Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

kalviseithi visitors...

Sep 26, 2017

அரசியல் நாடகங்களுக்கும் ஆடம்பர நிகழ்ச்சிகளுக்கும் பள்ளி மாணவர்களைப் பயன்படுத்துவதை எப்போது நிறுத்துவீர்கள்?


சமீபத்தில், இலங்கையில் நடந்த ஒரு சம்பவம் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இலங்கையின் கண்டி பகுதியில் நடந்த ஒரு திருமண விழாவில் மணப்பெண் அணிந்திருந்த சேலை, இலங்கை நாட்டிலேயே ஒரு மணப்பெண் அணிந்த நீளமான சேலை என்ற கின்னஸ் சாதனைப் படைக்க இருந்தது.


அந்தச் சேலையின் நீளம் 3.2 கிலோமீட்டர். அந்தச் சேலையைத் தரையில் படாமல் தூக்கிப் பிடிப்பதற்காக 250 பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். மேலும், புதுமணத் தம்பதியரை மலர் தூவி வரவேற்க, 100 பள்ளிக் குழந்தைகளையும் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

அந்த நாட்டின் மத்திய மாகாண அமைச்சர் சரத் ஏகநாயகா பெயரில் நடந்தப்படும் பள்ளியின் குழந்தைகளைத்தான் இதற்குப் பயன்படுத்தியிருக்கின்றனர். இந்தத் திருமண விழாவில், ஏகநாயகா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இதுகுறித்து அங்குள்ள குழந்தைகள் பாதுகாப்பு நல அமைப்பு விசாரித்து வருகிறது. பள்ளிக் குழந்தைகளைப் பொதுநிகழ்ச்சிக்குப் பயன்படுத்தினால், பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கும் என்கிறது அந்த நாட்டுச் சட்டம். ஆனால், பள்ளிக் குழந்தைகளை இதுபோன்ற ஆடம்பர நிகழ்ச்சிகளுக்குப் பயன்படுத்துவதை அந்த நாட்டு அரசே ஆதரிக்கிறது என்பதற்குச் சான்றுதான், அமைச்சர் பங்கேற்ற திருமண விழாவில், பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தியிருப்பது.

இது இலங்கையில் மட்டும் அல்ல, நமது ஊரிலும் ஆடம்பர விழாக்கள் மற்றும் அரசியல் காரணங்களுக்காக பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்துவது நிகழ்வது வருகிறது என்பது வேதனையான விஷயம். நம் ஊரின் அரசியல் நிகழ்வுகளைச் சற்றே ரீவையண்ட் செய்து பார்த்தால், அவை நினைவுக்கு வரும்.


சசிகலா அணியினர், கூவத்தூரில் எம்.எல்.ஏ-க்களை ஒரு ரிச்சார்ட்டில் அடைத்துவைத்தது உலகம் அறிந்த கதை. அப்போது, எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்க வேண்டும் என்று அங்குள்ள பள்ளி மாணவர்களை ஊர்வலமாகச் செல்லவைத்தனர். அப்போது, இதுகுறித்து சர்ச்சை எழுந்தாலும், மற்ற அரசியல் கேலி கூத்தினால், இதைப் பெரியதாக கண்டுகொள்ளாமல் மூடிவிட்டனர்.

கடந்த யோகா தினத்தன்று, பிரதமர் நரேந்திர மோடி லக்னோவில் கலந்துகொண்ட ஒரு பள்ளி நிகழ்ச்சியில், நீண்ட நேரம் மழையில் நனைத்து யோகா செய்ததால், 21 பள்ளிக் குழந்தைகளின் உடல்நிலை பாதிக்கப்பட்டது.

இப்போது, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக பல்வேறு ஊர்களில் நடைபெறும் பொது நிகழ்ச்சிகளில் பள்ளி மாணவர்களைப் பங்கேற்க வைக்கிறார்கள். இப்படிக் கட்டாயப்படுத்தி பங்கேற்ற வைக்கக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

பள்ளிக் காலத்தில், அரசியல் தலைவர்களின் பிறந்தநாள் அல்லது நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உச்சி வெயிலில் கால்கடுக்க நின்ற அனுபவம் நம்மில் பலருக்கும் உண்டு. பள்ளிக் குழந்தைகளை எந்தவிதமான பொதுநிகழ்ச்சிகளுக்கும் பயன்படுத்தக்கூடாது என்கிறது சட்டம். ஆனால், அவற்றைக் காற்றில் பறக்கவிட்டு, தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்கள். தங்கள் சொந்த விஷயங்களுக்குப் பயன்படுத்தும்போது அமைதியாக இருக்கும் தலைவர்கள், ஒரு பொது பிரச்னையில் குழந்தைகள் பங்கேற்றால் மட்டும் அக்கறை வந்துவிட்டதுபோல அறிக்கை விடுவார்கள். அதற்கு உதாரணம்...

நீட் தேர்வுக்கு எதிராக, சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவிகள் போராடியதும், 'பள்ளிக் குழந்தைகளை சிலரால் சமூக விரோதிகள் தூண்டிவிடுவது வேதனையானது' எனப் பதறினார்கள். அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட மாணவிகளுக்கு டி.சி வழங்குவோம் என மிரட்டவும் செய்தது பள்ளி.

ஆக... அரசுக்கு ஆதரவான விஷயம் என்றால், பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்துவது, எதிரான விஷயம் என்றால், அவர்களின் குரல்வளையை நெறிப்பது என்ற கொள்கையில் திடமாக இருக்கிறார்கள் அரசியல்வாதிகள். பள்ளிக்குச் செல்லும் வயதில் பணிக்கு அனுப்பும் அவலம் ஒருபுறம் இருக்க, பள்ளிக்குச் சென்ற குழந்தைகளை அரசியல் விழாக்களுக்குப் பயன்படுத்துகிறது.

இத்தகைய சமூக அவலங்கள் எப்போது நிறுத்தப்படும்?

நன்றி
விகடன்

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி