அரசுடன் நடத்திய ஊதிய உயர்வு பேச்சு தோல்வி: பஸ் ஸ்டிரைக் துவங்கியது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 5, 2018

அரசுடன் நடத்திய ஊதிய உயர்வு பேச்சு தோல்வி: பஸ் ஸ்டிரைக் துவங்கியது

அமைச்சருடன் நேற்று நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையொட்டி, தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று மாலை முதல் கால வரையற்ற வேலை நிறுத்தம் போராட்டத்தை ஊழியர்கள் தொடங்கினர்.
இதனால், தமிழகம் முழுவதும் பஸ் போக்குவரத்து முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. புதுவையிலும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் என்று ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். தமிழக அரசு ேபாக்குவரத்து ஊழியர்களுக்கு 3 ஆண்டுகளுக்கொரு முறை ஊதிய ஒப்பந்தம் போடப்படுகிறது. தற்போது 12வது ஊதிய ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஒப்பந்தம் கடந்த 2016 ஆகஸ்ட் மாதத்துடன் முடிந்தது. 1.9.2016ல் 13வது ஊதிய ஒப்பந்தம் அமல்படுத்தி இருக்க வேண்டும். ஆனால், கடும் நிதி நெருக்கடி காரணமாக ஊதிய உயர்வு வழங்காமல் அரசு இழுத்தடித்து வருகிறது.

இதனால், 1.43 லட்சம் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். புதிய ஒப்பந்தம் தொடர்பாக இதுவரை 11 முறை தொழிற்சங்கங்கள் தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் பலன் அளிக்கவில்லை. இதற்கிடையில் மாதம் தோறும் தொழிலாளர்களின் பிஎப் உள்ளிட்ட பண பலன்களையும் அரசு பிடித்தம் செய்து வருகிறது. அந்த வகையில் ரூ.7,500 கோடி நிலுவை தொகை பாக்கி உள்ளது. ஊதிய உயர்வு வழங்க வேண்டும், நிலுவை தொகையை உடனே தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் பல முறை போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக, கடந்த ஆண்டு ேம மாதம் 3 நாட்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.

இருப்பினும் அரசு தரப்பில் அடிக்கடி பேச்சுவார்த்தை மட்டும் நடத்தி சமாதானப்படுத்தி வருகின்றனர். அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உறுதியளித்தப்படி இன்னும் போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இதனால், ேபாக்குவரத்து தொழிலாளர்கள் அரசு மீது கடும் கொந்தளிப்பில் உள்ளனர்.  இந்த நிலையில், கடந்த டிசம்பர் 14, 15ம் தேதிகளில் சென்னையில் இரண்டு நாள் காத்திருப்பு போராட்டத்தில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இரண்டாம் நாள் முடிவில் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். இதனால், தமிழகம் முழுவதும் போக்குவரத்து முடங்கியது. இதை தொடர்ந்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போக்குவரத்து தொழிலாளர் சங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது, அமைச்சர் தரப்பில் டிசம்பர் மாத இறுதிக்குள் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று உறுதியளித்தார். ஆனலும், ஜனவரி மாதம் ஆன நிலையில் தற்போது வரை ஊதிய உயர்வு வழங்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கிடையில் ஏற்கனவே கூறிய படி கடந்த வாரம் புதன் கிழமை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் சென்னையில் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது அரசு தரப்பில் 3 பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. அதாவது, 2.35 மடங்கு ஊதிய உயர்வு வழங்கினால் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒப்பந்தம் போடப்படும். 2.44 மடங்கு ஊதிய உயர்வு வழங்கினால் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒப்பந்தம் போடப்படும். 2.57 மடங்கு வழங்கினால் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒப்பந்தம் போடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதற்கு தொழிற்சங்க நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 2.57 மடங்கு ஊதிய உயர்வு வழங்கி தற்போது நடைமுறையில் உள்ள படி 3 ஆண்டுக்கு ஒரு முறைக்கு ஒப்பந்தம் போட வேண்டும் என்று திட்டவட்டமாக தெரிவித்தனர். அதற்கு அமைச்சர் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து பேச்சுவார்த்தை ஜனவரி 4ம் தேதி தள்ளி வைக்கப்பட்டது.  இந்த பரபரப்பான சூழ்நிலையில் நேற்று காலை 12.45 மணியளவில் குரோம்பேட்டை பணிமனையில் உள்ள ஓட்டுனர் பயிற்சி மையத்தில் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது.  இதில், நிர்வாகம் தரப்பில் போக்குவரத்து துறை செயலாளர் டேவிதார், சென்னை மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் கிருஷ்ண மூர்த்தி உட்பட 8 கோட்ட நிர்வாக இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.

தொழிற்சங்கம் தரப்பில் தொமுச பொதுச்செயலாளர் சண்முகம், சிஐடியு மாநில தலைவர் சவுந்திரராஜன் உட்பட 46 சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர். அப்போது, தொழிற்சங்கங்கள் தரப்பில் 2.57 மடங்கு ஊதிய உயர்வு கண்டிப்பாக வேண்டும் என்று தெரிவித்தனர். உடனே அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தொழிற்சங்கங்கள் கேட்கும் அளவுக்கு ஊதிய உயர்வு வழங்கினால், நிதிநிலைமையை சமாளிக்க முடியுமா? அதற்கான நிதி ஆதாரம் உள்ளதா? என்று விவாதித்தார். அப்போது, அதிகாரிகள் நிச்சயம் முடியாது. ஏற்கனவே, நாள் ஒன்றுக்கு ரூ.9 கோடி போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இந்த சூழ்நிலையில் 2.35 முதல் 2.40 மடங்கு வரை ஊதிய உயர்வு வழங்கினால் மட்டுமே ஓரளவுக்கு சமாளிக்க முடியும் என்று தெரிவித்தனர்.

 இதை தொடர்ந்து தொழிற்சங்க நிர்வாகிகளை சந்தித்த அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் 2.40 மடங்கு ஊதிய உயர்வு தர முடியும். நிதி நிலைமையை கருத்தில் கொண்டு, இதை ஏற்று கொள்ளுங்கள் என்று தெரிவித்தார். இதை கேட்ட தொழிற்சங்கத்தினர் அமைச்சருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எனவே, 2.44 மடங்கு ஊதிய உயர்வுக்கு சம்மதம் தெரிவித்து விட்டு தற்ேபாது அதை விட குறைவாக வழங்குவதை நிச்சயம் ஏற்க முடியாது. நாங்கள் கூறிய படி 2.57 மடங்கு ஊதிய உயர்வு வேண்டும்’ என்றனர். இதனால், பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டது.  இந்த நிலையில், மாலை 5 மணிக்கு மேலாகியும் பேச்சுவார்த்தை முடிவுக்கு வரவில்லை.

இதனால், கோபமடைந்த தொழிலாளர்கள் மாலை 5.30 மணிக்கு பிறகு சென்னை புறநகர் பகுதிகளில் பேருந்துகளை ஆங்காங்கே நிறுத்தி திடீரென வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து பேச்சுவார்த்தை தொடர்பான தகவல்கள் அனைத்து டிப்போக்களுக்கும் தெரியவந்தது. இதையடுத்து பூந்தமல்லி, திருவான்மியூர், ஐயப்பன் தாங்கல், பிராட்வே, தண்டையார்பேட்டை, எண்ணூர், திருவொற்றியூர், குன்றத்தூர், மந்தவெளி, அடையாறு, கே.ே.க.நகர் உட்பட பல்வேறு டிப்போக்களில் இருந்து பஸ்களை நிறுத்தி திடீரென ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.   சென்னையில் சில இடங்களில் பஸ்களில் பயணிகள் இருந்தும் கூட நடுவழியில் நிறுத்தி விட்டு டிரைவர்கள் இறங்கிச் சென்று விட்டனர். இதனால், பயணிகள் கடுமையாக அவதிப்பட்டனர். குறிப்பாக, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அலுவலகத்திற்கு சென்று வீடு திரும்புவோர் பரிதவித்து நின்றனர். எந்த அறிவிப்புமின்றி பஸ்களை நிறுத்தியதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

 பல இடங்களில் டிரைவர்களுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எங்களுக்கு ஊதிய உயர்வு தான் முக்கியம். அது கிடைக்கும் வரை பஸ்சை எடுக்க மாட்டோம் என்று டிரைவர்கள் கூறி அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதனால், சென்னை முழுவதும் நேற்று மாலை 5.30 மணி முதல் பஸ் போக்குவரத்து முடங்கியது. இதனால், மாணவ, மாணவிகள், அலுவலகம் முடித்து விட்டு பொதுமக்கள் வீடு திரும்புவதற்காக ஆங்காங்கே பஸ் நிறுத்தத்தில் பல மணி நேரம் காத்து கிடந்தனர்.  போக்குவரத்து ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தம் குறித்த தகவல் பிற மாவட்டங்களுக்கும் பரவியது.

இதை தொடர்ந்து திருச்சி, சேலம், வேலூர், தஞ்சாவூர், கடலூர், கும்பகோணம், விழுப்புரம், திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, திருப்பூர். கரூர், திருவாரூர்,  நாகப்பட்டினம்,  நெல்லை, நாகர்கோவில் உட்பட மாநிலம் முழுவதும் தொழிலாளர்கள் திடீரென வேலை நிறுத்ததில் ஈடுபட்டனர்.  இதனால், நகர் மற்றும் கிராமபுறங்களுக்கு செல்ல வேண்டிய பஸ் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். ஒரு சில இடங்களில் தனியார் பஸ்களில் பொதுமக்கள் அதிக கட்டணம் கொடுத்து சென்றனர். தொலைத்தூரத்திற்கு செல்லும் பஸ்கள் திடீரென நிறுத்தப்பட்டதால் வெளியூர் செல்ல வேண்டிய பயணிகள் செய்வது அறியாமல் தவித்தனர்.

பின்னர் வேறு வழியின்றி அவர்கள், அதிக கட்டணம் கொடுத்து தனியார் பஸ்களிலும், ஆட்டோக்கள், கார்களிலும் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. பல மணி நேரம் காத்திருந்த பலரும் பல கி.மீ.தூரம் நடந்தே வீடுகளுக்கு சென்றனர். இதற்கிடையில் அமைச்சருடனான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்தது. சரியாக இரவு 8 மணி வரை பேச்சுவார்த்தை நீடித்தது. இறுதியாக 2.44 மடங்கு ஊதிய உயர்வு தர அரசு தயாராக உள்ளதாக அமைச்சர் தெரிவித்தனர். மேலும், 6 ஆண்டுகளுக்கு கீழ் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மட்டும் 2.57 மடங்கு தருவதாகவும் தெரிவித்தார். ஆனால், தொழிற்சங்கங்கள் இதை ஏற்க மறுத்தனர். சுமார் 8 மணி நேரம் பேச்சுவார்த்தை நடந்த நிலையில், உடன்பாடு எட்டபடாததை தொடர்ந்து பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இதை தொடர்ந்து தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, டிடிஎஸ்எப், எச்எம்எஸ், பிடிஎஸ், ஏஏஎல்எல்எப் உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர். இன்றும் பஸ்கள் இயங்காது என்று தொழிற் சங்கத்தினர் அறிவித்துள்ளதால், பஸ்களை இயக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் பஸ் டெப்போக்களில் போலீசாரை நேற்று இரவு முதல் குவித்துள்ளனர். மேலும், நிரந்தரம் இல்லாத ஊழியர்களை வைத்து பஸ்களை இயக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

வெளியூர் பஸ்கள் நிறுத்தம்
போக்குவரத்து தொழிற்சங்கள் வேலை நிறுத்தம் போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளதை அடுத்து நேற்று இரவு 8.30 மணி முதல் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு இயக்கப்படும் பல்வேறு விரைவு பேருந்துகளும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் 22,500 பஸ்கள் உள்ளன. இன்று இந்த பஸ்கள் இயங்காது என்று தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், இப்பிரச்னையில் அரசு தலையீட்டு போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று பொதுமக்களும் வலியுறுத்தியுள்ளனர்.

கோயம்பேட்டில் பொதுமக்கள் போராட்டம்
கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து மாநகரத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பேருந்து இயக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால், அங்கு கூடியிருந்த பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். எந்தவித முன்னறிவிப்பின்றி பஸ்கள் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து தொழிலாளர்களுடன் பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் சில நிமிடங்கள் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் பயணிகளை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

முன்பதிவு செய்த பயணிகள் ஏமாற்றம்
கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் அரசு விரைவு போக்குவரத்தில் முன்பதிவு செய்து பயணிகள் செல்வது வழக்கம். அந்த வகையில் நேற்று வெளியூர்களுக்கு செல்வதற்காக பலர் முன்பதிவு செய்தனர். இந்த நிலையில், நேற்று திடீரென போக்குவரத்து தொழிலாளர்கள் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்தனர். இதனால் வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால், முன்பதிவு செய்த பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். ஏற்கனவே ஸ்டிரைக் அறிவிக்கப்பட்ட பிறகு வெளியூர்களுக்கு முன் கூட்டி சென்ற பஸ்கள் மட்டுமே இயங்கின.

வேலை நிறுத்தத்தை தவிர வேறு வழியில்லை தொமுச பொதுச்செயலாளர் பேட்டி
தொமுச பொதுச்செயலாளர் சண்முகம்:  குறைந்த பட்ச ஊதியம் 17 ஆயிரத்து 700 மட்டுமே வழங்கப்படும், ஊதிய விதிதத்தை 2.57 சதவீதம் பெருக்கி தற்போது உள்ள ஊதியம் உயர்வு என்பது 2.44 என பெருக்குவது என குழப்பமான ஒரு கணக்கீடுகளை செய்வதினால் 1 லட்சத்து 40 ஆயிரம் தொழிலாளர் மத்தியில்  பெரும் ஏற்ற தாழ்வு ஏற்படும் என அரசுக்கு விளக்கினோம். ஆனால் அரசு இதனை ஏற்கவில்லை.

மேலும், இது குறித்து சிஐடியு மாநில தலைவர் சவுந்தரராஜன்: வேலை நிறுத்தத்தில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. அரசின் அணுகு முறையை மாற்ற வேலை நிறுத்தத்தை தவிர வேறு வழியில்லை. வேலை நிறுத்தத்திற்கு அரசு தான் காரணம். அரசு தற்காலிக தொழிலாளர்களை கொண்டு பேருந்து இயக்கினால் எங்கள் எதிர்வினை கடுமையாக இருக்கும். அரசு எப்போது பேச்சுவார்த்தைக்கு அழைத்தாலும் கண்டிப்பாக செல்வோம்.  

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி