அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு: வட தமிழகத்தை நோக்கி நகரும் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 2, 2017

அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு: வட தமிழகத்தை நோக்கி நகரும்


ஒக்கி புயல் தென் மாவட்டங்களை கடுமையாக சேதப்படுத்திய நிலையில், தற்போது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி தமிழக வட மாவட்டங்களை நோக்கி நகர்ந்து வருகிறது.
தெற்கு அந்தமான் பகுதியில் உருவாகியுள்ள இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெற்று வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கரையை நோக்கி நகரும் என எதிர்பார்ப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ். பாலச்சந்திரன் தெரிவித்தார்.
இதுகுறித்து, வெள்ளிக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது: ஒக்கி புயல், தீவிர புயலாக வலுவடைந்து வெள்ளிக்கிழமை காலை லட்சத் தீவுகள் பகுதியில் உள்ள அமனிதிவி தீவில் இருந்து சுமார் 270 கி. மீ. தூரத்தில் மையம் கொண்டுள்ளது. இதுமேலும் வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்து வரும் 24 மணி நேரத்தில் லட்சத் தீவுகளை கடந்து செல்லும்.
காற்றழுத்தத் தாழ்வு பகுதி: தற்போது தெற்கு அந்தமான் பகுதியில் வலுவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இது அடுத்து வரும் இரு தினங்களில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும். டிசம்பர் 3, 4 தேதிகளில் வடமேற்கு திசையில் வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கரையை நோக்கி நகரக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த அக்.1 முதல் நவ. 27 வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்குப் பருவமழை இயல்பை விட 18 சதவீதம் குறைவாக இருந்தது. இந்த நிலையில், ஒக்கி புயலால் பருவமழை அளவு கணிசமாக உயர்ந்து இயல்பைக் காட்டிலும் 4 சதவீதம் மட்டுமே குறைவாக உள்ளது.
இடியுடன் கூடிய மழை: அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்.
4மாவட்டங்களில்...நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனத்த, மிக கனத்த மழை பெய்யக்கூடும்.
மீனவர்களுக்கு...தென்தமிழகம் மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படும். மீனவர்கள் குமரிக் கடல் மற்றும் அரபிக் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.
ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை மாவட்ட மீனவர்கள், கடலுக்குள் சென்றால் கவனமாக இருக்க வேண்டும். சென்னை மற்றும் புறநகரைப் பொருத்தவரையில் இடைவெளிவிட்டு சிலமுறை மழை பெய்யக் கூடும்.
பாபநாசத்தில் 450 மி.மீ. மழை: அதிகபட்சமாக நெல்லை மாவட்டம், பாபநாசத்தில் 450 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
பிற இடங்களில் பதிவான மழை அளவு (மி.மீல்): மணிமுத்தாறு - 380, கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி - 190, தென்காசி 170, தக்கலை, பேச்சிப்பாறை, கூடலூர்-160, வத்திராயிருப்பு - 150, மணியாச்சி, இரணியல், குளச்சல்-140, நாகர்கோவில், கொடைக்கானல், குன்னூர் -130, குழித்துறை, ஸ்ரீவில்லிப்புத்தூர், சாத்தான் குளம் , செங்கோட்டை, ஸ்ரீவைகுண்டம், சமயபுரம் - 120, ஒட்டப்பிடாரம், திருச்செந்தூர், கோவில்பட்டி - 110 மழை பதிவாகியுள்ளது.
சென்னையில் 80 மி.மீ: சென்னை மாநகரில் கிண்டி அண்ணா பல்கலைக் கழகப் பகுதியிலும், மெரீனா கடற்கரை டிஜிபி அலுவலகப் பகுதியில் தலா 80 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. நுங்கம்பாக்கத்தில் 65 மி.மீ., மழை பதிவானது.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி