தமிழக அரசு பகுதி நேர ஆசிரியர்களுக்கு செய்வது சரியா? சமநீதியா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 3, 2017

தமிழக அரசு பகுதி நேர ஆசிரியர்களுக்கு செய்வது சரியா? சமநீதியா?

தமிழகத்திலுள்ள பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்து ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் ஒருங்கினைப்பாளர் செந்தில்குமார் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,

''தமிழ்நாட்டில் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், கணினி, இசை, தையல்,தோட்டக்கலை, வாழ்வியல்திறன்கல்வி, கட்டிடக்கலைக்கல்வி ஆகிய பாடங்களை கற்றுத் தருவதற்காக அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் 16,549 பகுதி நேர சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.

தமிழக அரசு பிறப்பித்த அரசாணை 177ன் அடிப்படையில் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின் அடிப்படையில் நேர்கானல் மூலம் இவர்கள் 05.03.2012ல்பணியமர்த்தப்பட்டனர். இவர்கள் பகுதிநேர ஆசிரியர்கள் என்ற முறையில் குறைந்தபட்சம் வாரத்திற்கு 3 அரை நாட்கள் மட்டும் பணியாற்றினால் போதுமானது என்றாலும், பல்வேறு சூழ்நிலைகளின் காரணமாக மறைமுகமாக அனைத்து பணிநாட்களிலும் பெரும்பாலும் முழு நேரமும் இவர்கள் பணியாற்றுகின்றனர். மேலும்,ஆசிரியர் பற்றாக்குறை நிலவும் பள்ளிகளில் மற்ற பாடங்களை நடத்தும்படியும் பணிக்கப்படுகின்றனர்.

முழு நேர ஆசிரியர்களுக்குரிய அனைத்துப் பணிகளையும் செய்யும் போதிலும்,இவர்களுக்கு மாதம் ரூ. 7,700 மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது. இது தினக்கூலி தொழிலாளர்களுக்கு கிடைக்கும் ஊதியத்தைவிட மிகவும் குறைவாகும்.

ஒவ்வொரு கல்வியாண்டிலும் ஜூன் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை மட்டுமே இவர்களுக்கு பணி வழங்கப்படுவதால் மே மாதத்திற்கு ஊதியம் கிடைப்பதில்லை. மே மாதத்திற்கு ஊதியம் கிடையாது என்று 26.08.2011ல்  தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் 110-ன்  அறிவிப்பிலோ அல்லது இவர்களை நியமனம் செய்யப்பட்ட அரசாணை 177லோ குறிப்பிடவில்லை. இதனால் கடந்த 6 ஆண்டுக்கான மே மாதம் ஊதியம் ஒவ்வொருவரும் ரூ.38000 -ஐ இழந்துவருகின்றனர். அரசு ஊழியர்களுக்குரிய எந்த சலுகையும் இவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. அதுமட்டுமின்றி, இதே அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் தொகுப்பூதியத்தில் உள்ள கணினி இயக்குபவர்,கணக்காளர்களுக்கு கூட பண்டிகை போனஸ் வழங்கப்படும்போது, இவர்களுக்கு மட்டும் இதுவரை ஒருமுறைகூட வழங்கியதில்லை.

மேலும் பகுதி நேர சிறப்பாசிரியர்களில் மாவட்டம் விட்டு மாவட்டம் பணியமர்த்தப்பட்டிருப்பதால் அவர்கள் பெறும் ஊதியம் அவர்களின் உணவுக்கும்,தங்குமிடத்திற்கும் கூட போதுமானதாக இல்லை. எனவே 100 மாணவர்கள் என்ற எண்ணிக்கையை விகிதத்தை குறைத்து, அனைவருக்கும் அருகில் உள்ள பள்ளிகளில் பணிமாறுதல் வழங்கவேண்டும்.

தங்களை ஒப்பந்த தொகுப்பூதிய பகுதிநேர திட்ட வேலையில் இருந்து அரசுப் பணிக்கு மாற்றி முழுநேர நிரந்தர ஆசிரியர்களாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 6 ஆண்டாக பல்வேறுமுறைகளில் மேற்கொண்டுவரும் போதிலும்,  கோரிக்கைகளை தமிழக அரசு கண்டு கொள்ளவில்லை. மாறாக 1325 முழுநேர சிறப்பாசிரியர்களை தேர்வு செய்வதற்கான அறிவிக்கையை கடந்த 26.07.2017 அன்று தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டு 23.09.2017ல் தேர்வும் நடத்திவிட்டது.

இதன்படி தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பணி நிலைப்பு உள்ளிட்ட அனைத்து சலுகைகளுடன் 5200 – 20,200 + தர ஊதியம் 2800 என்ற விகிதத்தில் காலமுறை ஊதியம் வழங்கப்படவுள்ளது. ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட வேலையில் உள்ள 16549 பகுதி நேர சிறப்பாசிரியர்களும், இப்போதுதேர்ந்தெடுக்கப்படும் 1325 முழு நேர சிறப்பாசிரியர்களும் ஒரே கல்வித் தகுதிகொண்டவர்கள், ஒரே மாதிரியான முறையில் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பணி செய்பவர்கள். ஒரு பிரிவினருக்கு மாதம் 7,700 ரூபாயும், இன்னொரு பிரிவினருக்கு மாதம் சுமார் 20,000 ரூபாயும் வழங்குவது சரியா? சமநீதியா? என்பதை அரசு சிந்திக்க வேண்டும்.

சமீபத்தில் டெல்லி மாநில சட்டசபையில்  சிறப்பு கூட்டத்தை கூட்டி ஒப்பந்தஅடிப்படையில் பணியாற்றிவரும் 15000 ஆசிரியர்களுக்கு நிரந்தரப்பணிவழங்குவதற்காக மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. கல்வி மேம்பாட்டிற்காக 15000 ஒப்பந்த ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வதாக டெல்லி மாநில முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. அதேபோல் தமிழகத்திலும் பகுதி நேர சிறப்பாசிரியர்களின் குடும்ப நலனையும், வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு தமிழக அரசு மனிதாபமான அடிப்படையில் அனைவருக்கும் பணி நிலைப்பு வழங்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

 - காளிதாஸ்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி