பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் 4.62 லட்சம் ஊழியர்கள்: ரூ.18 ஆயிரம் கோடி பொதுக்கணக்கில் வைப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 22, 2017

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் 4.62 லட்சம் ஊழியர்கள்: ரூ.18 ஆயிரம் கோடி பொதுக்கணக்கில் வைப்பு.

தமிழக அரசு ஊழியர்கள் 4 லட்சத்து 62 ஆயிரத்து 327 பேரின் பங்களிப்புத் தொகை, அரசின் பங்களிப்பு மற்றும் வட்டியுடன் சேர்த்து ரூ.18 ஆயிரத்து 16 கோடி அரசின் பொதுக்கணக்கில் வைக்கப்பட்டுள்ளதாக தமிழக நிதித்துறை செயலர் கே.சண்முகம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நிதித்துறை செயலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:கடந்த 2003-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி அல்லது அதற்குப் பின்னர் தமிழக அரசுப் பணியில் சேர்ந்துள்ள பணியாளர்கள், பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து புதிய ஓய்வூதிய திட்டத்துக்கு பங்களிப்பாக அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் அரசு அதற்கு சமமான பங்குத் தொகையை செலுத்துகிறது. கருவூல கணக்குத்துறை, அரசு தகவல் தொகுப்பு விவர மையத்தின் உதவியுடன், பங்களிப்பு ஓய்வூதிய திட்டக் கணக்குகளை பராமரித்து வருகிறது.இத்திட்டத்தில் இந்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி நிலவரப்படி 4 லட்சத்து 62 ஆயிரத்து 327 அரசு, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களின் பணியாளர்களின் பங்களிப்புத் தொகை, அரசின் பங்களிப்பு மற்றும் வட்டி உட்பட மொத்தம் ரூ.18 ஆயிரத்து 16 கோடி பொதுக்கணக்கில் வைக்கப்பட்டுள்ளது.மேலும், இப்பணியாளர்களுக்கு 2016-17ம் ஆண்டுக்கான கணக்குத்தாள் அரசு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, ஒவ்வொரு பணியாளரும் அவர்களது பங்களிப்பு ஓய்வூதியத் திட்டக் கணக்கில் எவ்வளவு தொகை உள்ளது என்பதை அறிய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணிஓய்வு பெற்றவர்கள், பணித்துறப்பு, இறந்த மற்றும் பணி முற்றுவிப்பு செய்த 3 ஆயிரத்து288 பணியாளர்களுக்கு இறுதியாக சேர வேண்டியதொகையை வழங்க ரூ.125 கோடியே 24 லட்சத்தை அரசு அனுமதித்துள்ளது. எனவே, பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பணியாளர்களின் பங்குத் தொகை, அரசின் பங்களிப்பு ஆகியவை வட்டியுடன் அரசின் பொதுக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி