அங்கன்வாடி மையங்களுக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு: மத்திய அமைச்சரவை ஒப்புதல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 21, 2017

அங்கன்வாடி மையங்களுக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அங்கன்வாடி மையங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பதற்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.
தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதுகுறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின்(ஐசிடிஎஸ்) கீழ், அங்கன்வாடி மையங்களில் சிறார்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் ஆகியோருக்கு செலவிடப்படும் தொகையை அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி, 6 மாதங்கள் முதல் 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு நாளொன்றுக்கு செலவிடப்படும் தொகை ரூ.6-இல் இருந்து ரூ.8-ஆக உயர்த்தப்படும்.
கர்ப்பிணிகள் மற்றும் தாயப்பால் கொடுக்கும் பெண்களுக்கான தொகை ரூ.7-இல் இருந்து 9.5-ஆக உயர்த்தப்படும். ஊட்டச்சத்து குறைபாடு கொண்ட குழந்தைகளுக்கான தொகை ரூ.9-இல் இருந்து 12.5-ஆக உயர்தப்படவுள்ளது. இந்த செலவின அதிகரிப்பு மூலம், மத்திய அரசுக்கு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ரூ.12,000 கோடி கூடுதலாக செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
அரசு அச்சகங்களை இணைக்க ஒப்புதல்: நாடு முழுவதும் உள்ள 17 அரசு அச்சகங்களை, 5 அச்சகங்களாக ஒன்றிணைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த அச்சகங்கள் யாவும், தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகை, மின்டோ சாலை, மாயாபுரி, மகாராஷ்டிரத்தில் உள்ள நாசிக், கொல்கத்தாவில் உள்ள கோயில் தெரு ஆகிய இடங்களில் உள்ள அச்சகங்களுடன் இணைக்கப்படும்.

இந்த அச்சகங்களை நவீனப்படுத்துவதால், நாடு முழுவதும் உள்ள மத்திய அரசின் அலுவலகங்களுக்குத் தேவையான ரகசியமான, பல வண்ண அச்சுப் பணிகளை மேற்கொள்ள முடியும்.
இந்த அச்சகங்களுக்குச் சொந்தமான 468 ஏக்கர் நிலத்தில் இருந்து ஈட்டப்படும் வருமானத்தின் மூலம், 5 அச்சகங்களும் நவீனப்படுத்தப்படும்.
மாநில அரசிடம் சுற்றுலா விடுதிகள் ஒப்படைப்பு: இதனிடையே, பங்கு விலக்கல் கொள்கையின் ஒரு பகுதியாக, இந்திய சுற்றுலா மேம்பாட்டு கழகத்துக்குச் சொந்தமான 3 ஹோட்டல்களை சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு குத்தகைக்கு விடுவதற்கு மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. அதன்படி, ஜெய்ப்பூரில் உள்ள அசோக் ஹோட்டல், மைசூரில் உள்ள லலிதா மஹால் பேலஸ் ஹோட்டல், இட்டா நகரில் உள்ள ஒரு ஹோட்டல் முறையே ராஜஸ்தான், கர்நாடகம், அருணாசலப் பிரதேச மாநில அரசுகளிடம் ஒப்படைக்கப்படும் என்று அருண் ஜேட்லி, ஜே.பி.நட்டா ஆகியோர் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி