மருத்துவக் கல்வியில் 85% இட ஒதுக்கீட்டு தடைக்கு எதிரான மனு: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 10, 2017

மருத்துவக் கல்வியில் 85% இட ஒதுக்கீட்டு தடைக்கு எதிரான மனு: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை!

மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85% உள் ஒதுக்கீடு செய்த  தமிழக அரசின் உத்தரவு தடைக்கு எதிரான மேல்முறையீடு, உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வர உள்ளது.


'நீட்' தேர்வு குளறுபடிகளைத் தொடர்ந்து எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மாணவர் சேர்க்கையில் மாநில பாடத் திட்டத்தில் படித்தவர்களுக்கு 85 சதவீத ஒதுக்கீடு அளிக்கும் வகையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதை எதிர்த்து தஞ்சையைச் சேர்ந்த சி.பி.எஸ்.இ மாணவர் தர்ணீஷ் குமார் சார்பில் அவரது தாயார் சி.கயல்விழி உள்பட 10-க்கும் மேற்பட்ட சிபிஎஸ்இ மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து... இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி கே.ரவிச்சந்திர பாபு தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ததோடு, நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் புதிய தகுதிப் பட்டியல் வெளியிட்டு, அதன்படி கலந்தாய்வை நடத்த வேண்டும் என உத்தரவிட்டார்.

தமிழக அரசுக்கு உள்ள அதிகாரத்தின் அடிப்படையில்... இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீட்டு மனுவை தமிழக அரசு தாக்கல் செய்தது. அந்த மனுவில், மாணவர் சேர்க்கை தொடர்பாக சட்டம் இயற்ற மாநில அரசுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின்படி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றமும் இவற்றை உறுதி செய்துள்ளது. அதன் அடிப்படையில், நீட் தேர்விலிருந்து விலக்குக் கோரி தமிழக சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி இயற்றப்பட்ட சட்ட மசோதா குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

95 சதவீத மாணவர்களின் நலன் காக்க... தமிழகத்தில் உள்ள 6,877 பள்ளிகளில் மாநில பாடத்திட்டத்தில் படித்த 95 சதவீத மாணவர்களின் நலனைப் பாதுகாக்கும் கடமை அரசுக்கு உள்ளது என்பதை தனி நீதிபதி கருத்தில் கொண்டிருக்க வேண்டும். அதே போன்று, நீட் தேர்வு வினாக்களை மத்திய இடை நிலைக் கல்வி வாரியம் தயாரித்துள்ளது.

தேர்வில் 50 சதவீத கேள்விகள் மட்டுமே மாநில பாடத்தில் இருந்து கேட்கப்பட்டன. இது, மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களை விட மத்திய இடை நிலை கல்வி வாரியத்தில் பயின்ற மாணவர்களுக்குச் சாதகமாக அமைந்துள்ளது.

வேறு வழியில்லாததால்... எனவே, வேறுபட்ட கல்வி வாரியங்களில் பயின்ற மாணவர்களிடையேயான வித்தியாசத்தைச் சீர்செய்ய, ஒதுக்கீடு வழங்குவதைத் தவிர அரசுக்கு வேறு வழியில்லை. மேற்குறிப்பிட்ட காரணங்களால் மாநில பாடத்திட்டம், மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தில் பயின்ற மாணவர்களைச் சமமாகக் கருத முடியாது. ஆகவே, அனைத்துத் தரப்பு வாரிய மாணவர்களுக்கும் சம வாய்ப்பு வழங்குவதை உறுதிப்படுத்த, தமிழ்நாடு தொழில்முறை கல்வி நிறுவனங்கள் மாணவர் சேர்க்கைச் சட்டத்தை இது வரை அரசு பின்பற்றி வருகிறது.

எனவே தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மேல்முறையீடு மனுவில் குறிப்பிட்டிருந்தது. இந்த மேல்முறையீட்டு மனு உயர் நீதிமன்ற அமர்வால் தள்ளுபடி செய்யப்பட்டது.

மேலும், தமிழக மாணவர்கள் கல்வியில் பின்தங்காதவாறு நடவடிக்கை எடுக்குமாறு கல்வி நிறுவனங்களுக்கும், மேலும் காலம்தாழ்த்தாமல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை நடத்துமாறு தமிழக அரசுக்கு நீதிபதிகள் அமரவு உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த தடை உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தமிழக அரசு நடவடிக்கைகள் எடுத்து வந்தது. அதன்படி தமிழக அரசு கடந்த வார இறுதியில் மேல்முறையீட்டு மனுவினை தாக்கல் செய்தது. இதனை அவசர வழக்காக கருதி விசாரிக்க விசாரிக்க வேண்டுமென்ற தமிழக அரசின் கோரிக்கையினை ஏற்று, இந்த மனு  நாளை விசாரிக்கப்பட உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி