தமிழக பள்ளி கல்வித்துறையில் தொடர்ந்து நிராகரிக்கப்படும் “கணினி அறிவியல்”பாடம்!!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 18, 2018

தமிழக பள்ளி கல்வித்துறையில் தொடர்ந்து நிராகரிக்கப்படும் “கணினி அறிவியல்”பாடம்!!!

வணக்கம்நவீன தொழில்நுட்பங்கள் தழைத்துவிட்ட இன்றைய கணினி யுகத்தில், ஒவ்வொரு துறையிலும் கணினியின் பயன்பாடானது இன்றியமையாததாக மாறிவிட்டது.
அல்ஜிப்ரா முதல் ஆதார் கார்டு வரையில் கணினியின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.அதேபோன்று, காலத்திற்கு ஏற்றாற்போல் கல்வியிலும், கலைத்திட்டத்திலும் மாற்றம் கொண்டுவர வேண்டியது மிகவும் அவசியமாகும். நாட்டின் எதிர்காலத்தின் அடிப்படையை சிறப்பாக கட்டமைத்திட பள்ளிக்கல்வியின் அங்கம் மிக முக்கியமான ஒன்றாகும். “நம் நாட்டின் செல்வம் வங்கிகளில் இல்லை; பள்ளிகளில் உள்ளது” என்ற கூற்று கல்வியின் சிறப்பை பறைசாற்றுகின்றது. இவ்வாறு கல்வித்துறையில் நவீன தொழில்நுட்பங்களும், அதனை செம்மையான முறையில் பயிற்றுவிக்க ஆசிரியர்களும் மிக முக்கிய அங்கமாகத் திகழ்கின்றனர்.கல்வியில் நவீன தொழில்நுட்பம் என்றாலே, அதில் “கணினி அறிவியல்” முதலாவது இடத்தைப் பிடித்துவிடுகிறது. இதேபோன்று பாடத்திட்டம் மற்றும் கலைத்திட்டம் போன்றவற்றில் “கணினி அறிவியலின்” பங்கீடு நிகழ்காலத்தில் மிக முக்கியத் தேவையாக உருவெடுத்துள்ளது.

தற்போது தமிழகத்தைத் தவிர மற்ற அனைத்து மாநிலங்களின் அரசு பள்ளிகளிலும் “கணினி அறிவியல்” பாடம் ஒரு முக்கியப் பாடமாக மாணவர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி போன்றவற்றில் கணினி அறிவியல் பாடம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், தமிழகத்தில் மட்டும் தான் இன்றுவரையில் “கணினி அறிவியல்” பாடம் அங்கீகாரம் இல்லாதநிலையில் உள்ளது.இதனால், அரசு பள்ளிகளில் பயிலும் 90,00,000 மாணவர்கள் கணினி அறிவியல் பற்றிய அறிவில் பின்தங்கியே உள்ளனர். ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையில் “கணினி அறிவியல்” பாடம் இல்லாத நிலை பள்ளி கல்வித்துறையில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது. இதனால், மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழக பள்ளி கல்வித்துறை “கணினி அறிவியல்” பாடத்தில் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது.அரசு பள்ளிகளில் “ஸ்மார்ட் கிளாஸ்” வகுப்பறைகள், டிஜிட்டல் முறையிலான கரும்பலகைத் திட்டம், கணினி வழிக் கற்றல் திட்டம், விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம், இலவசமாக விரலிகள் வழங்கிடும் திட்டம், செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்கள் என மத்திய அரசும், மாநில அரசும் அரசு பள்ளிகளின் கல்வித்தரத்தை உயர்த்திட செயல்படுத்திடும் திட்டங்கள் அனைத்தும் சிறப்பானவை. ஆனால், மற்ற துறைகளைப் போன்று கணினி அறிவியலுக்கும் பி.எட்., முடித்த கணினி ஆசிரியர்களை நியமனம் செய்யத் தயங்குவது கல்வியில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

1992-ஆம் ஆண்டு முதல் தமிழக அரசு பள்ளி, மேல்நிலை வகுப்புகளில் கணினி அறிவியல் பாடம் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இன்றுவரையில் கணினி அறிவியல் பாடமும், கணினி ஆசிரியர்களும் அரசு பள்ளிகளில் அங்கீகாரம் அற்றவர்களாகவே உள்ளனர். அரசு பள்ளிகளில் மற்ற அனைத்து பாடங்களுக்கும் அதன் துறையைச் சார்ந்த ஆசிரியர்கள்தான் பாடம் நடத்தி வருகின்றனர். ஆனால், பெரும்பாலான அரசு பள்ளிகளில் “கணினி ஆசிரியர் காலிப்பணியிடங்கள்” நிரப்பப்படாததால் மற்ற துறைகளைச் சேர்ந்த ஆசிரியர்களே கணினி அறிவியல் பாடத்தை நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.இதனால், பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் மாணவ-மாணவிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். அரசு பள்ளிகளில் மேல்நிலை வகுப்புகளில் மட்டும்தான் கணினி அறிவியல் பாடம் உள்ளது. ஆனால், மேல்நிலை வகுப்பில் கணினி அறிவியலைவிரும்பி படிக்கும் மாணவர்கள் ஆசிரியர் பற்றாக்குறையால் கணினி அறிவியலை முழுமையாகக் கற்க முடியாமலேயே பள்ளிப் படிப்பை முடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தனியார் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலிருந்தே “கணினி அறிவியல்” ஒரு முக்கியப் பாடமாக பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்திற்குப் பிறகுதான் கேரள அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், இன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கணினி அறிவியலுக்கும் கட்டாயத் தேர்ச்சி (Mandatory Passing System) என்ற நிலை உருவாகி விட்டது. தமிழக அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் கூட கணினி அறிவியல் பாடம் கொண்டுவரப்படாதது கல்வித்தரத்தின் பின்னடைவை சுட்டிக்காட்டுகிறது.

கணினி அறிவியலில் பி.எட்., முடித்துள்ள பட்டதாரிகளின் இன்றைய நிலை :-

தமிழகத்தில் கணினி அறிவியலில் பி.எட்., முடித்தவர்கள் அனைவரும் அங்கீகரிக்கப்பட்ட இந்திய கல்வி நிறுவனங்களில்தான் பட்டம் பெற்றனர். ஆனால், இன்றுவரையில் அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் அங்கீகரிக்கப்படாமல் இருப்பது மிகவும் வேதனையான ஒன்று.2015-ஆம் ஆண்டின் நிலவரப்படி 40,000-ஆக இருந்த இவர்களின் எண்ணிக்கை 2018-ன் நிலவரப்படி 52,000-ஆக உயர்ந்துள்ளது. பி.எட்., படிக்க கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கிடும் அரசுகள், அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்தை அங்கீகரிக்காமல் வைத்திருப்பது மிகவும் வேடிக்கையாக உள்ளது. பி.எட்., படித்த கணினி அறிவியல் பட்டதாரிகள் அரசு வேலை வாய்ப்புகளின்றி தமிழகத்தில் சொல்லவண்ணா துயரங்களை அடைந்து வருகின்றனர்.

கணினி அறிவியலில் பி.எட்., படித்த இவர்களுக்கு அரசு பள்ளிகளில் எந்தவொரு பணி வாய்ப்புகளும் இல்லை.மற்ற துறை ஆசிரியர்களைப் போன்று, பி.எட்., கணினி அறிவியல்படித்தவர்களுக்கென TET, TRB போன்ற எந்தவொரு ஆசிரியர் தேர்வுகளும் இதுவரை இல்லை,.AEEO, DEO தேர்வுக்கு அடிப்படை கல்வி பி.எட்., ஆனால், இவர்களுக்கு அதிலும் கூட எந்தவொரு வாய்ப்புகளும் இல்லை.உடற்கல்வி, ஓவியம், தையல், கணினி ஆகிய "தொழிற்கல்வி" பாடங்களுக்கான "சிறப்பாசிரியர்" நியமனத்தில்கூட கணினி அறிவியல் பி.எட்., படித்த பட்டதாரிகள் புறக்கணிக்கப்பட்டனர்¬¬. இந்த ஆசிரியர் பணியிலும் கூட வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.ஆசிரியர் பணிக்கு பட்டம் பெற்ற போதிலும், பள்ளி கல்வித்துறையின் கீழ் இயங்கும் எந்தவொரு துறையிலும் பி.எட்., முடித்த கணினி ஆசிரியர்கள் தொடர்ந்து நிராகரிக்கப்படுகிறார்கள்.

தமிழக அரசு, வரும் பட்ஜெட் கூட்டத்தொரில், கல்வி மானியக் கோரிக்கையில் கணினி அறிவியல் மற்றும் கணினி ஆசிரியர்களுக்கு சாதகமான அறிவிப்புகளை வெளியிடும் என்ற நம்பிக்கையில் 50,000-க்கும் மேற்பட்ட கணினி ஆசிரியர்கள் கத்திருக்கின்றனர்.ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா இந்த பட்ஜட் கூட்டத்தொடர்??

செய்தி :-
ந.கோவிந்தன்,(9894372125)
(மாநிலத் தலைவர்)
தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.
TNBEDCSVIPS

3 comments:

  1. “500 ரோபோக்கள் மூலம் மாணவர்களின் கல்வித்தரம் உயர்த்தப்படும்!”- செங்கோட்டையன் தகவல்!! First computer teachers job kudanga..

    ReplyDelete
  2. Super sir posting kidaikkum varai poraduvom

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி