Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

100% இதய அடைப்பையும் ஆஞ்சியோபிளாஸ்டி மூலம் நீக்கலாம்- சென்னைக்கு வந்தாச்சு புதிய தொழில்நுட்பம்!


மனித உடலில் இதயத்தின் செயல்பாடுகள்  பிரமிக்கத்தக்கவை. இதயத்தின் சுருங்கி விரியும் தன்மையால், ரத்தம் சுத்தப்படுத்தப்பட்டு பெருந்தமனியின் மூலம் மீண்டும் உடலின் பல்வேறு பகுதிகளுக்கும் செலுத்தப்படுகிறது.
இதயம் சுருங்கி விரியும் ஒவ்வொரு முறையும் உடல் முழுவதும் ரத்தம் பரவுகிறது. பரபரப்பாக இயங்கும் இதயம் பாதிக்கப்பட்டால் ஒட்டுமொத்த உடலும் குலைந்துவிடும்.

இதயம் சார்ந்து, மாரடைப்பு, ரத்தக்குழாய் அடைப்பு, ரத்தக்குழாய் வெடிப்பு, சீரற்ற இதயத்துடிப்பு, இதய வால்வு இயங்காமை, ரத்த ஓட்டம் கம்மியாகுதல் என பல பிரச்னைகள் ஏற்படும். அந்த வரிசையில் இடம் பெறுவது தான் சி.டி.ஓ எனப்படும் க்ரோனிக் டோட்டல் அக்குலுஷன் (Chronic total occlusion). உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றம் காரணமாக இதயத்தில் இருக்கும் கொரோனரி தமனியின் சுவர்களில், கொழுப்பு படிமங்கள் படியத் தொடங்கும். அதனால் நெஞ்சு வலி, மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். 3 மாதங்களுக்கும் மேலாக கொழுப்பு படிந்தால் அப்பகுதி முழுமையாக அடைத்து விடும். இந்த நிலையைத் தான் சி.டி.ஓ என்கிறார்கள். .

பொதுவாக படிக்கட்டுகளில் ஏறும்போது நெஞ்சுவலி ஏற்படுவது, வேகமாக நடக்கும்போது நெஞ்சை அழுத்துவது போன்ற உணர்வு போன்ற தொடக்க நிலை அறிகுறிகளிலேயே, மருத்துவர்களை அணுக வேண்டும். மருத்துவர்களின் பரிந்துரையின்பேரில் மாத்திரைகளைச் சாப்பிடுவதன்மூலம் பெரிய அளவிலான பிரச்னைகளில் இருந்து தப்பிக்கலாம். இல்லையென்றால், இதய அடைப்பின் அளவைப் பொறுத்து ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை  அல்லது ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.

ஆஞ்சியோபிளாஸ்டி என்பது, உடலின் ஏதாவது ஒரு பகுதியின் வழியாக சிறிய டியூப் உடலுக்குள் செலுத்தப்படும். பின்னர் இதயத்தை நோக்கி ஆஞ்சியோபிளாஸ்டி பலூன் செலுத்தப்பட்டு அங்கிருக்கும் அடைப்பு நீக்கப்படும். தவறும் பட்சத்தில், சி.டி.ஓ போன்ற கடை நிலை பாதிப்பு ஏற்படும். அப்போது, ஓபன் - ஹார்ட் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும்.

ஓபன் - ஹார்ட் சர்ஜரி இல்லாமல் ஆஞ்சியோபிளாஸ்டி மூலமாகவே சி.டி.ஓ பாதிப்பை சரிசெய்வதற்கான வசதி இப்போது தான் சென்னைக்கு வந்துள்ளது.  ஆஞ்சியோப்ளாஸ்டி சிகிச்சை முறையில் பயன்படுத்தப்படும் 'ஐ.வி.யூ.எஸ்' என்ற அதிநவீன தொழில்நுட்பம்.  ஜப்பான் போன்ற நாடுகளில் ஏற்கனவே நடைமுறையில் இருக்கிறது என்றாலும், இந்தியாவில் இப்போது தான் அறிமுகம் ஆகிறது.  வெகுசில மையங்களில் மட்டுமே இந்த தொழில்நுட்ப வசதி உள்ளது.

இந்தச் சிகிச்சை முறையை அறிமுகம் செய்வதற்காக, ஜப்பானைச் சேர்ந்த மருத்துவர் மவோடா கபாரா சமீபத்தில் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்திருந்தார். அப்போது அவர் ஏறத்தாழ 100 இதயநோய் சிறப்பு மருத்துவர்களுக்கு இத்தகைய சிகிச்சை குறித்து விளக்கிக்கூறியதுடன்,  76 வயது  பெண்மணி ஒருவருக்கும் இந்தச் சிகிச்சையை வெற்றிகரமாக செய்தார்..

இந்த சிகிச்சை பற்றி  அப்போலோ மருத்துவமனையின் இதய நோய் சிறப்பு நிபுணர் ஆனந்த் ஞானராஜ் விரிவாகப் பேசினார்.

 ``இதய அடைப்பின் அளவைப் பொறுத்து, ஓப்பன் ஹார்ட் சர்ஜரி செய்ய வேண்டுமா? அல்லது ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்யவேண்டுமா? என்று முடிவு செய்யப்படும். ஆஞ்சியோபிளாஸ்டி முறையில், தமனியில் உள்ள அடைப்பு, கருவி ஒன்றின் உதவியோடு சரிசெய்யப்படும். அதிக அளவு அடைப்பு இருந்தால், ஓபன் ஹார்ட்  சர்ஜரி  முறைதான் பரிந்துரைக்கப்படும்.

ஆஞ்சியோபிளாஸ்டியைப் பொறுத்தவரையில், 'பலூன் ஆஞ்சியோபிளாஸ்டி'தான் பிரபலம். இதில் இருக்கும் பலூன் வடிவிலான டியூப், இதயத் தமனியில் உள்ளக் கொழுப்பை நீக்கும். ஓபன் ஹார்ட் சர்ஜரியில்  மார்புப் பகுதியை கிழித்து சிகிச்சை மேற்கொள்ளப்படும். சிகிச்சை முடியும்வரை இதயத்தின் செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்படும். அந்த நேரத்திலான ரத்த ஓட்டத்துக்கு, வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். இதைச் செய்யும்போது, சம்பந்தப்பட்ட நோயாளிக்கு பல்வேறுவிதமான பயமும், சிகிச்சை குறித்த அச்சமும் ஏற்படுவது வழக்கம். இது சிகிச்சையைப் பாதிப்பதுண்டு. மேலும் சிகிச்சை முடிந்து குறிப்பிட்ட காலம் வரை, நோயாளிகள் மருத்துவமனையிலேயே தங்கியிருந்து, மேற்கொண்டு ஏதாவது அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டுமா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். சில நேரங்களில், ஓபன் ஹார்ட் சர்ஜரியின்போதே மருத்துவம் அவர்களை கைவிடவும் வாய்ப்புள்ளது.

ஆனால், தற்போது வந்துள்ள நவீன கருவீகள், ஓபன் - ஹார்ட்  சர்ஜரிக்கு முற்றுப்புள்ளி வைக்கின்றன. இந்தச் சிகிச்சையின் மூலம், 3 மாதங்களுக்கும் மேலாக இதயத்தின் கரோனரிப் பகுதியில் தீவிரமான அடைப்பு இருப்பவர்களைக்கூட,  முழுமையாகவும் நிரந்தரமாகவும் மீட்கமுடியும். சிகிச்சைப்பிறகு, மருத்துவமனையில் தங்கவேண்டிய தேவையும் ஏற்படாது. இரண்டு அல்லது மூன்று  நாட்களிலேயே வீட்டுக்குச் சென்றுவிடலாம்..." என்றார் அவர்.

இந்தியாவுக்கு புதிய வரவான இத்தகைய சிகிச்சை குறித்து ஜப்பான் மருத்துவர் மவோடா கபாராவிடம் பேசினோம்.

 "இந்த ஆஞ்சியோபிளாஸ்டி முறையின் மூலம், இதய அடைப்பு 100 சதவிகிதம் சரிசெய்யப்படும். குறைந்த நாட்களில், குறைந்த நேரத்தில், சிகிச்சை முடிந்துவிடும். ஓபன் ஹார்ட் சர்ஜரி மேற்கொண்டவர்களில் சிலர், அதைத் தொடர்ந்து வேறொரு அறுவை சிகிச்சை செய்து கொள்ள பரிந்துரைக்கப்படுவதுண்டு. ஆனால் இந்த முறையில் அதுபோன்ற ஒரு நிலை கிடையாது" என்றார்.

ஆக மொத்தத்தில் இந்த மருத்துவத் தொழில்நுட்பம் இதய நோயாளிகளுக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வரப்பிரசாதமாகும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives