பூஜ்யம், ஒற்றை இலக்கம்... பொறியியல் கல்லூரிகளின் தேர்ச்சி விகிதம்! அதிர்ச்சி பின்னணி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 20, 2018

பூஜ்யம், ஒற்றை இலக்கம்... பொறியியல் கல்லூரிகளின் தேர்ச்சி விகிதம்! அதிர்ச்சி பின்னணி


தமிழ்நாட்டில் உள்ள 500-க்கும் மேற்பட்ட கல்லூரிகளின் முதல் செமஸ்டர் தேர்வு முடிவை, அண்ணா பல்கலைக்கழகம் கடந்த வாரம் வெளியிட்டது. இந்தத் தேர்வில், 43 பொறியியல் கல்லூரிகளிலிருந்து ஒரு மாணவர்கூடதேர்ச்சிபெறவில்லை.
70 சதவிகிதக் கல்லூரிகளில் 30 சதவிகிதத்துக்கும் குறைவான மாணவர்களே தேர்ச்சிபெற்றுள்ளனர். இது, கல்வியாளர்களிடையே பெரும்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொறியியல் கல்லூரிகளில் கடந்த டிசம்பர் மாதம் நடந்த முதல் செமஸ்டர் தேர்வை 1,13,298  மாணவர்கள் எழுதினர். இதில் தேர்ச்சிபெற்றவர்கள் 36,179 பேர். அதாவது 32 சதவிகிதம் மட்டுமே அனைத்து பாடங்களிலும் தேர்ச்சிபெற்றுள்ளனர். 43 பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களில் ஒருவர்கூட தேர்ச்சிபெறவில்லை. 141 கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்திலேயே தேர்ச்சிபெற்றுள்ளனர். 57 கல்லூரிகளில் மட்டும் 50 சதவிகிதத்துக்கும் கூடுதலாகத் தேர்ச்சிபெற்றுள்ளனர். மீதமுள்ள அனைத்து கல்லூரிகளிலும் குறைவான அளவிலேயே தேர்ச்சிபெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு தேர்ச்சிவிகிதம் மிகப்பெரிய அளவில் குறைந்திருக்கிறது. கடந்த ஆண்டு, மூன்று கல்லூரிகளில் மட்டுமே தேர்ச்சிவிகிதம் பூஜ்ஜியமாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு, 43 கல்லூரிகளின் தேர்ச்சிவிகிதம் பூஜ்ஜியமே! கடந்த ஆண்டு, `ஒன்றை இலக்கத் தேர்ச்சிவிகிதம்' 12 கல்லூரிகளில் மட்டுமே இருந்தது. இதைப்போலவே, 50 சதவிகிதத்துக்குக் குறைவான தேர்ச்சிவிகிதம் 247 கல்லூரிகளில் இருந்தது. ஆனால் இந்த ஆண்டு, 141 கல்லூரிகளில் ஒற்றை இலக்க தேர்ச்சிவிகிதத்தையும், 409 கல்லூரிகளில் 50 சதவிகிதத்துக்கும் குறைவான தேர்ச்சிவிகிதத்தைக் காட்டியிருக்கின்றன.

கடந்த மூன்று ஆண்டுகளாக 30 சதவிகிதத்துக்கும் குறைவான சேர்க்கை மற்றும் தேர்ச்சிவிகிதம் குறைவாக உள்ள கல்லூரிகளை மூடுவதுகுறித்து, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் ஆலோசனை வழங்கியுள்ளது. இந்த ஆண்டு புதிய விதிமுறையை கல்லூரிகளுக்கு அனுப்பியுள்ளது. இதுகுறித்து, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் தென்மண்டல அலுவலகத்தில் உள்ளவர்களிடம் பேசினோம்.

``பொறியியல் கல்வியின் தரத்தை மேம்படுத்தவும், படித்து முடித்தவுடன் வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையிலும் பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டுவருகிறோம். இந்த நிலையில், மாணவர்களின் தேர்ச்சிவிகிதம் குறைந்துவருவது அதிர்ச்சியளிக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் சிறப்பாகச் செயல்படாத கல்லூரிகளை மூடவேண்டும் என்பதை ஐந்து வருடங்கள் என்று மாற்றியும், பொறியியல் கல்லூரிகள் சிறந்த முறையில் தேர்ச்சியை வழங்கவில்லை.

கல்லூரிகளில் உள்ள விரிவுரையாளர்களின் கற்பிக்கும் திறனை மேம்படுத்தும் வகையில், ஆன்லைன் படிப்புகளை அறிமுகப்படுத்த உள்ளோம். பொறியியல் கல்லூரியில் பணியாற்றும் விரிவுரையாளர்களில் 50 சதவிகிதம் பேர் இந்தப் பயிற்சியில் கலந்துகொள்ள வேண்டும். பொறியியல் கல்லூரியில் துறைத்தலைவர்களாக இருப்பவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தலைமைத்துவப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

நடத்தப்படும் படிப்புகளில் 50 சதவிகிதத்துக்கும் குறைவில்லாமல் தேசிய அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். 2022-ம் ஆண்டுக்குள் உரிய அங்கீகாரம் பெறவில்லையென்றால், கல்லூரியின் அனுமதி ரத்துசெய்யப்படும். மாணவர்களின் வேலைவாய்ப்புக்கு உதவும் வகையில் மென்திறன் பயிற்சியும், ஆங்கில மொழிப்பயிற்சியும் கட்டாயம் வழங்கிட வேண்டும். புதிய தொழில்நுட்ப முன்னேற்றத்துக்கு ஏற்ப பாடத்திட்டங்களை ஒவ்வோர் ஆண்டும் மாற்றி அமைக்கவும் அனுமதி வழங்கியுள்ளோம். இதற்காக, பல்கலைக்கழகம் அளவில் ஒவ்வொரு பாடத்துக்கும் ஆலோசனைக் குழு அமைக்கவும், இந்தக் குழுவின் பரிந்துரைகளை டிசம்பர் மாதத்துக்குள் வழங்கிடவும் அறிவுரை வழங்கியுள்ளோம்.

மாணவர்களுக்கு, பாடப்படிப்பைத் தவிர வேலைவாய்ப்புத் திறன் மேம்பாட்டுப் பயிற்சியும் வழங்கிட வேண்டும். இதற்காக, பொறியியல் கல்லூரிகள் தொழில் நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும். மாணவர்களுக்கு உதவும் வகையில் தேசிய வேலைவாய்ப்பு மேம்பாட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த உள்ளோம்" என்றனர்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன், ``பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் ப்ளூபிரின்ட் முறையைப் பின்பற்றியே தேர்வுக்குத் தயாராகின்றனர். இதனால்தான், பொறியியல் படிப்பில் தடுமாறுகின்றனர். மேலும், கல்லூரிகளில் தகுதியான விரிவுரையாளர்கள் இருப்பதில்லை. தற்போதுள்ள பாடத்திட்டத்தில் ப்ளூபிரின்ட் முறை முழுமையாக ஒழிக்கப்படும். தமிழ்நாட்டில் அளவுக்கு அதிகமான பொறியியல் கல்லூரிகள் உள்ளன. 200 கல்லூரிகள் இருக்க வேண்டிய இடத்தில் 500 கல்லூரிகள் இருக்கின்றன. 300 கல்லூரிகளை மூடவேண்டியது அவசியம். அப்படி மூடப்படும் கல்லூரிகளை, திறன் மேம்பாட்டு மையங்களாக மாற்றிவிடலாம். இதன்மூலம், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கலாம்" என்றார்.

இந்த ஆண்டு நீட் தேர்வால் தள்ளிப்போன பொறியியல் சேர்க்கையால், முதல் செமஸ்டருக்கு குறைவான நாள்களே பாடம் நடத்த முடிந்தது. மேலும், கணிதப் பாடத்தின் கேள்விகள் பயன்பாட்டுக்கு உகந்த வகையில் மாற்றிக் கேட்கப்பட்டதும் பெரும்பாலான மாணவர்களின் தோல்விக்கு முக்கியக் காரணம். கடந்த சில வருடங்களாகவே, பொறியியல் கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துவருகிறது. மாணவர்களைச் சேர்க்க, கல்லூரிகள் பல்வேறு முயற்சிகளில் இறங்கியுள்ள நிலையில், அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தேர்வு முடிவுகள், பல கல்லூரிகளுக்குப் பின்னடைவை ஏற்படுத்தும்" என்கின்றனர்  விரிவுரையாளர்கள்.

பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் நிலை பரிதாபமே!

1 comment:

  1. REASONS:
    1. ALL PASS SYSTEM UPTO 9TH
    2. IMPORTANCE IS NOT GIVEN TO SSLC EXAM.
    3. RESULT( 100% PASS) ORIENTED TARGET FOR TEACHERS
    4. PROMOTION OF UNQUALIFIED TEACHERS SGT TO BT, BT TO PG
    5. GOVERNMENT ORDERS FAVOUR TO STUDENTS AND AGAINST TEACHERS
    6. GOVERNMENT ISSUES MINIMUM LEVEL MATERIALS TO STUDENTS
    7. POLITICS IN SCHOOL (PTA, EMC ETC)
    8. POLITICS IN HSC ADMISSIONS.
    9. HM OR TEACHER CAN'T DECIDE TO ADMIT A STUDENT OR TO GIVE TC OR TO GIVE MARKS.
    10. PARENTS VS TEACHERS
    11. MORE NUMBER OF STUDENTS IN HSC CLASSES (STUDENT STRENGTH IS NOT TAKEN INTO ACCOUNT)
    12. SPECIAL CLASSES TO THE STUDENTS (ENOUGH TIME IS GIVEN TO THE STUDENTS TO THINK)
    13 ENTRANCE FOR COLLEGE ADMISSIONS BUT NOT IN HSC COURSES

    ETC

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி