கை வைக்குமா? வாடிக்கையாளர் சேமிப்பில் வங்கிகள்... புதிய சட்ட மசோதா சொல்வது என்ன? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 15, 2017

கை வைக்குமா? வாடிக்கையாளர் சேமிப்பில் வங்கிகள்... புதிய சட்ட மசோதா சொல்வது என்ன?

பார்லிமென்டில், மத்திய அரசு தாக்கல் செய்த, எப்.ஆர்.டி.ஐ., என்ற, நிதி தீர்வு மற்றும் சேமிப்பு காப்பீடு சட்ட மசோதா, பொருளாதார நிபுணர்கள், வங்கி வாடிக்கையாளர்களிடையே, சலசலப்பை உண்டாக்கியுள்ளது.
வாடிக்கையாளர்,சேமிப்பு, வங்கிகள், கை வைக்குமா,புதியசட்ட மசோதா,சொல்வது என்னபார்லிமென்ட் கூட்டுக் குழு ஆய்வில் இருக்கும் இம்மசோதா, வரும் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இம்மசோதா, வராக்கடன் உள்ளிட்ட பிரச்னைகளால், வங்கி, காப்பீட்டு நிறுவனம், நிதி சேவை நிறுவனம், கூட்டுறவு வங்கி மற்றும் பங்குச்சந்தை நிறுவனங்கள் திவாலாகும் சூழல் உருவானால், அவற்றை மீட்கவோ, மூடவோ வழிசெய்கிறது.தற்போது, வங்கிகளில், வாடிக்கையாளரின் சேமிப்புத் தொகைக்கு, டி.ஐ.சி.ஜி.சி., என்ற, சேமிப்பு காப்பீடு மற்றும் கடன் உத்தரவாத கழகத்தில், காப்பீடு செய்யப்படுகிறது. இதற்காக வங்கிகள், அக்கழகத்திற்கு, ஆண்டுக்கு, 3,000 கோடி ரூபாய் வரை, காப்பீட்டு தொகை செலுத்துகின்றன. ஆனால், புதிய மசோதாவில், டி.ஐ.சி.ஜி.சி.,யை கலைத்துவிட்டு, 'தீர்வு கழகம்' எனும் அமைப்பு உருவாக்கப்பட உள்ளது. அது, வங்கியின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து, பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கும்.இம்மசோதாவில், வங்கிகள் அல்லது வேறு நிறுவனங்கள் திவாலாகும் சூழலில், வாடிக்கையாளர் சேமிப்பு தொகையை, தீர்வுக் கழகம் வாயிலாக பயன்படுத்தும் அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது.

அதன்படி, வாடிக்கையாளர்களுக்கு, சிறு தொகையை தந்து, மீதித் தொகையை, சில ஆண்டுக்கு பின் பெறக்கூடிய பங்கு மதிப்பாகவோ, பத்திரமாகவோ கொடுப்பர்.'பெயில் இன்' என்ற இந்த அம்சம் தான், பிரச்னைக்கு காரணம். தங்கள் சேமிப்புத் தொகையை, வாடிக்கையாளர்களால், எடுக்க முடியாமல் போகலாம்; வங்கிகள் மூடப்பட்டால், மீதி தொகைக்கு உத்தரவாதம் கிடைக்காது என்ற அச்சம், பரவலாக எழுந்துள்ளது. எனினும் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர், அருண்ஜெட்லி ஆகியோர், 'மக்களின் சேமிப்புக்கு, மத்திய அரசு முழு பாதுகாப்பு அளிக்கும்.வங்கிகளை பலப்படுத்தவே, 2 லட்சத்து, 11 ஆயிரம் கோடி ரூபாய், முதலீடு செய்ய உள்ளோம். அதனால், அச்சம் வேண்டாம். இம்மசோதாவை, பார்லிமென்ட் கூட்டுக் குழு ஆய்வு செய்து வருகிறது. அக்குழு, என்ன சிபாரிசு செய்தாலும், அதை பரிசீலிக்க, மத்திய அரசு தயாராக இருக்கிறது' என, தெரிவித்துள்ளனர்.பண மதிப்பிழப்பு மற்றும், 'ஜன்தன்' கணக்கு நடவடிக்கைகளால், நாட்டின் பெரும்பான்மையான மக்கள், வங்கிகளை சார்ந்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில், மக்களுக்கு, வங்கிகள் மீது நம்பிக்கைநிலைத்திருக்க செய்வது, மத்திய அரசின் கடமை.

எதிர்ப்பது ஏன்?அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்க பொதுச் செயலர் தாமஸ் பிராங்கோ கூறியதாவது: புதிய மசோதாவின்படி வங்கிகள் நம் சேமிப்பு தொகையை எப்போது வேண்டுமானாலும் எடுக்கலாம். வங்கிகள் திவால் ஆகும் நிலையில் புதிதாக அமையவுள்ள தீர்வுக் கழகம் தலையிட்டு சேமிப்பு தொகையை தராமல் நிறுத்தி வைக்க உத்தரவிடலாம்; 'வங்கியின் நிலைமை சீராகும்போது தான் மீதித் தொகையை தருவோம்' என்பர்.சைப்ரஸ் நாட்டில் இச்சட்டம் அமலான பின் மக்களின் சேமிப்பில் 47.5 சதவீத தொகை மட்டும் தான் கிடைத்தது.இங்கு தற்போது டி.ஐ.சி.ஜி.சி., கலைக்கப்படுவதால் இனி உத்தரவாதம் கிடைக்காது. தற்போது ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளை திவாலாக விடுவதில்லை. அதுபோன்ற நிலை வந்தால் வேறு வங்கிகளுடன் இணைக்கிறது.1969 முதல் இதுவரை 26 தனியார் வங்கிகள் உள்பட 50க்கும் மேற்பட்ட வங்கிகளை ரிசர்வ் வங்கி காப்பாற்றியுள்ளது.

இனி அது சிரமம். இது அமெரிக்காவில் நடைமுறைக்கு வந்துள்ளது; அங்கு 2008ல் வங்கிகள் திவாலானபோது கொண்டு வரப்பட்ட சட்டம்; அது, நமக்கு பொருந்தாது. அமெரிக்கர்கள் கடனை நம்பி வாழ்பவர்கள்; நம்மவர்கள் அவசர தேவைக்காக சேமிப்பவர்கள். நம் நாட்டில் வங்கி சேமிப்புகளில் 91 சதவீதம் ஒரு லட்சம் ரூபாய்க்கு குறைவானவை.வங்கிகளை நம்பி சாமானிய மக்கள் பணம் போட்டு வைத்துள்ளனர். இந்த சட்டம் அப்படியே அமலானால் அந்த நம்பிக்கை போய் விடும். வங்கிகளில் இருந்து பணத்தை எடுக்க துவங்குவர்; வங்கிகளுக்கு வரவே அஞ்சுவர். இவ்வாறு கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி