புதிய பாடத்திட்டம் குறித்த கருத்து கேட்பு மனு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 19, 2017

புதிய பாடத்திட்டம் குறித்த கருத்து கேட்பு மனு

புதிய பாடத்திட்டம் உருவாக்குவது குறித்து பள்ளிக்கல்வித் துறை தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் கருத்து கேட்பு நிகழ்வினை அரசு நடத்தியுள்ளமை வரவேற்க்கத் தக்க நிகழ்வாகும்.

நான் அரசுப் பள்ளியில் கடந்த 2014 ஆம் ஆண்டிலிருந்து பட்டதாரி தமிழ் ஆசிரியாராகப் பணியாற்றுகிறேன்.இந்த 3 ஆண்டுக்கான என் அனுபவத்தில் விளைந்த,  புதிய தமிழ்ப் பாடத்திட்டம் குறித்தான கருத்துக்கள்.

பாடத்திட்டம் எவற்றையெலாம் கொண்டிருக்க வேண்டும்?

6 ஆம் வகுப்பிலிருந்து 10 ஆம் வகுப்பு வரை உள்ள பாடப்புத்தகங்களில் காந்தியைப் பற்றியப் பாடம் கட்டாயம் உண்டு. ஆனால் பாரதியாரின் பாடல்கள், கட்டுரைகள் எத்தனை உள்ளன?

இந்தியாவிற்கு காந்தியடிகள் முக்கியம்தான், அவரைப் பற்றிய பாடம் வைப்பதில் எங்களுக்கு விருப்போ வெறுப்போ அல்ல. ஆனால் தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் காந்தியை விட பாரதி மிக முக்கியம்.

ஆகவே, பாரதியின் தனிச் சிறப்பை விளக்கும் வகையிலும் பாரதியின் புதுக்கவிதையின் நடையை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையிலும்  பாரதியின் சுதந்திர, பெண்ணடிமைக்கு எதிரான,சாதியத்திற்கு எதிரான,சமுதாய மறுமலர்ச்சி பாடல்கள் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை பாடப் புத்தகங்களில் கட்டாயம் இடம் பெற வேண்டும்.

இன்று எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, அறமின்மை, கையூட்டு, சமுதாய சீரழிவு போன்ற செயல்கள் நடைபெறுகின்றன.அதற்கு யார் காரணம் என ஊடகங்களில் விவாதிக்கப் படுகிறது.

 இறுதியில் அக்குற்றத்தை செய்த குற்றவாளியை விட பெருங்குற்றவாளியாக பள்ளிகளும் ஆசிரியர்களும் சித்தரிக்கப்படுகின்றனர்.பள்ளியில் அவனுக்கு ஒழுக்கம் கற்பிக்கப்பட்டிருந்தால் அவன் குற்றவாளியாக உருவாகியிருக்க மாட்டான் என்பது அவர்களது வாதம்.உண்மைதான் அதில் மாற்றுக்கருத்து கிடையாது.

 ஒரு மனிதனை உருவாக்குவதில் மரபுக் காரணியான ஜீன்களை விட புறச்சூழல் என்பது மிக முக்கியப்பங்கு வகிக்கிறது.ஆனால் புறச் சூழலான பள்ளிக்கு வரும்போதே அவன் சமூக குற்றவாளியாகத்தான் வருகிறான் என்பதே உண்மை.இது ஏதோ சப்பைக் கட்டு கட்ட வேண்டும் என்பதற்காக சொல்லவில்லை.மிக முக்கியமான உண்மை.களத்தில் உள்ளவர்களுக்கு இது புரியும்.

 அவன் குற்றவாளியாக மாறுவதற்கான உபயம் திரைப்படங்கள்.திருடன், அயோக்கியன், கொலைகாரன், கொள்ளைக்காரன், கல்வியில் பின்தங்கியவன், கற்பழிப்பவன்தானே இன்றையத் திரைப்படத்தின் ஹீரோ(நாயகன்). அவன் நாயகனே அப்படியானால் அவனும் அப்படித்தானே இருப்பான்.

மாணவனின் பெற்றோர்களும் ஆசிரியர்களும் மாணவனுக்கு ஹீரோவாக ((நாயகன்) இருந்ததெல்லாம் அந்த காலம். இது வெர்சன்(பதிப்பு) 2.0.இப்பொழுது இவர்கள் அவனுக்கு வில்லன்கள்.எனவே இந்த வேறுபாட்டை களைய எவ்வகையிலேயினும் உதவி புரிய முடியுமா என்று பாருங்கள்.

ஒவ்வொரு பாடம் முடியும் பொழுதும் அப்படத்தினால் அம்மாணவனுக்கு ஏற்படக்கூடிய நல்விளைவு குறித்த செய்தியைப் பாடத்தின் இறுதியில் குறிப்பிடுங்கள். ஏதோ ஒரு நற்பன்பை பெறுவதற்காகத்தானே அவன் கற்கிறான்.

எனவே அந்த நற்பண்பு(கற்றல் விளைவு) எதுவென்று பாடப்புத்தகத்திலேயே குறிப்பிடுங்கள். அவ்வாறு விவரிப்பது ஆசிரியரின் கடமையென்று நீங்கள் கூறினால் அனைத்து ஆசிரியர்களும் ஒரே மாதிரியானவர்கள் அல்ல.

திருக்குறளுக்கான விளக்கவுரை மாணவன் படித்து வாழ்க்கையில் பயன்படுத்தும் வகையில் இல்லை. மனப்பாடம் செய்யும் வகையில் மட்டுமே உள்ளது.அதனால் விளக்கவுரைக்கான மொழிமுறையை மாற்றி அமையுங்கள்.

தமிழ் மொழியின் மீதான பற்றையும், தேசத்தின் மீதான அக்கறையும், நாம் உலகிற்கே முன்னோடியான வாழ்க்கைமுறை கொண்டவர்கள் என்பதையும் விளக்கும் பாடப்பகுதிகள் இருக்குமாறு அமையுங்கள்.

மாணவனுக்கு தத்துவம் சார்ந்த செய்திகளை அறிமுகப்படுத்துங்கள்.அவனது சூழ்நிலைக்கும் வயதிற்கும் ஏற்ற தத்துவப் பாடங்களை இடம் பெற செய்யுங்கள்.

 பாடத்திட்டம் எவ்வாறெல்லாம் இருக்கக் கூடாது!

தயவுசெய்து ஒரு வகுப்பில் அனைத்துப் படங்களுக்கும் ஒரே மாதிரியான முக்கியத்துவம் கொடுங்கள். மாணவனின் பார்வையில் ஒரு பாடம் எளிமையாகவும் மற்றொரு பாடம் கடினமாகவும் இருக்காத வகையில் பாடத்திட்டத்தை அமையுங்கள்.

ஒவ்வொரு மாணவனின் பார்வையிலும் பாடங்களின் மீதான கண்ணோட்டத்தில் சிறு வேறுபாடு இருக்கலாம். ஆனால் தற்பொழுது உள்ள பாடத்திட்டத்தில் அவனுக்கு மட்டுமல்ல ஆசிரியர்களுக்கும் பெருத்த வேறுபாடு தெரிகிறது.

அதாவது ஒரு படத்திற்கு 75 மதிப்பெண்களுக்கும் வேறொரு பாடத்திற்கு 200 மதிப்பெண்களுக்கும் அவன் படிக்க வேண்டிய சூழல் ஏற்படும் பொழுது,  75 மதிப்பெண் பாடம் மற்றும் ஆசிரியர் மீது விருப்பும் 200 மதிப்பெண் பாடம் மற்றும் ஆசிரியர் மீது வெறுப்பும் உருவாவது இயல்பே. இதில் பாடவேளை சிக்கல் வேறு எழுகிறது. எனவே அதைத் தவிருங்கள்.

 10 ஆம் வகுப்புத் தமிழ்ப் பாடப்புத்தகத்தில் 'திரைப்படக் கலை உருவான கதை' என்ற தலைப்பில் ஒரு பாடம் உண்டு.அந்த பாடத்தின் மூலம் மாணவர்கள் எந்தவிதமான அறிவுத்திறனை வளர்த்து கொள்கிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை. திரைப்படத்தால்  தமிழ்ச் சமுதாயம் எவ்வளவு சீர் கெட்டு உள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆகவே அது போன்ற பாடங்கள் இடம் பெற கூடாது.

நீதிக் கதைகள் எங்கே போனது பாடத்திட்டத்தை உருவாக்கும் நீதிமான்களே! நீதி கற்பிக்கப்படாமலேயே அவனிடம் நீதியையும் நேர்மையையும் ஒழுக்கத்தையும் எப்படி எதிர்பார்க்க முடியும்?

துணைப்பாடம் என்ற பெயரில் உள்ள எதுவேனும் நீதியைப் போதிக்கின்றனவா? அப்படியிருந்தால் ஏதேனும் ஒன்றைச் சுட்டிக்காட்டுங்கள்.தமிழில் துணைப்பாடத்திற்கு பொருந்த கூடிய நூல்களுக்காப் பஞ்சம்!

பின்பு ஏன் நமது சமூக சூழலுக்குப் பொருந்தாத அயல் நாட்டு மொழிபெயர்ப்பு கதைகள்.உதாரணம்:அடித்தளம்- 10ஆம் வகுப்பு. எனவே துணைப்பாடத்தில் நேரடியாக நீதியைப் போதிக்கும்  தமிழ் மரபு சார்ந்த துணைப்பாடங்களை இடம்பெற செய்யுங்கள்.

இறுதியாக,  பாடப்புத்தகத்தில் கருத்துகளை விளக்கப் பயன்படும் வாக்கியங்கள் மாணவனுக்கு ஆர்வத்தை உண்டு பண்ணும் வகையில் அமையுங்கள்.அதாவது மேடையில் அறிஞர் அண்ணா பேசுவதற்கும் கல்வியறிவற்ற சுப்பன் பேசுவதற்கும் வேறுபாடு உண்டு.அதேபோல்தான் எழுத்து நடையிலும். அதை கவனத்தில் கொள்ளுங்கள்!

அன்புடன்....
மணியரசன் ரங்கநாதன் (8489306424)

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி