ஜாக்டோ-ஜியோ மீது நீதிபதிகள் அதிருப்தி: வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றம்; விசாரணை ஜனவரிக்கு ஒத்திவைப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 21, 2017

ஜாக்டோ-ஜியோ மீது நீதிபதிகள் அதிருப்தி: வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றம்; விசாரணை ஜனவரிக்கு ஒத்திவைப்பு

ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்தத்துக்கு எதிரான வழக்கு மீண்டும் வேறு அமர்வுக்கு மாற்றப்பட்டது.தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்தக்கோரியும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரியும் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் செப்டம்பர் மாதம் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்துக்கு தடை விதிக்கக்கோரி வழக்கறிஞர் சேகரன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு, வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு தடை விதித்தது. தடையை மீறிவேலைநிறுத்தப் போராட்டம் தொடர்ந்ததால் ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.இந்நிலையில், நீதிபதி கே.கே.சசிதரன் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாறுதல் செய்யப்பட்டார். சென்னையில் அவரே இந்த வழக்கை விசாரிக்க தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால். இந்த வழக்கை உயர் நீதிமன்ற கிளையில் நீதிபதிகள் எம்.வேணுகோபால், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு விசாரிக்க தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.இந்த வழக்கு நீதிபதிகள் எம்.வேணுகோபால், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வில் அக்.13, டிச. 8ஆகிய தேதிகளில் விசாரணைக்கு வந்தபோது ஜாக்டோ- ஜியோ வழக்கறிஞர் உடல் நலக்குறைவால்மருத்துவமனையில் இருப்பதால் விசாரணையை ஒத்திவைக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டது.

வேண்டுகோள் நிராகரிப்பு

இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பித்தநீதிபதிகளில் ஒருவர் சென்னையிலும், மற்றொருவர் மதுரையிலும் இருப்பதால் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரிக்க ஜாக்டோ ஜியோ சார்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. பின்னர் டிச.20-ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டு, அன்று இறுதி விசாரணை நடைபெறும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மீண்டும் விசாரணை

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.வேணுகோபால், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜாக்டோ ஜியோ சார்பில் வழக்கறிஞர் ஷாஜிசெல்லன், மூத்த வழக்கறிஞர் சிகிச்சையில் இருப்பதால் விசாரணையை ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைக்க வேண்டும் என மனு தாக்கல் செய்தார்.இதற்கு நீதிபதி வேணுகோபால் ஆட்சேபம் தெரிவித்தார். மேலும் நீதிபதி கூறும்போது, ‘கடந்த விசாரணையில் இனிமேல் ஒத்திவைப்பு கோரக்கூடாது என தெரிவித்துள்ளோம். மூத்த வழக்கறிஞருக்கு உடல் நலம் சரியில்லாவிட்டால் வேறு வழக்கறிஞரை ஏற்பாடு செய்திருக்க வேண்டும். அதை செய்யாமல் மீண்டும் விசாரணையை ஒத்திவைக்கக் கோருவது சரியல்ல. இந்த வழக்கைநாங்கள் விசாரிக்க விரும்பவில்லை. நாங்கள் விசாரிப்பதை தவிர்க்கவே ஒத்திவைப்பு கோருகின்றனர். இது நல்ல முறையல்ல’ என்றார்.பின்னர் இவ்வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றியும், விசாரணையை ஜனவரி முதல் வாரத்துக்கு ஒத்திவைத்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து உயர் நீதிமன்ற கிளைக்கு கடந்த அக்டோபர் மாதத்தில் நீதிபதிகள் இடமாறுதல் செய்யப்பட்டபோது மதுரை கிளையின் நிர்வாக நீதிபதியாக நியமிக்கப்பட்டவர் வேணுகோபால். இவரது 3 மாத பணிக்காலம் டிச. 22-ம் தேதியுடன் முடிகிறது. அடுத்த 3 மாதங்களுக்கு அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பணிபுரிவார். இதனால் ஜாக்டோஜியோ வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி