மருத்துவக் காப்பீடு வரி விலக்கு எவ்வளவு? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 9, 2017

மருத்துவக் காப்பீடு வரி விலக்கு எவ்வளவு?

தனி நபராக இருந்தாலும் குடும்பமாக இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் மருத்துவக் காப்பீடு என்பது தற்காலத்தில் மிக மிக அவசியமானதாகும்.
நகரவாசிகளுக்கு மட்டுமல்லாமல், சிற்றூர், கிராமங்களில் வசிக்கும் அனைவருமே மருத்துவக் காப்பீட்டின் பாதுகாப்பு அரவணைப்பில் இருப்பது அவசியம். நமது உடல் நலம் பேணுதல், நமது நல்வாழ்வுக்கான சுற்றுச்சூழல் பேணுதல் எவ்வளவு முக்கியமோ, அதே போலவே நமது மருத்துவச் செலவுத் தேவைகளை எதிர்கொள்ளும் விதத்தில் மருத்துவக் காப்பீடும் மிகவும் முக்கியமானதே.

உடல் நலக் குறைவு, அதற்கான மருத்துவச் செலவு என்பது திட்டமிட்டு வருவது அல்ல. ஆனால் அப்படியொரு துரதிருஷ்டவசமான தேவை எழும்போது, அதனைச் சிக்கலின்றி சந்திக்க மருத்துவக் காப்பீடு உதவும்.

அனைத்துப் பிரிவு மக்களும் இதன் முக்கியத்துவத்தை உணர வேண்டும். தகுந்த பாதுகாப்பை செய்து கொள்ள வேண்டும். திடீரென உடல் நலக் குறைவு ஏற்படும் நிலை அல்லது திடீரென விபத்தால் பாதிக்கப்படும் நிலை வந்தால் ஆண்டுக் கணக்கில் உழைத்துச் சம்பாதித்து சேமித்து வைத்துள்ள பணம் விரயமாகாமல் இருக்கவும் திடீர் மருத்துவச் செலவைச் சமாளிக்கவும் மருத்துவ இன்சூரன்ஸ் மிகவும் உதவும்.

மருத்துவக் காப்பீட்டுக்கான பிரீமியம் என்பது வெறும் செலவல்ல. நமது பாதுகாப்புக்கான உத்தரவாதம்.

அது மட்டுமல்லாமல், மருத்துவ இன்சூரன்ஸ் பாலிசியின் பிரீமியம் தொகைக்கு வருமான வரிப் பிரிவு 80-டி கீழ் வரி விலக்கு கிடைக்கும். மூத்த குடிமக்கள் போன்ற பிரிவில் மருத்துவச் செலவுத் தொகையைக் காண்பித்து வரி விலக்கு பெறலாம்.

சம்பளதாரர்கள் உள்ளிட்ட அனைத்துப் பிரிவினரும் தங்களது நிதியாண்டு வருமான வரி தேவைக்கு ஏற்ப மருத்துவ இன்சூரன்ஸ் பாலிசி வரம்புத் தொகையைத் தீர்மானித்து பிரீமியம் செலுத்தி வருமான வரி விலக்கு பெற்றுப் பயன் அடையலாம்.

ஏற்கெனவே மருத்துவக் காப்பீடு செய்துள்ளோர் வருமான வரியின் தேவைக்கு ஏற்ப பாலிசியின் வரம்புத் தொகையை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவது மிகவும் முக்கியம். கூடுதல் காப்பீட்டுத் தொகை என்பது கூடுதல் பாதுகாப்பு. அதற்கேற்ப அதிக பிரீமியம் செலுத்தினாலும் பிற்கால மருத்துவச் செலவை சந்திக்க உதவும் என்பதுடன் வரி விலக்கு பெறலாம் என்பதும் நினைவில் இருக்கட்டும்.

மூத்த குடிமக்களுக்கு...

நடப்பு நிதியாண்டில் (2017-18) - அதாவது மதிப்பீட்டு ஆண்டு 2018-19இல், மருத்துவ இன்சூரன்ஸ் பாலிசி பிரீமியம் தொகைக்கு வரி விலக்கு அதிகபட்சம் ரூ. 25,000 -ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வரி விலக்கு வரம்பு 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு அதிகபட்சம் ரூ. 30,000-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
80 வயதுக்கு மேற்பட்டோரின் மருத்துவச் செலவு...

80 வயதுக்கு மேற்பட்டவர்கள் மருத்துவ இன்சூரன்ஸ் பெற முடியாது. எனினும் நடப்பு நிதியாண்டு நிதி நிலை அறிக்கையின்படி, 80 வயதுக்கும் மேற்பட்டோர் நிதியாண்டில் தாங்கள் செய்யும் மருத்துவச் செலவுக்கு அதிகபட்சம் ரூ. 30,000 வரை வருமான வரி விலக்கு பெற முடியும். மருத்துவச் செலவு செய்ததற்கான ஆதாரங்களின் பெயர்கள், குறியீடுகளை வருமான வரிக் கணக்கு தாக்கலின்போது வெளிப்படுத்துவது அவசியம். உங்கள் பெற்றோரின் முதுமை கால மருத்துவச் செலவை சிக்கலின்றி சந்திக்க இது உதவும். உங்களுக்கும் வரி விலக்கு என்னும் சலுகை கிடைக்கும்.

திட்டமிட்டுச் செயல்பட்டால்...
மருத்துவ இன்சூரன்ஸ் வரம்புத் தொகை, அதற்குரிய பிரீமியம் தொகை ஆகியவை குறித்து இளம் வயதிலேயே திட்டமிட்டுச் செயல்பட்டால் ஒவ்வொரு நிதியாண்டிலும் அதிபட்சம் ரூ. 50,000 முதல் ரூ. 60,000 வரை வருமான வரியில் விலக்கு பெற முடியும். 25 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள், பெற்றோர் உள்ள குடும்பத்தினர் இத்தகைய வருமான வரி விலக்கை வருமான வரிப் பிரிவு 80-டி கீழ் பெற முடியும். குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களான பெற்றோருடன் வாழும் குடும்பத்தினர் அதிகபட்சம் ரூ. 60,000 வரை வருமான வரி விலக்கு பெற முடியும்.

நோய்த் தடுப்புக்கும்...

நோய்த் தடுப்புக்கு உதவும் முழு உடல் பரிசோதனை உள்ளிட்ட மருத்துவப் பரிசோதனைகளுக்கு குடும்ப உறுப்பினர்கள் செய்யும் செலவில் அதிகபட்சம் ரூ. 5,000 வரை வருமான வரி விலக்கு பெற முடியும். எனினும், இந்தத் தொகை 80டி பிரிவின் கீழ் கோரும் வருமான வரி விலக்கு வரம்புக்கு உட்பட்டதாகும்.


மாரடைப்பு, புற்று நோய் பரிசோதனைகள், சிகிச்சைக்கு உதவி பெற...

இந்தியாவில் இதய நோய், புற்று நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர். 2035-ஆம் ஆண்டில் புதிதாக 17 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இதைக் கருத்தில் கொண்டு ஐசிஐசிஐ புரூடன்ஷியல், ஹெச்டிஎஃப்சி போன்ற தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் கூட புற்று நோயாளிகளுக்கு உதவக் கூடிய மருத்துவ இன்சூரன்ஸ் திட்டங்களை ஏற்கெனவே செயல்படுத்தி வருகின்றன. தீவிர பாதிப்பு பாலிசி ("கிரிட்டிக்கல் இல்னஸ் பாலிசி') என்ற தலைப்பிலான இன்சூரன்ஸ் திட்டத்தில் புற்று நோய்க்கு உரிய பரிசோதனைகள், மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுதல், கதிரியக்க சிகிச்சை, அவ்வப்போதைய "கீமோதெரப்பி' (புற்று நோய்க்கான மருந்து சிகிச்சை) , அறுவைச் சிகிச்சை ஆகியவற்றுக்கான மருத்துவச் செலவுகளைக் கோர முடியும். பாலிசி பிரீமியம் தொகைக்கு வரி விலக்கும் பெறலாம்.

மாற்றுத் திறனாளிகளுக்கு... (பிரிவு 80டிடி)

உடல் உறுப்பில் 40 சதவீதம் பாதிப்பு உள்ள மாற்றுத் திறனாளி குடும்ப உறுப்பினருக்கு (கணவன் அல்லது மனைவி அல்லது பெற்றோர் அல்லது குழந்தைகள்) மருத்துவச் செலவு செய்வோர் அதிகபட்சம் ரூ.75,000 வரை வருமான வரி விலக்கு பெற முடியும். உடல் உறுப்பு பாதிப்பு தீவிரமாக இருந்தால் ரூ.1.25 லட்சம் வரை வருமான வரி விலக்கு கோரலாம்.


குறிப்பிட்ட உடல் நல பாதிப்புகளுக்கு 80டிடிபி பிரிவின் கீழ் வரி விலக்கு

ஞாபக மறதி நோய் ("டிமென்ஷியா'), "பார்கின்ஸன்ஸ்' பாதிப்பு உள்ளிட்ட நரம்பியல் நோய்கள், உடலில் ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்புகளில் பரவியுள்ள புற்று நோய் பாதிப்பு ("மாலிக்னன்ட் கேன்சர்'), எய்ட்ஸ் நோய், தீவிர சிறுநீரகச் செயலிழப்பு, ரத்தம் தொடர்பான பாதிப்புகள் ("ஹீமோஃபிலியா, தலசீமியா) உள்ளிட்டவற்றுக்கு செய்யப்படும் மருத்துவச் செலவுகளுக்கு உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து வருமான வரிப் பிரிவு 80டிடிபி-இன் கீழ் அதிகபட்சம் ரூ.40,000 வரை வரி விலக்கு பெறலாம்; மூத்த குடிமக்களாக இருந்தால் (60 முதல் 80 வயது வரை) அதிகபட்சம் ரூ.60,000 வரையும் 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களாக இருந்தால் அதிகபட்சம் ரூ.80,000
வரையும் வரி விலக்கு பெறலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி