வரலாறு காணாத விலை உயர்வால் தமிழகத்தில் சத்துணவு முட்டை வினியோகத்தில் திடீர் சிக்கல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 20, 2017

வரலாறு காணாத விலை உயர்வால் தமிழகத்தில் சத்துணவு முட்டை வினியோகத்தில் திடீர் சிக்கல்

வரலாறு காணாத விலை உயர்வால், தமிழகம் முழுவதும் சத்துணவுக்கு முட்டை வினியோகிப்பதில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சத்துணவுக்கு முட்டை வழங்க பண்ணையாளர்கள் மறுத்து வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவியருக்கு வாரம் 5 முட்டை இலவசமாக வழங்கப்படுகிறது.

இதற்காக தமிழக அரசு வாரம்தோறும் 2.50 கோடி முட்டைகளை கொள்முதல் செய்கிறது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டை சேர்ந்த தனியார் நிறுவனம், பள்ளிகளுக்கு முட்டை சப்ளை செய்யும் ஒப்பந்தத்தை எடுத்துள்ளது. கடந்த 6 ஆண்டுகளாக, இந்த நிறுவனம் நாமக்கல்லில் உள்ள பெரிய கோழிப்பண்ணையாளர்களுக்கு, தமிழகத்தில் உள்ள மாவட்டங்களை பிரித்து கொடுத்து, முட்டை சப்ளை செய்தது.கோழிப்பண்ணையாளர்கள் தங்கள் சொந்த பொறுப்பில் வாகனங்களை ஏற்பாடு செய்து, பள்ளிகளுக்கு நேரடியாக முட்டை சப்ளை செய்து வந்தனர்.சத்துணவு முட்டைக்கு விலை நிர்ணயம் செய்வதில் பண்ணையாளர்களுக்கும், தனியார் நிறுவனத்துக்கும் இடையே கடந்த ஆண்டு மோதல் ஏற்பட்டது. இந்த ஆண்டு தனியார் நிறுவனம், நேரடியாக பள்ளிகளுக்கு முட்டை சப்ளை செய்ய முடிவு செய்து, பண்ணையாளர்கள் குறிப்பிட்ட குடோன்களில் மட்டும் முட்டையை இறக்கி வைத்தால் போதும் என கூறியது. இது தொடர்பாக தனியார் நிறுவனத்தினருக்கும், பெரிய கோழிப்பண்ணையாளர்களுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதற்கு பெரிய பண்ணையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், தனியார் நிறுவனம் தனது முடிவில் இருந்து பின்வாங்கவில்லை. சிறிய பண்ணையாளர்கள் சிலரை வைத்துக்கொண்டு, சத்துணவுக்கு முட்டை சப்ளை செய்து வந்தது. கடந்த இரு மாதமாக பெரிய பண்ணையாளர்கள் யாரும் சத்துணவு முட்டையை தனியார் நிறுவனத்துக்கு சப்ளை செய்யவில்லை.

இந்நிலையில், தற்போது முட்டை விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதால், சத்துணவு முட்டை வினியோகத்தில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நாமக்கல் பண்ணைகளில் உற்பத்தியாகும் முட்டைக்கு வெளி மாநிலங்களில் அதிகளவில் டிமாண்ட் உள்ளதால், அங்கு அனுப்பவே அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். தற்போது முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 516 காசுகளாக உள்ளதால், அந்த விலையில் இருந்து 5 காசு அதிகமாக தான் வியாபாரிகள் பண்ணையாளர்களிடம் இருந்து முட்டையை வாங்கிச் செல்கின்றனர். கை மேல் உடனடி காசு கிடைப்பதால், பெரும்பாலான பண்ணையாளர்கள் சத்துணவுக்கு முட்டை சப்ளை செய்ய மறுத்து வருகின்றனர். இது குறித்து சத்துணவுக்கு முட்டை சப்ளை செய்ய மறுத்துவிட்ட நாமக்கல் கோழிப்பண்ணையாளர்கள் கூறுகையில், ''எங்கள் பண்ணையில் உற்பத்தியாகும் முட்டைக்கு அடுத்த வாரம் வரை இப்போதே புக்கிங் செய்துள்ளனர். எனவே, சத்துணவுக்கு முட்டை சப்ளையை நிறுத்தி விட்டோம்'' என்றனர். இதன் காரணமாக, கடந்த 5 நாட்களாக தமிழகம் முழுவதும் சத்துணவு மையங்களுக்கு முட்டை சப்ளை செய்ய முடியாமல் தனியார் நிறுவனம் திணறி வருகிறது. வாரம் 5 முட்டை பள்ளிகளில் வழங்கப்படுவதால், அந்தந்த பி.டி.ஓ.க்களின் கண்காணிப்புபடி வாரத்துக்கு 2 முறை பள்ளிகளுக்கு முட்டை சப்ளை செய்யப்படும். தற்போது போதுமான முட்டை கிடைக்காததால், ஒவ்வொரு பள்ளிக்கும் குறைவாக தான், முட்டை சப்ளை செய்யப்படுகிறது.

 வழக்கமாக திங்கள், செவ்வாய், புதன் ஆகிய 3 நாட்களுக்கு தேவையான முட்டைகள், வெள்ளிக்கிழமை சத்துணவு மையங்களுக்கு சென்று விடும். இந்த வாரம், கோழிப்பண்ணையாளர்கள் அதிகம் நிறைந்த நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு கூட, வரும் திங்கட்கிழமைக்கு தேவையான முட்டைகள் நேற்று மாலை வரைசப்ளை செய்யப்படவில்லை.குளறுபடி ஏன்?: முட்டை விலை, கடந்த 1ம் தேதி முதல் நாமக்கல் மண்டலத்தில் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 1ம் தேதி 420 காசுகளாக இருந்த முட்டை விலை, 6ம் தேதி441 காசுகளாக உயர்ந்தது. தற்போது, 516 காசுகளாக உள்ளது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்துக்கு முட்டைசப்ளை செய்யும் டெண்டரை, தனியார் நிறுவனம் ஒரு முட்டைக்கு 443 காசுகளுக்கு எடுத்துள்ளது. இந்த விலையை விட தற்போது மார்க்கெட் விலை உயர்ந்துள்ளதால், தனியார் நிறுவனத்தால் குறைந்த விலைக்கு முட்டை வாங்க முடியவில்லை. மேலும், கடந்த காலங்களில் முட்டை சப்ளை செய்த பண்ணையாளர்களுக்கு பணம் பாக்கி உள்ளதால், அவர்களும் முட்டை கொடுக்க மறுத்து, விலை அதிகம் கிடைக்கும் இடத்தில் விற்பனை செய்கின்றனர். இதனால், சத்துணவுக்கு சப்ளை செய்யப்படும் முட்டை வினியோகத்தில் பெரும் குளறுபடி ஏற்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தை போல விலை உச்சவரம்பு வருமா?: மேற்கு வங்கத்திலும் முட்டை விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அங்கு கொள்முதல் விலை ரூ.5.52ஐ எட்டி விட்டது. இந்நிலையில் அந்த மாநிலத்தின் கால்நடை மேம்பாட்டு துறை, முட்டை விற்பனைக்கு உச்சவரம்பு நிர்ணயித்து உத்தரவிட்டுள்ளது. அதில், இந்த மாநிலத்தில் தினசரி 2 கோடி முட்டைகள் தேவைப்படுகின்றன. ஆனால் சந்தைக்கு 1.75 கோடி முட்டைதான் சப்ளை செய்யப்படுகிறது.

கோழிப்பண்ணை வைத்திருப்பவர்கள் தட்டுப்பாட்டை பயன்படுத்தி முட்டை விலையை உயர்த்தக்கூடாது. ஒரு முட்டையின் விலை6 ரூபாய்க்கு மேல் உயர்த்தக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பண்ணையாளர்களுக்கு அரசு வழங்கும் ஊக்கத்தொகை ரத்து செய்யப்படும் என எச்சரித்துள்ளது. இதுபோல் தமிழகத்திலும் அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், நுகர்வோர் அமைப்புகளும் கோரிக்கை விடுத்துள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி