சம்பள நீட்டிப்பு ஆணை வெளியிடாததால் 3 மாதமாக ஊதியம் கிடைக்காமல் தவிக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 15, 2018

சம்பள நீட்டிப்பு ஆணை வெளியிடாததால் 3 மாதமாக ஊதியம் கிடைக்காமல் தவிக்கும் பட்டதாரி ஆசிரியர்கள்

சம்பள நீட்டிப்பு ஆணை வெளியிடப்படாததால், மாநிலம் முழுவதும் உள்ள 100 பட்டதாரி ஆசிரியர்கள் 3 மாதமாக ஊதியம் பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த 2007ம் ஆண்டு 100 வரலாற்று பிரிவு பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் புதிதாக தோற்றுவிக்கப்பட்டன.

இந்த பணியிடங்கள் அனைத்தும், ஏஏ தற்காலிக பிரிவில் (ஏஏ டெம்ப்ரரி ஹெட்) அரசாணை எண் 106ன் கீழ் கொண்டு வரப்பட்டன. இந்த 100 பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் அனைத்து ஆசிரியர்களுக்கும், இந்த சம்பள பட்டியலுக்கு கீழ் தான் ஊதியம் வழங்கப்படும். இந்த ஆசிரியர்களுக்கு, சம்பள நீட்டிப்பு செய்து ஆண்டுதோறும் அரசாணை வெளியிடப்பட வேண்டும்.

அதனை அடிப்படையாக கொண்டு ஒவ்வொரு மாதமும் ஊதியம் வழங்கப்படும். கடைசியாக கடந்த 2016ம் ஆண்டு ஜூலை மாதம், சம்பள நீட்டிப்பு செய்து அரசாணை  வெளியிடப்பட்டது. இதனை அடிப்படையாக கொண்டு 100 வரலாற்று பட்டதாரி ஆசிரியர்களுக்கும், கடந்த ஜூன் மாதம் வரை ஊதியம் வழங்கப்பட்டு வந்தது.

ஆனால், அதன்பின்னர் 6 மாதங்களை கடந்த நிலையில், இன்று வரை சம்பள நீட்டிப்பிற்கான ஆணை வெளியிடப்படவில்லை. இதனால், ஊதியம் பெறமுடியாமல் பட்டதாரி ஆசிரியர்கள் தவித்து வருகின்றனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் கூறியதாவது: .

கடந்த ஜூன் மாதம் வெளியிட வேண்டிய சம்பள நீட்டிப்பு ஆணை, இதுவரை வெளியாகவில்லை. இதுபோன்ற சமயங்களில், 3 மாதத்தை சான்றிதழ் காலமாக கருத்தில் கொண்டு ஊதியம் வழங்க பள்ளிக்கல்வி இயக்குநருக்கு அதிகாரம் உள்ளது.

அதனை பயன்படுத்தி, கடந்த ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதம் ஊதியம் கிடைத்தது. ஆனால், அதன்பின்னர் சம்பளம் அளிக்க அவருக்கு அதிகாரம் இல்லாததால், அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்திற்கான ஊதியம், இதுநாள் வரை கிடைக்கவில்லை. இதனால், பல்வேறு பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளோம்.

இதுகுறித்து முறையிட்டால், சம்பள நீட்டிப்பு ஆணை வராமல், தங்களால் ஒன்றும் செய்ய முடியாது என கைவிரித்து விட்டனர். ஆணை வெளியிடாததால், 7வது சம்பள உயர்வு அமல்படுத்துவதிலும், நிலுவைத் தொகை பெறுவதிலும் பல்வேறு சிக்கல் எழுந்துள்ளது.

தற்போது பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகிறோம். எனவே, தமிழக முதல்வர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் துறை உயர் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, 100 ஆசிரியர்களுக்கும் நிலுவை தொகையுடன், ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பட்டதாரி ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி