தமிழகத்தில் மருத்துவப் படிப்பில் சேர போலி இருப்பிடச் சான்று கொடுத்த கேரள மாணவர்கள்: விசாரணை நடத்த காவல்ஆணையர் உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 26, 2017

தமிழகத்தில் மருத்துவப் படிப்பில் சேர போலி இருப்பிடச் சான்று கொடுத்த கேரள மாணவர்கள்: விசாரணை நடத்த காவல்ஆணையர் உத்தரவு

தமிழகத்தில் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு போலியான இருப்பிடச் சான்று கொடுத்து கேரள மாணவர்கள் விண்ணப்பித்திருப்பதாக சென்னை காவல் ஆணையரிடம் வழக்கறிஞர் ஒருவர் புகார் மனு கொடுத்துள்ளார்.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு மாணவர்சேர்க்கைக்கான கலந்தாய்வை தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET - நீட்) மதிப்பெண் அடிப்படையில் உடனடியாக நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த 7-ம் தேதி தீர்ப்பளித்தது. இதனைத் தொடர்ந்து கடந்த 8-ம் தேதி நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலான அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான பட்டியல் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான பட்டியல் என தனித்தனியாக தரவரிசைப் பட்டியல்கள் வெளியிடப்பட்டன.அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் கேரளா, ஆந்திரா, டெல்லி உள்ளிட்டவெளிமாநிலங்களில் படித்த தமிழக மாணவர்கள் அதிக அளவில் இடம் பெற்றிருந்தனர். இதனைத் தொடர்ந்து எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு, சென்னை அண்ணாசாலையில் உள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் கடந்த 24-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் தலைமை குற்றவியல் நீதிமன்ற கூடுதல் அரசு வழக்கறிஞராக உள்ள ஒய்.அம்ஜத் அலி என்பவர் நீட் அடிப்படையில் நடைபெறும் மருத்துவ மாணவர் சேர்க்கையில் மோசடி நடப்பதாகக் கூறிசென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனிடம் புகார் அளித்துள்ளார்.அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது:எனது இரண்டாவது மகள் ஏ.சாதியா தபசம் கடந்த 2016-ம் ஆண்டு பிளஸ் 2 முடித்தார். மருத்துவக் கல்லூரியில் சேர போதிய கட்-ஆஃப்மார்க் இல்லாததால், ஒரு வருடம் நீட் தேர்வு எழுத பயிற்சி எடுத்தார். இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி 273 மதிப்பெண் பெற்றார். தரவரிசைப் பட்டியலில் 2,500 இடத்துக்குள் 117 முஸ்லிம் மாணவ, மாணவிகள் இடம் பெற்றிருந்தனர். இதையடுத்து தரவரிசை பட்டியலில் உள்ள பெயர்களை ஆய்வு செய்தததில்வெளி மாநிலம், குறிப்பாக கேரளாவைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் தமிழக மருத்துவக் கல்லூரியில் சேர விண்ணப்பித்து இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.தமிழக அரசின் தரவரிசைப் பட்டியலில் நீட் ரிஜிஸ்டர் எண் அடிப்படையிலும், கேரள மாணவர்கள் பட்டியல் நீட் ரோல் எண் அடிப்படையிலும் வெளியிடப்பட்டிருந்தது. அதனை ஆய்வு செய்தபோது, கேரளாவில் மருத்துவக் கல்லூரியில் படிக்க விண்ணப்பித்திருந்த பல மாணவ, மாணவிகள், தாங்கள் தமிழகத்தில் வசிப்பதுபோல போலியான தகவலை அளித்து முறைகேடாக இருப்பிடச் சான்றுபெற்று தமிழக மருத்துவக் கல்லூயில் படிக்க விண்ணப்பித்திருப்பது தெரியவந்தது. அவ்வாறு மோசடியில் ஈடுபட்டு இரு மாநிலங்களிலும் விண்ணப்பித்த 9 மாணவ, மாணவிகளின் பெயர் பட்டியலையும் இதோடு இணைத்துள்ளேன்.நான் ஒப்பிட்டு பார்த்த 150 மாணவ, மாணவிகளில் தங்களிடம் பெயர் பட்டியல் அளித்துள்ள 9 மாணவ, மாணவிகள் சட்டத்துக்கு புறம்பான வகையில் இரட்டை இருப்பிடச் சான்றுபெற்று விண்ணப்பித்துள்ளனர்.

ஆதார் எண் பதிவு

கேரள மாநிலத்தவர் அவரது மாநிலத்தில் மருத்துவ இடம் கிடைக்காது என்பதால், தவறான இருப்பிடச் சான்றின் அடிப்படையில் தமிழக மருத்துவ கல்லூரிகளுக்கு விண்ணப்பித்திருப்பது உறுதியாகத் தெரிகிறது. நீட் தேர்வுக்காக விண்ணப்பிக்கும் நபர் தங்கள் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும். இருப்பிடச் சான்றை பதிவு செய்ய வேண்டும்.தமிழக மருத்துவ சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவத்தில் ஆதார் எண் தொடர்பான குறிப்புகள்சேர்க்கப்படாமல் வட்டாட்சியர் வழங்கும் இருப்பிடச் சான்று (வருவாய் நிர்வாக ஆணையர், சேப்பாக்கம்) மட்டுமே உள்ள வழிமுறைகளைப் பின்பற்றி கேட்கப்பட்டுள்ளது. அதனை கேரள மாநில மாணவ, மாணவிகள் அதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர். தமிழக மாணவ, மாணவியர்களுக்கு கிடைக்க வேண்டிய இடங்களை திட்டமிட்டு தட்டிச் செல்வதைத் தடுத்திடவும், தவறான தகவல்கள், போலியான இருப்பிடச் சான்று உள்ளிட்ட ஆவணங்களை வழங்கி விண்ணப்பித்திருக்கும் மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.இதுகுறித்து உடனடி விசாரணை நடத்த சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தனிப்படை அமைத்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

சட்டப்படி நடவடிக்கை

இதுதொடர்பாக சுகாதாரத்துறைச் செயலாளர் ஜெ.ராதா கிருஷ்ணன் கூறியதாவது: தமிழகத்தைச்சேர்ந்தவர்கள் தமிழகத்தில் இருப்பிடச் சான்று பெற்று இந்தியாவில் எந்த இடத்தில் இருந்தால், தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்ற விதிமுறை உள்ளது. போலியான இருப்பிடச் சான்று கொடுத்து 9 மாணவர்கள் விண்ணப்பித்திருப்பதாக குற்றச்சாட்டு வந்துள்ளது. போலியான இருப்பிடச் சான்று கொடுத்தும், இரண்டு மாநிலங்களிலும் விண்ணப்பித்திருப்பது தெரியவந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

உறுதிமொழி பெறவேண்டும்

அனைத்து மாணவர்களின் இருப்பிடச் சான்றுகள் சரிபார்க்கப்படும். கலந்தாய்வுக்கு வருபவர்களிடம் மருத்துவப் படிப்பில் சேரவில்லை. வெளிமாநிலத்தில் மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பிக்கவில்லை. இருப்பிடச் சான்று உள்ளிட்ட அனைத்து ஆவணங்கள் உண்மை என்ற உறுதிமொழியைப் பெற்று, அனைத்து ஆவணங்களை சரிபார்த்த பின்னரே மாணவர்களை கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கின்றனர். போலியான இருப்பிடச் சான்று கொடுத்தோ அல்லது தவறான முறையில் சேர்ந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாணவர்களிடமும், பெற்றோரிடமும் தெரிவிக்கப்படுகிறது.இவ்வாறு சுகாதாரத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி