பொறியியல் கல்லூரிகளில் ஆசிரியர் மாணவர் விகிதம் 1:20 ஆகக் குறைப்பு: ஏஐசிடிஇ நடவடிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 19, 2017

பொறியியல் கல்லூரிகளில் ஆசிரியர் மாணவர் விகிதம் 1:20 ஆகக் குறைப்பு: ஏஐசிடிஇ நடவடிக்கை

நாடு முழுவதும் உள்ள பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரிகளில் ஆசிரியர், மாணவர் விகிதத்தை 1:20 ஆகக் குறைத்து அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் (ஏஐசிடிஇ) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
20 மாணவ-மாணவியருக்கு ஓர்ஆசிரியர் என்ற இந்த அறிவிப்புக்கு பொறியியல் கல்லூரிகள் வரவேற்புத் தெரிவித்துள்ளன. நாடு முழுவதும் உள்ள பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரிகள் ஒவ்வோர் ஆண்டும் ஏஐசிடிஇயிடம் அனுமதி பெறவேண்டும். இதற்காக, ஒவ்வோர் ஆண்டும் ஏஐசிடிஇ அனுமதிக்கையேட்டை (வழிகாட்டி புத்தகம்) வெளியிடும். 2018-19ஆம் ஆண்டுக்காக வெளியிடப்பட்ட அனுமதிக் கையேட்டில் பல்வேறு புதிய அறிவிப்புகளை ஏஐசிடிஇ வெளியிட்டிருக்கிறது.

தகுதியான, தரமான பேராசிரியர்கள் கிடைப்பதில் சிக்கல்நீடிப்பதால் ஆசிரியர் மாணவர் விகிதத்தை 1:15 என்ற அளவிலிருந்து அதாவது 15 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் என்ற அளவிலிருந்து மேலும் குறைக்க வேண்டும் என பொறியியல் கல்லூரிகள் சார்பில் பல ஆண்டுகளாகக் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இந்தக் கோரிக்கையை ஏஐசிடிஇ இப்போது ஏற்றுள்ளது. இனி பொறியியல் கல்லூரிகளில் 20 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் (1:20) என்ற அளவில் இருந்தால் போதும் என ஏஐசிடிஇ அறிவித்திருக்கிறது.கல்லூரிக் கணினி ஆய்வகங்களில் 6 மாணவர்களுக்கு ஒரு கணினி (1:6) அல்லது மடிக் கணினி இடம் பெற்றிருக்க வேண்டும், அதோடு நூலகம், கழிவறை, புகார் மையம் என பிற அனைத்து வசதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளபடி இடம்பெற்றிருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

இணையதளத்தில் கட்டண விவரம்:

கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கல்விக் கட்டணம், தேர்வுக் கட்டணம் உள்ளிட்ட மாணவர்களிடம் வசூலிக்கப்படும் பிற அனைத்துக் கட்டணங்களின் விவரங்கள் அந்தந்த கல்லூரி இணையதளங்களில் வெளியிடப்பட வேண்டும். அதோடு, சம்பந்தப்பட்ட மாநில அரசு அல்லது கட்டண நிர்ணயக் குழு நிர்ணயித்த கட்டணத்தைக் காட்டிலும் கூடுதல் கட்டணத்தை மாணவர்களிடம் வசூலிக்கக் கூடாது. அவ்வாறு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஏஐசிடிஇ எச்சரித்துள்ளது.

இடங்கள் பாதியாகக் குறைய வாய்ப்பு:

பொறியியல் கல்லூரிகளில் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு 30 சதவீதத்துக்கும் குறைவான மாணவர் சேர்க்கை நடைபெற்றிருப்பது தெரியவந்தால், அந்தக் கல்லூரியின் அங்கீகரிக்கப்பட்ட மாணவர் சேர்க்கை அளவு பாதியாகக் குறைக்கப்பட்டு விடும். ஒருவேளை கல்லூரியில் தொடர்ந்து 5 ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை பூஜ்ஜியமாக இருந்தால், அந்தப் படிப்புகளுக்கு 2018-19 கல்வியாண்டில் அனுமதி மறுக்கப்படும் என ஏஐசிடிஇ அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து கல்வியாளரும், தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகியுமான ஜெயப்பிரகாஷ் காந்தி கூறியதாவது:பொறியியல் கல்லூரிகளில் ஆசிரியர் - மாணவர் விகிதத்தைஏஐசிடிஇ குறைத்திருப்பது வரவேற்கத்தக்கது. பொறியியல் கல்லூரிகளின் தொடர் கோரிக்கைகளை ஏற்று, தரமான பேராசிரியர்கள் நியமிக்கப்படுவதற்கு வழி வகுக்கும் வகையில் இந்தச் சலுகையை ஏஐசிடிஇ அறிவித்துள்ளது.

இதன் மூலம், மீதமாகும் செலவை அதிக ஊதியத்துக்கு தரமானபேராசிரியர்களை நியமிப்பதிலும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதிலும் கல்லூரி நிர்வாகங்கள் கவனம் செலுத்த வேண்டும். மேலும், பொறியியல் கல்லூரிகளில் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு மாணவர் சேர்க்கை விகிதம் 30 சதவீதத்துக்கும் குறைவாக இருந்தால், அந்தப் பொறியியல் கல்லூரியின் அங்கீகரிக்கப்பட்ட மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை பாதியாக குறைக்கப்பட்டுவிடும் என ஏஐசிடிஇ அறிவித்திருக்கிறது.

இதன்படி, வரும் கல்வியாண்டில் தமிழகத்தில் மட்டும் 30 க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த நடவடிக்கை, சம்பந்தப்பட்ட கல்லூரியில் மாணவர் சேர்க்கை மேலும் குறையவே வழிவகுக்கும் என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி