தமிழ்நாட்டில் 43 கல்லூரிகளில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகளின் கல்வி தரத்தை மேம்படுத்த நடவடிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 19, 2018

தமிழ்நாட்டில் 43 கல்லூரிகளில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகளின் கல்வி தரத்தை மேம்படுத்த நடவடிக்கை

தமிழ்நாட்டில் புற்றீசல் போல தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகள் பெருகி வருகின்றன. பல கல்லூரிகளில் சேர்வதற்கு மாணவர்கள் முன் வருவதில்லை.
பல கல்லூரிகளில் பிரமாண்டமாக விளம்பரங்கள் செய்து, தரமான கட்டமைப்பு, டாக்டர் பட்டம் பெற்ற ஆசிரியர்கள், பட்டம் பெற்ற பின்னர் வேலை வாய்ப்பு வசதிகள் பெற வளாக தேர்வுக்கு முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் என கவர்ச்சியான வாக்குறுதிகள் அளித்து மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.என்ஜினீயரிங் கல்லூரிகள் பெருகி வருகிற அளவுக்கு கல்வி யின் தரம் பெருகவில்லை. இது கல்வியாளர்களுக்கும், பெற்றோர்களுக்கும் கவலை அளிப்பதாக அமைந்து உள்ளது.

தமிழ்நாட்டில் முதல் பருவத்தேர்வில் (செமஸ்டர் தேர்வு) 43 என்ஜினீயரிங் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூடவெற்றி பெறவில்லை என்று வெளியாகி உள்ள தகவல் கவலை அளிப்பதாக அமைந்து உள்ளது.80 அரசு என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்பட 800 தொழில் நுட்ப கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து போய் இருப்பது மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறைக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் அவற்றை மூடும் அபாயம் உள்ளது. செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்று சொல்லி இந்த கல்லூரிகளுக்கு ஏற்கனவே இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அந்தக் கல்லூரிகளை மூடும் சூழல் உருவாகலாம்.25 சதவீத அளவுக்கு கூட மாணவர்கள் சேர்க்கை இல்லாத படிப்புகளை கல்லூரி நிர்வாகங்களே மூடும் மன நிலையில் உள்ளன.இந்த நிலையில்தான் என்ஜினீயரிங் கல்லூரிகளில் கல்வி தரத்தை மேம்படுத்தும் நடவடிக்கையில் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் இறங்கி உள்ளது.குறிப்பாக, என்ஜினீயரிங் படிக்கிற மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகள் பெருகும் வகையில், கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்கு அகில இந்திய தொழில் நுட்ப கல்வி கவுன்சில் பல நடவடிக்கைகளுக்கு திட்டமிட்டு உள்ளது. அவற்றில் குறிப்பிடத்தக்கவை:-

* மாணவர்கள் சேர்க்கையின்போது, தொழில் நுட்ப கல்விக்கு ஏற்ற வகையில் மொழி அறிவாற்றலை பெறுவதற்கு கட்டாய பயிற்சி பெற வைக்கப்படுவார்கள்.

* தற்போதைய பாடத்திட்டத்தை பரிசீலிக்கிற வகையில், மாறிவரும் சூழலுக்கு ஏற்ப பொருத்தமான மாற்றங்களை ஏற்படுத்தவும், ஒவ்வொரு பாடத்துக்கும் தொழில்துறை ஆலோசனைக்குழுவை ஒவ்வொரு தொழில் நுட்ப பல்கலைக்கழகமும் மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் இந்தப் பணிகள் முடிந்து விட வேண்டும்.

* மாணவர்கள் இளநிலை பட்டப்படிப்பை முடிப்பதற்கு முன்பாக தலா 8 வாரங்கள் வீதம் 3 பயிற்சிகள் பெற வேண்டும். இதில் மாணவர்கள் பயிற்சிக்கு தொழில் நிறுவனத்தை கண்டறிவதற்கு அந்தந்த கல்லூரிகள் உதவ வேண்டும். அந்த பொறுப்பு, கல்லூரிகளுக்கு உண்டு.

* வேலைக்கு செல்வதற்கு வசதியாக, இளம்நிலை பட்டப்படிப்பை முடித்து வெளியேறுகிறபோது அனைத்து மாணவர்களுக்கும் தொழில் நுட்பத்திலும், மென்திறனிலும் பணியாற்றும் வகையில் நிர்வாகத்திறன்கள், தொழில் திறன்கள், தலைமைத்துவ திறன்கள், தகவல் தொடர்பு திறன்கள், தொழில் நுட்பத்திறன்கள், குழுவாக பணியாற்றும் திறன்களை வழங்கி விட வேண்டும்.

* மாணவர்களுக்கு தேசிய வேலைவாய்ப்பு மேம்பாட்டு திட்டம், வேலை வாய்ப்பு மேம்பாட்டு திட்டம் ஆகியவற்றைஅகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் செயல்படுத்தும்.

* ‘சுவாயம்’ தளத்தின் மூலம் ஆசிரியர்களின் கற்பிக்கும்நுட்பங்களை மேம்படுத்துவதற்கு ஆன்லைன் படிப்புகள் உருவாக்கப்பட்டு வழங்கப்படும். குறைந்த பட்சம் 50 சதவீத ஆசிரியர்கள் இந்தப் பயிற்சியை பெற முன்வந்தால் மட்டுமே, எந்த ஒரு என்ஜினீயரிங் கல்லூரிக்கும் அங்கீகாரம் அளிக்கப்படும்.

* கல்லூரிகளின் துறைத் தலைவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ‘சுவாயம்’ தளத்தின் மூலம் தலைமைத்துவ பயிற்சிபெறச்செய்ய வேண்டும்.

* தொழில் நுட்ப கல்லூரிகளில் கற்பிக்கப்படுகிற படிப்புகளில் பாதி அளவுக்காவது என்.பி.ஏ. என்னும் தேசிய அங்கீகார வாரியத்திடம் 2022-ம் ஆண்டுக்குள் அங்கீகாரம் பெற்று விட வேண்டும். இதில் நம்பத்தகுந்த முன்னேற்றம் காணப்படாவிட்டால், கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.

மேற்கண்டவற்றை என்ஜினீயரிங் கல்லூரிகள் மேற்கொள்வற்கு தேவையான நடவடிக்கைகளை அகில இந்திய தொழில் நுட்ப கல்வி கவுன்சில் மேற்கொள்கிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி