காப்பி அடிப்பதை தடுக்க நடவடிக்கை: பிகாரில் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் ஷூ, சாக்ஸ் அணிந்து வரத் தடை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 20, 2018

காப்பி அடிப்பதை தடுக்க நடவடிக்கை: பிகாரில் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் ஷூ, சாக்ஸ் அணிந்து வரத் தடை

பிகார் மாநிலத்தில் 10ஆம் வகுப்புத் தேர்வில் மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்கும் வகையில், அந்தத் தேர்வில் கலந்து கொள்ளும் மாணவர்கள் காலணி (ஷூ), காலணி உறை ( சாக்ஸ்) ஆகியவை அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிகார் தலைநகர் பாட்னாவில் அந்த மாநில பள்ளித் தேர்வுத் துறை தலைவர் ஆனந்த் கிஷோர் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
பிகாரில் வரும் 21ஆம் தேதியன்று 10ஆம் வகுப்புத் தேர்வு தொடங்கவுள்ளது. இந்தத் தேர்வில் கலந்து கொள்வோர் காப்பி அடித்தல் உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில், அவர்கள் ஷூ, சாக்ஸ் அணிந்து வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், ஷூ, சாக்ஸ்-க்குப் பதிலாக, தேர்வு எழுதவரும் மாணவர்கள், சாதாரண ஸ்லிப்பர் வகை காலணிகளை அணிந்து வர எந்தத் தடையும் இல்லை.
இதேபோல், மாணவர்களுக்கு ஷூ, சாக்ஸ் அணிந்து வர இதற்கு முன்பும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்துதான், தற்போதும் அந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இனி எதிர்காலத்திலும் இந்தத் தடை தொடரும்.
இதுதொடர்பான உத்தரவு, அனைத்து மாவட்ட கல்வித் துறை அதிகாரிகள், மாணவர்கள், தேர்வு கூட கண்காணிப்பாளர்களுக்கு அனுப்பப்பட்டுவிட்டன என்றார் ஆனந்த் கிஷோர்.
நியாயப்படுத்தும் பிகார் அரசு: பிகார் மாநில பள்ளித் தேர்வு துறையின் இந்நடவடிக்கை குறித்து, அந்த மாநில கல்வித் துறை அமைச்சர் கிருஷ்ண நந்தன் பிரசாத் வர்மா கருத்து கூறியபோது, அதை சரியான நடவடிக்கைதான் என்று நியாயப்படுத்தினார். இதுகுறித்து அவர் கூறுகையில், "பிகார் பள்ளித் தேர்வு துறை சரியான முடிவையே எடுத்துள்ளது. மொத்தம் 17 லட்சம் மாணவர்கள், இத்தேர்வில் கலந்து கொள்கின்றனர்.

இதில் அனைத்து மாணவர்களையும் சோதிப்பது என்பது கடினமான காரியம் ஆகும்' என்றார்.
முன்னாள் அமைச்சர் கண்டனம்: ஆனால், முன்னாள் கல்வித் துறை அமைச்சர் அசோக் சௌதரி, இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "இந்த நடவடிக்கை சரியான நடவடிக்கை அல்ல; நான் கல்வித் துறை அமைச்சராக இருந்திருந்தால், இதற்கு ஒப்புதல் கொடுத்திருக்க மாட்டேன்' என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி