அன்பு கலாமிற்கு ஒரு கவிதாஞ்சலி! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 27, 2017

அன்பு கலாமிற்கு ஒரு கவிதாஞ்சலி!



இந்தியநெருப்புநீ!!!

இராமேசுவரத்து அலை
ஓய்ந்து விட்டது 
அந்த கனவு நாயகன்
நம் எல்லோருக்கும் இனி 
கனவாகவே ஆகிவிட்டான்

இந்தியா2020 என இருபதுகளை உசுப்பிய வல்லறிவாளனே 
அமைதி சாந்தம் என மனமெல்லாம் புன்னகை சூடிய புதுயுக வீரனே

பேய்க்கரும்பும் உன்னைச் சுமந்து பூக்கரும்பாய் பெருமிதம் கொள்கிறது

இது போஸ்டர் கலாச்சார பூமி
வீணர்களும் வேதடாரிகளும் பணங்கொடுத்து போஸ்டர் அடித்து பிதற்றி நிற்கையில் 
நல்மனங்கொடுத்து உலகே உன் இழப்பில் 
பேனர் வைத்து கலங்கி நின்றது

ஒரு சூரியன்
ஒரு பூமி
ஒரு கலாம்
இதில் இல்லை மாற்று
நீ தான் எங்கள் அறிவுசுவாசக் காற்று

அன்பே உருவான எங்கள்
அப்துல் கலாமே
உம்மை எம்மிடமிருந்து 
பிரித்துவிட்டது இந்த 
பொல்லாத காலமே
உண்மையில் இது எங்கள்
போதாத காலமே...
இனி கருப்பு தினமாகத்தான்
கழியப்போகிறது
எங்களின் மிச்ச நாளுமே...

படகோட்டியின் மகனாய்
அவதரித்த அறிவியல் துடுப்பு நீ
வறுமையில் நசுங்கிய 
உன் ஏழ்மை இளமையிலும்
இமயச்சாதனை புரிந்த 
இந்திய இதயம் நீ....

அமெரிக்காவையே 
நடுங்கச் செய்த 
அறிவியல் சூரனே
பதவி பல பெற்றும்
உன்னிடம்
இங்கிருக்கும் பல தறுதலைகள்
கற்றுக்கொள்ளும் படி
எளிமையை 
உயர்த்திப்பிடித்த 
உத்தம உள்ளமே...

பகட்டில்லை
பந்தா இல்லை
ஆடம்பரமில்லை
ஆர்ப்பாட்டமில்லை
அலட்டல் இல்லை
ஆணவமில்லை
இவைகள் தானே
நீ வாழ்ந்த 
வாழ்வின் எல்லை...

தேசம்
மக்கள்
மாணவர்கள்
இதை சிந்தித்து சிந்தித்து தானே
உன் கடைசி நிமிடத்தை கூட
எங்களை சந்தித்தே 
உதிர்த்துவிட்டாய்...

ஓய்வில்லா சூரியனே
நீ எங்களிடம்
விதைத்தது 
அணுவல்ல
ஆகாயமளவு...

நீ தந்த அக்கினி
சிறகுகளை அணிந்து கொண்ட
ஆற்றல் மறவர்கள்
நாங்கள்....

இதோ

சிறகு விரித்துவிட்டோம்..
எம் தேசம் வல்லரசாகும் வரை
ஓயாது எங்கள் பயணம்
அதுவரை எமக்கில்லை
ஓர் நொடியும் சயனம்....

கலாம்

கண்ணீருடன்

உனக்கு 

ஒரு 

சலாம்

சீனி.தனஞ்செழியன்,
முதுகலைத்தமிழாசிரியர்,
அஆமேநிப, திருவலம்-632515.

3 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி