தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க வரவேற்பும் எதிர்ப்பும்: அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 13, 2017

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க வரவேற்பும் எதிர்ப்பும்: அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து

தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை திறக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

ஆதரவு

இது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் சு. திருநாவுக்கரசர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
கிராமப்புற மாணவர்களுக்கு மத்திய பாடத் திட்டத்தின்படி நடைபெறும் பள்ளிகளோ, பயிற்சி வகுப்புகளோ இல்லாததால் நீட் தேர்வில் மாநில பாடத் திட்டத்தில் படித்த மாணவர்களால் வெற்றி பெற முடியவில்லை. இந்த நிலையில் நவோதயா பள்ளிகளுக்கு தடையில்லா சான்றை 8 வாரங்களுக்குள் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை தமிழக காங்கிரஸ் வரவேற்கிறது.
ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோது நவோதயா பள்ளிகள் அமைக்க பரிந்துரை செய்யப்பட்டது. நவோதயா பள்ளிகளில் இந்தி திணிக்கப்படுகிறது என்ற கருத்தின் அடிப்படையில் மாநில அரசு அனுமதி வழங்காமல் மறுத்து வருகிறது. ஆனால் இந்தப் பள்ளிகளில் மும்மொழி கொள்கைதான் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் தொடங்கினால் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ரூ. 20 கோடி ஒதுக்க மத்திய அரசு தயாராக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. எனவே உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நவோதயா பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எதிர்ப்பு

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்ட அறிக்கை:
மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தித் திணிப்பை ஏற்க முடியாது என அறிஞர் அண்ணா திட்டவட்டமாக கொள்கை முடிவாக அறிவித்தார். அக்கொள்கையைத்தான் திமுக, அதிமுக முதல்வர்கள் பின்பற்றி வந்தனர். எனவே இந்த தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்வதோடு, இது எங்கள் கொள்கை முடிவு என பிரதமருக்கும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கும் கடிதம் எழுத வேண்டும்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்:

தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளை திறக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது அதிர்ச்சியை தருகிறது. இது மாநில அரசின் கொள்கை முடிவு எடுக்கும் அதிகாரத்தில் தலையிடுகிறது. இதனை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்.
எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் நவோதயா பள்ளிகளை அனுமதிப்பதில்லை என உறுதியாக இருந்தனர். இந்த பள்ளிகளில் 6-ம் வகுப்பு சேருவதற்கே நீட் தேர்வைப் போன்று நுழைவுத் தேர்வு அவசியம். மேலும் இது நேரடியாக இந்தி திணிப்புக்கு வழிவகுக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

BY
M.GUNA-TRICHY

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி