VAO : கிராம நிர்வாக அலுவலர்களுக்கு புதிய அறிவிப்புகள்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 18, 2017

VAO : கிராம நிர்வாக அலுவலர்களுக்கு புதிய அறிவிப்புகள்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

கிராம நிர்வாக அலுவலர்களுக்கு (விஏஓ) ஆறு புதிய அறிவிப்புகளை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டார்.

கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள் மற்றும் நில அளவைத் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழா சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஆற்றிய உரை:
கிராம கர்ணம், கிராம முன்சீப் தேர்வில் 1980 -க்கு முன்பு தேர்ச்சி பெற்று, பின்னர் 2009 -ஆம் ஆண்டில் பணி நியமனம் செய்யப்பட்ட 747 கிராம நிர்வாக அலுவலர்களின் பணி, தகுதியின் அடிப்படையில் விரைவில் வரன்முறை செய்யப்படும். கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கணக்குப் பராமரிப்பு, அலுவலகங்களைப் பராமரிப்புக்காக, ஒவ்வொரு ஆண்டும் அளிக்கப்பட்டு வரும் ரூ.2,500 பராமரிப்புச் செலவுக்கான தொகை ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்படும்.
தாலுக்கா அலுவலகங்களில் இணைய வழி பட்டா வழங்கும் திட்டத்துக்காக நியமிக்கப்பட்டுள்ள 254 கணினி பதிவேற்றுநர்களின் பணி மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படும்.
வருவாய்த் துறையின் மூலமாக வழங்கப்படும் இணையதள சான்றிதழ்களின் பணிகளை மேற்கொள்ளவும், அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களின் பணித்திறனை மேம்படுத்தவும், எல்காட் நிறுவனம் மூலம் இணையதள வசதி, எழுதுபொருள் செலவினம் ஆகியன அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களுக்கும் அளிக்கப்படும்.
கிராம நிர்வாக அலுவலர்களை நிர்வாக சாத்தியக்கூறுகள், வழிவகைகளுக்கு உட்பட்டு, அவர்களது சொந்த உள்வட்டம், வட்டத்தில் பணி நியமனம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றார் முதல்வர்.

இந்த நிகழ்ச்சியில், வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட அமைச்சர்கள், அரசுத் துறை செயலாளர்கள் உள்பட பலரும் பங்கேற்றனர்.

முழக்கங்கள் -சலசலப்பு: எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசுகையில் சில அறிவிப்புகளை வெளியிட்டார். ஆனால் அவர், கிராம நிர்வாக உதவியாளர்களின் கோரிக்கைகள் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை எனக் கூறி, கூட்டத்தில் பங்கேற்றவர்களில் ஒரு பகுதியினர் சலசலப்பை ஏற்படுத்தினர். தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று முழக்கங்களையும் அவர்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. அரங்கில் இருந்த பலர், நிகழ்ச்சியைப் புறக்கணித்து வெளியேறினர்.

இதைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் உதயகுமார், 'கோரிக்கைகளை மேடைக்கு கீழே சொல்ல வேண்டாம். மேடையில் வந்து சொல்லுங்கள். உங்களது கோரிக்கைகள் குறித்து வருவாய்த் துறை செயலாளர் சந்திரமோகன் பேச்சுவார்த்தை நடத்துவார்' என்றார். அவரும் அந்த ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி