திறந்தநிலை கல்வி நிறுவனங்களில் பிளஸ் 2 படிப்பவர்களுக்கு நீட் தேர்வு எழுத அனுமதி கிடையாது: இந்தியமருத்துவ கவுன்சில் உத்தரவால் 5 ஆயிரம் பேர் பாதிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 16, 2018

திறந்தநிலை கல்வி நிறுவனங்களில் பிளஸ் 2 படிப்பவர்களுக்கு நீட் தேர்வு எழுத அனுமதி கிடையாது: இந்தியமருத்துவ கவுன்சில் உத்தரவால் 5 ஆயிரம் பேர் பாதிப்பு

திறந்தநிலை கல்வி நிறுவனங்களில் பிளஸ் 2 படிப்பவர்கள் நீட் தேர்வு எழுத முடியாது என்ற இந்திய மருத்துவ கவுன்சிலின் திடீர் உத்தரவால் 5 ஆயிரம் மாணவர்களின் டாக்டர் கனவு தகர்ந்துள்ளது.
இந்த ஆண்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு ( நீட்) மே 6-ம் தேதி நடைபெறும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. நாடுமுழுவதும் இருந்து மாநிலப் பாடத்திட்டங்கள், சிபிஎஸ்இஉள்ளிட்ட மத்திய பாடத்திட்டங்களில் படிக்கும் பிளஸ் 2 மாணவர்கள் நீட் தேர்வுக்காக www.cbseneet.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து வருகின்றனர்.இந்நிலையில், தேசிய திறந்தநிலை கல்வி நிறுவனத்தில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாது என்று இந்திய மருத்துவ கவுன்சிலின் (எம்சிஐ) உத்தரவின்படி சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் நாடுமுழுவதும் என்ஐஓஎஸ் மற்றும் மாநில அரசுகளின் திறந்தநிலை கல்வி நிறுவனங்களின் பாடத்திட்டங்களில் மருத்துவக் கனவோடு பிளஸ் 2 படிக்கும் சுமார் 5 ஆயிரம் மாணவர்கள் டாக்டராக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.திறந்தநிலை கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்லாமல் நேரடி யாக பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர். அந்த இடைப்பட்ட காலத்தில் நீட் போன்ற போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி மையங்களில் சேர்ந்து படிக்கின்றனர். அவர்கள் எளிதாக போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதால், பள்ளிகளில் சேர்ந்து படிக்கும் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். அதனால், திறந்தநிலை பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் நீட் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

864 மாணவர்கள் தகுதி

இது தொடர்பாக தேசிய திறந்தநிலை கல்வி நிறுவனத்தின் தமிழகம் மற்றும் புதுச்சேரி மணடல இயக்குநர் பி.ரவி கூறியதாவது:மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் தேசிய திறந்தநிலை கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.என்ஐஓஎஸ் என்பது சிபிஎஸ்இ-க்கு இணையான மத்திய பாடத்திட்டமாகும். கடந்த 2012-ம் ஆண்டு என்ஐஓஎஸ் பாடத்திட்டத்தில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் நீட் தேர்வு எழுதலாம் என்று இந்திய மருத்துவ கவுன்சில் (எம்சிஐ) அறிவித்திருந்தது. அதன்படி ஆண்டுதோறும் என்ஐஓஎஸ் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் நீட் தேர்வு எழுதி தகுதிபெற்று மருத்துவம் படித்து வருகின்றனர்.கடந்த ஆண்டு நடந்த நீட் தேர்வுக்கு என்ஐஓஎஸ் பாடத்திட்டத்தில் படித்த 2,958 மாணவர்கள் விண்ணப்பித்தனர். இதில் 2,710 மாணவர்கள் தேர்வு எழுதினர். நீட் தேர்வில் 864 மாணவர்கள் தகுதி பெற்று, மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து படித்து வருகின்றனர்.இந்த ஆண்டு என்ஐஓஎஸ் பாடத்திட்டத்தில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு செய்முறை தேர்வு இல்லை என்பதால், அவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அனுமதி இல்லை என்று எம்சிஐ தெரிவித்துள்ளது.

இந்த உத்தரவு மாநில அரசுகள் நடத்தும் திறந்தநிலை கல்வி நிறுவனங்களில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கும் பொருந்தும் என்று தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் டாக்டராக வேண்டும் என்ற கனவோடு பிளஸ் 2 படிக்கும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் நிலை மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது.இவ்வாறு பி.ரவி தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி