எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்குபொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கியது: மருத்துவக் கல்லூரிகளில் சேர 1,029 பேர் அனுமதிகடிதம் பெற்றனர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 26, 2017

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்குபொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கியது: மருத்துவக் கல்லூரிகளில் சேர 1,029 பேர் அனுமதிகடிதம் பெற்றனர்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு மாணவர்சேர்க்கைக்கான முதல்நாள் கலந்தாய்வில் தரவரிசைப் பட்டியலில் முதல் 26 இடங்களை பிடித்தவர்கள் பங்கேற்கவில்லை. அடுத்த இடங்களில் இருந்த 10 மாணவர்கள் சென்னை மருத்துவக் கல்லூரியை தேர்வு செய்தனர்.
மொத்தம் 1,029 பேருக்கு அனுமதிக் கடிதம் வழங்கப்பட்டது.அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு, சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் கடந்த 24-ம் தேதி தொடங்கியது. முதல்நாள் நடந்த சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வில் 14 மாணவர்கள்கல்லூரிகளில் சேர்வதற்கான அனுமதி கடிதத்தைப் பெற்றனர்.

26 மாணவர்கள் வரவில்லை

இதனைத் தொடர்ந்து பொதுப் பிரிவினர்களுக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. கலந்தாய்வில் பங்கேற்க 1,209 மாணவர்களுக்கு (நீட் மதிப்பெண் 656 முதல் 368 வரை) அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. தரவரிசைப் பட்டியலில் முதல் 26 இடங்களை பிடித்த மாணவர்கள் கலந்தாய்வுக்கு வரவில்லை. இதுபற்றி அதிகாரிகளிடம் கேட்டபோது, அந்த மாணவர்கள் அகில இந்திய ஒதுக்கீட்டிலும், ஜிப்மர் உள்ளிட்ட கல்லூரிகளில் சேர்ந்துவிட்டனர். அதனால் அந்த மாணவர்கள் வரவில்லை” என்று தெரிவித்தனர்.

அடுத்த10 மாணவர்கள்

இதனைத் தொடர்ந்து நீட் தேர்வில் 594 மதிப்பெண் பெற்று தரவரிசைப் பட்டியலில் 27-வது இடத்தில் இருந்த மாணவர் ஏ.அஸ்பாக் சுலைமான் முதலிடத்துக்கு வந்தார். மாணவர் ஏ.அஸ்பாக் சுலைமான் உட்பட தரவரிசைப் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் இருந்த 10 மாணவ, மாணவிகள் சென்னை மருத்துவக் கல்லூரியை (எம்எம்சி) தேர்வு செய்தனர். அவர்களுக்கு கல்லூரியில் சேர்வதற்கான அனுமதி கடிதத்தை சுகாதாரத் துறைச் செயலாளர்ஜெ.ராதாகிருஷ்ணன் வழங்கினார். அப்போது மருத்துவக் கல்வி இயக்குநர் (டிஎம்இ) எட்வின் ஜோ, மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைச் செயலாளர் செல்வராஜன் ஆகியோர் உடன் இருந்தனர். மொத்தம் 1,029 பேருக்கு அனுமதிக் கடிதம் வழங்கப்பட்டது.

கலந்தாய்வில் பரபரப்பு

கலந்தாய்வுக்கு வந்திருந்த அகில இந்திய ஒதுக்கீடு மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் சேர்ந்த மாணவர்கள், நாங்கள் தரவரிசைப் பட்டியலில் முன்னிலையில் இருக்கிறோம். எங்களுக்கு அரசுமருத்துவக் கல்லூரிகளில் கண்டிப்பாக இடம் கிடைக்கும். எங்களை கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதற்கு அதிகாரிகள், “நீங்கள் ஏற்கெனவே மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துவிட்டீர்கள். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி நீங்கள் கலந்தாய்வில் பங்கேற்க முடியாது” என்று தெரிவித்தனர். இதனால் கலந்தாய்வு அறையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.கலந்தாய்வுக்கு வரும் மாணவர்களிடம் நான் எந்த மருத்துவக் கல்லூரியிலும் சேரவில்லை. நான் கொடுத்துள்ள இருப்பிடச் சான்று உள்ளிட்ட அனைத்து ஆவணங்கள் உண்மை என்ற உறுதிமொழியைப் பெற்று, அனைத்து ஆவணங்களை சரிப்பார்த்த பின்னரே மாணவர்களை கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கின்றனர்.

போலியான இருப்பிடச் சான்று கொடுத்தோ அல்லதுதவறான முறையில் சேர்ந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பொதுப் பிரிவினர்களுக்கான கலந்தாய்வு வரும் 30-ம்தேதி வரை நடைபெறுகிறது. 31-ம் தேதி தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான கலந்தாய்வு நடக்கிறது. எம்பிபிஎஸ் படிப்புகளுக்கு செப்டம்பர் 4-க்குள்ளும், பிடிஎஸ் படிப்புகளுக்கு செப்டம்பர் 10-க்குள்ளும் கலந்தாய்வு நடத்தி முடிக்குமாறு உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி