றி விட்ட 
இம்மானுட சமூகத்தில்
நீ கிளப்பி விட்ட கல்வி ஊற்றுகள்
நைல்நதியாய் பெருக்கெடுத்துக்
கொண்டு தான் இருக்கிறது

* உன் மூலம் அறியாதவர்கள் கூட
இன்று உன்மூலம் தான்
கல்விச் சமுத்திரத்தில் 
துள்ளி நீச்சலிடுகின்றனர்

* கருத்த வண்ணத்தில் பிறந்த
கருத்துப் பிழம்பே
சூடிக் கொள்ள மகுடமே தந்தாலும்
மறுத்து நின்ற விருதுநகரே

* கோடி கோடியாய் 
ஓடி சேர்த்த பிரமுகனா நீ?
பிறர் முக வாட்டம் கண்டாலே
ஓடி உதவிய உத்தமன் தானே நீ!

 

* ஏழைகளை சிரிக்க வைத்து
இறைவனை கண்ட 
எழுத்தறிவித்த 
இறைவன் நீ

* *காமராசர்*

ஒரு காலத்தில் 
தமிழக மக்களுக்கு இந்த 
சொல் தான் 
*ஐந்தெழுத்துமந்திரம்*
உன்னால் தான் 
பழுதில்லாமல் ஓடியது 
அவர்கள் வாழ்க்கை எந்திரம்

* சனங்களுக்கு 
கவலை வரக்கூடாது என்றே 
கவலை கொண்டவன் நீ

* பொட்டலம் மடித்த உன் கை தான்
தமிழ்தேசத்தின் 
பொட்டல்காடுகளை எல்லாம்
பூங்காக்களாக மாற்றியது

* ஒரு கை பார்த்து விடுகிறேன் 
என்று சொன்னவர்களைக் கூட 
இரு கை கூப்பி 
இணைத்துக் கொண்டவன் நீ

* இளமையில் கல் 

இந்த அவ்வை மொழியின் 
ஆழமறிந்தும்
மீளா வறுமையில் உழன்று
கல் சுமந்த இளசுகளின்
ஆறாம் அறிவை விரிவு செய்ய
கல்விக்கூடங்களை 
விரிவு செய்த வீரமகன் நீ

* வயிற்றுக்கே உணவில்லாத போது
செவிக்குணவெப்படி?
என கூன் வளைந்த வினாவிற்கு
ஆச்சரியக்குரியாய் 
பதிலடி தந்த பரமன் நீ

* ஆம் 
வயிற்றுக்கு சோறிடச் சொன்ன 
பாரதியின் எட்டையபுரத்தில் தானே
நீ முதன்முதலில் பசியென்னும் 
நெருப்பை போக்கும் பொறுப்பை 
மேற்கொண்டாய்..

* மதிய உணவு தந்து 
மழலைகளின் மதி பெருக வழிவகுத்தாய்
இச்செயலால் மனம் கசிந்து மகிழ்ந்திருப்பாள் உனை பெற்ற தாய்

* உன்னிடம் பந்தா இல்லாததால்
சுவற்றில் எறிந்த பந்தாய் 
உன்னிடம் ஓடி வந்தனர் தமிழர்கள்

* ஆலைகள் அணைகள் என
அதிகம் கட்டி மக்களின் 
அடுப்புகளை அணையாமல்
பார்த்துக் கொண்டாய்

* ஒரு வேளை 
இதையெல்லாம் 
நீ முதலில் செய்ததால் தானோ
உன்னை *முதல்வன்*
என அழைத்தார்கள்

* உன் பிறந்த நாளை 
சரியாக தான் உருமாற்றி இருக்கின்றனர்
*கல்விவளர்ச்சிநாள்* என்று

* அனைத்து குழந்தைகளையும் 
ஒன்றாய் சாப்பிட வைத்து 
அன்றைக்கே சாதிக்கொடுமைக்கு
சாவுமணி அடித்த 
தாடியில்லா பெரியார் நீ

* கல்லடி கலாச்சாரம் ஒழிய
நீ அடிக்கல் நாட்டி 
கல்விக்கூடம் பெருக்கினாய் 
மதிய உணவிட்டு வறுமையை சுருக்கினாய்

* தடுமாறும் உள்ளமெலாம் 
தடம் மாறாமல் இருக்க 
பாதை போட்ட மேதையே

எளிய வாழ்வை 
எடுத்துரைத்த வரலாறே

ஆடம்பரமற்ற அற்புதமே

பண்புள்ள படிக்காத மேதையே

வலைதளம் முதல் வயல்வெளி வரை

நிற்காமல் ஒலிக்கிறது உன் புகழ் பாட்டு

அதை நிற்க வைப்பதற்கில்லை இங்கே பூட்டு

இன்னொரு முறை பிறப்பாயெனில்

உனக்கே என்

*முதல்ஓட்டு*


*சீனி.தனஞ்செழியன்*
முதுகலைத்தமிழாசிரியர்
அஆமேநிப, திருவலம்-632515.

உறுதிமொழி

இது என் சொந்தப்படைப்பாகும். வாய்ப்பிருப்பின் தங்கள் தளத்தில் பதிய வேண்டுகிறேன்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி