அரசு அலுவலகங்களின் அடையாளங்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 21, 2017

அரசு அலுவலகங்களின் அடையாளங்கள்

‘அரசு ஊழியர்கள் அனைவரும், பணி நேரத்தில், புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை தவறாமல் அணிய வேண்டும்’ என்ற தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு, உண்மையில் வரவேற்கத் தக்கது.
எப்போதோ செய்திருக்க வேண்டியது. இனியேனும் கடுமையாகப் பின்பற்றப்பட்டால் நல்லது. அரசு அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்கள், தாங்கள்யாரிடம் பேசுகிறோம், தமக்கு பதில் தருகிறவர் என்ன பொறுப்பில் இருக்கிறார் என்பதை அறிந்துகொள்ள அத்தனை உரிமையும் உடையவர்கள்.

தயக்கம் ஏன்?

பல நேரங்களில் என்ன நேருகிறது....? இடைநிலை எழுத்தர் அளவில் உள்ளவர்களிடம்கூட பேச முடியாமல், கடைநிலை ஊழியர்கள் அல்லது தற்காலிக ஒப்பந்தப் பணியாளர்களை மட்டுமே 'சந்தித்து' விட்டு திரும்ப வேண்டி உள்ளது.

இந்த நிலை மாற அடையாள அட்டை குறித்த அறிவிப்பு, ஆரோக்கியமான தொடக்கமாக அமையட்டும். 'அறிவிப்பு' இல்லாமலே இந்த நடைமுறை வழக்கத்தில் இருந்து இருக்கலாம். சில அலுவலகங்களில், அடையாள அட்டை வழங்கப்படாமலும் இருக்கலாம். ஆனாலும், அடையாள அட்டை அணிவதில் பலருக்கும் ஒரு விதத் தயக்கம் இருப்பதாகத்தான் தோன்றுகிறது.ஒரு வேடிக்கை - தனது வீட்டுக் கதவில், வாகனங்களில், குடும்ப நிகழ்ச்சிகளின் அழைப்பிதழ்களில் தங்களது அரசுப் பதவியை ஆர்வமாக வெளிப்படுத்திக் கொள்கிறவர்கள், அலுவலகப் பணியின்போது அடையாள அட்டை அணிவதற்கு ஏன் தயங்க வேண்டும்...?தனியார் பள்ளிகள், கல்லூரிகள், நிறுவனங்களில் அடையாள அட்டை இன்றி யாரையும்உள்ளே நுழையக் கூட அனுமதிப்பது இல்லை.

 உயர் பொறுப்பில் இருப்பவர்களுக்கும் இதே விதிமுறைதான். 'பாதுகாப்பு' மட்டுமே காரணம் அல்ல. 'ஒழுங்குமுறை' என்றால், அது எல்லாருக்கும் பொதுவாக இருக்க வேண்டும். அப்போதுதான் அதனை நடைமுறைப்படுத்துவதில் அர்த்தம் இருக்க முடியும்.'தனி நபர் உரிமை' தொடங்கி தகவல் திருட்டு வரையில் என்னென்ன காரணங்கள் உண்டோ அத்தனையும் 'யோசித்து யோசித்து' அடையாள அட்டைக்கு எதிராக சொல்லத் தயாராக இருக்கிறோம். கேள்வி கேட்கிற ஜனநாயக உரிமையைப் புரிந்துகொள்ள முடிகிறது.ஆனால் இன்னமும்கூட, வாய் பேச முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கிற பொது மக்கள், அரசு அலுவலகங்களில் படும் பாடு, நாம் உரக்கக் கூவும் ஜனநாயக நெறிமுறைகளை கேலிக் கூத்தாக்கிக் கொண்டு இருக்கிறது.இவற்றுக்கு எல்லாம், அடையாள அட்டை மட்டுமே நிரந்தரத் தீர்வாகி விடாது. இதையும் தாண்டி,இன்னமும் நீண்ட தூரம் போக வேண்டி இருக்கிறது.

அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை யாரையும் எளிதில் அணுகக்கூடிய வழி வகைகளைக் கண்டாக வேண்டும்.'எளிதில் அணுக முடியும்' என்பது, பொது மக்களுக்கு ஏற்படுத்தித் தரும் வசதியோ சலுகையோ அல்ல. மாறாக, ஓர் அரசு அலுவலகம் இப்படித்தான், ஆம், இப்படி மட்டுமே செயல்பட வேண்டும். அறைக்குள் இருக்கும் அலுவலர்களை வெளியில் கொண்டு வர வேண்டிய நேரம் வந்து விட்டது. 'அதிகாரி' என்றாலே, மூடப்பட்ட அறைக்குள்தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் எங்கிருந்து வந்தது?திறந்த அரங்கில் 'எல்லாரையும் போல' அவர்களுக்கும் இருக்கைகள் இருப்பதால் யாருக்கு என்ன தீங்கு வந்துவிடப் போகிறது? மூடிய அறைக்குள் கலந்துரையாட வேண்டிய அவசியம் இருக்கலாம்தான். அதற்காக தனியே ஓரிரு அறைகள் ஒதுக்கப்பட்டால் போதும். எந்தநேரத்தில் யாருடன் மூடிய அறை பயன்படுத்தப்படுகிறது என்பதற்கும் ஒரு பதிவேடு வைத்து விட்டால், பிரச்சினையே இல்லை.

என்னதான் கல்வியறிவில் நாம் முன்னேறி விட்டோம் என்றாலும், அறைக்குள் இருக்கும் ஓர் அலுவலரை சந்தித்து முறையிடுகிற 'தைரியம்' எத்தனை பேருக்கு இருக்கிறது? சாமான்யனுக்கும் அவனுக்காக இருக்கிற அரசுக்கும் இடையே, ஒரு 'தடுப்பு' தேவைதானா?எத்தனை சீக்கிரம் மூடிய கதவுகளைத் திறக்கிறோமோ, அத்தனைக்கும் பொது மக்களின் உயர்வுக்கு புதிய வழிகள் பிறக்கும். அரசுத்துறைகளில் நாம் ஏற்படுத்தி வைத்திருக்கிற பல்வேறு படிகள், நிலைகள், பதவிகள் எல்லாம், பொறுப்பேற்க வேண்டிய, பதில் சொல்ல வேண்டிய முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதற்காகத்தானே அன்றி, 'விலகி நிற்கிற' சமூக அந்தஸ்து தருகிற நோக்கத்தில் அல்ல.அதிகாரத்தைப் பறிப்பதல்ல நோக்கம்; அதிகாரத்தைப் பரவலாக்குதல். படிப்படியாக பாமரர்களிடம் கொண்டு வருதல். அடைந்து கிடக்கும் வழிகளைத் திறந்து விட்டு, அடித்தட்டு மக்கள், நலம் அடையச் செய்தல். அவ்வளவே. அரசு விதிமுறைகளை முழுமையாகப் புரிந்துகொள்ள, தமக்காக அதை முறையாகப் பயன்படுத்திக் கொள்ள, பாமரர்களைப் பயிற்றுவிக்க, ஊக்குவிக்க வேண்டும்.அறப் பணிகளில் எல்லாம் தலையாயது அரசுப் பணி. 'ஒல்லும் வகையான்' அறவினை ஆற்றுகிற நல் வாய்ப்பை அது வழங்குகிறது. இந்திய நாட்டு சமான்யன், எளிதில் திருப்தி அடைந்து விடுகிற மிகச் சாதாரணன். எளிமையாய் கனிவாய்நேர்மையாய் பணியாற்றுகிற ஓர் அலுவலர் அல்லது ஊழியரை சந்திக்கிற சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அவன் முகத்தில்தான் எத்தனை மகிழ்ச்சி!

எத்தனை கடுமையான விதிமுறைகளையும் அவனால் புரிந்துகொள்ள முடிகிறது. காரணங்களை, கால தாமதத்தை, தனக்கான நீதி மறுக்கப்படுதலைக் கூட, சகித்துக் கொண்டு போகிற கடை கோடி மனிதனுக்கு, கனிவான ஒரு பார்வையை, சிறிது நேர விசாரிப்பையேனும் உறுதி செய்ய வேண்டியது நமது அடிப்படைக் கடமை.வெளிப்படைத் தன்மைதான் ஊழலுக்கு எதிரான வலுவான ஆயுதம். எளிதில் அணுகுதல்தான் வெளிப்படைத் தன்மைக்கான ஆதாரத் தேவை. 'எல்லாமே மோசம்' என்கிற புகாரோ புலம்பலோ நியாயமற்றது; பயனற்றதும்கூட. நல்லவர்கள் நிரம்ப இருக்கிறார்கள், எல்லாமே நேர்மையாகத்தான் நடக்கிறது என்கிற நடைமுறை,நம்பிக்கை வேரூன்ற வேண்டும்.ஜனநாயக நாட்டில் அரசுத் துறைகளின் பொறுப்பும் பங்களிப்பும் கூடுதல் கவனம் பெறுகிறது. அரசு ஊழியர்கள், அலுவலர்களின் பணிச்சுமையைப் புரிந்துகொள்ள முடிகிறது.

பொறுப்புக்கும் பணிச் சுமைக்குமான இடைவெளி அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.தங்களின் பணிப் பட்டியல், பணி நேரம், பணிச் சுமை ஆகியவற்றை தாண்டியும், இந்த சமூகத்துக்கு நற்பணி ஆற்றும் கடமை வேறு எவரையும்விட, அரசு ஊழியர்கள், அலுவலர்களுக்கு அதிகம் உள்ளது. இதனாலேயே, இவர்கள் சற்றே அதிக சமம் உடையவர்கள் ஆகிறார்கள். அதிகக் கட்டுப்பாடுகளுக்கும் ஆளாகிறார்கள்.சுமக்கிற ஆற்றலும் 'சுகம்' தருகிற வல்லமையும், அரசு இயந்திரத்தின் ஆகச் சிறந்த அடையாளங்களாகத் தொடர்ந்து திகழட்டும். வாழ்த்துவோம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி