தமிழ்நாட்டில் சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு கணிதபாடத்துக்கு மறுதேர்வு இல்லை பிளஸ்-2 பொருளாதாரத்துக்கு ஏப்ரல் 25-ந்தேதி மறு தேர்வு நடத்தப்படும் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 31, 2018

தமிழ்நாட்டில் சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு கணிதபாடத்துக்கு மறுதேர்வு இல்லை பிளஸ்-2 பொருளாதாரத்துக்கு ஏப்ரல் 25-ந்தேதி மறு தேர்வு நடத்தப்படும்

தமிழ்நாட்டில் சி.பி.எஸ்.இ. 10-ம்வகுப்பு கணித பாடத்துக்கு மறுதேர்வு இல்லை என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் 12-ம் வகுப்பு பொருளாதார பாடத்துக்கான மறுதேர்வு அடுத்த மாதம் (ஏப்ரல்) 25-ந்தேதி நாடு முழுவதும் நடைபெறுகிறது.
சி.பி.எஸ்.இ. கல்வி வாரியத்தின் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் தற்போது நடந்து வருகிறது. இதில் 12-ம் வகுப்புக்கான பொருளாதார தேர்வு கடந்த 26-ந்தேதி நடந்தது. இதைப்போல 10-ம் வகுப்பு கணித தேர்வு 28-ந்தேதி நடந்தது. இந்த 2 தேர்வுகளுக்கான வினாத்தாளும், தேர்வு தொடங்குவதற்கு முன்னரே வெளியானது.

இதை உறுதி செய்த சி.பி.எஸ்.இ. கல்வி வாரியம், 2 தேர்வுகளையும் ரத்து செய்தது. இந்த 2 பாடங்களுக்கும் மறுதேர்வு நடத்தப்படும் என அறிவித்த சி.பி.எஸ்.இ. நிர்வாகம், அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறியிருந்தது. அதன்படி ரத்துசெய்யப்பட்ட 12-ம் வகுப்பு பொருளாதார பாடத்துக்கான மறுதேர்வு அடுத்த மாதம் (ஏப்ரல்) 25-ந்தேதி நடைபெறுவதாக மத்திய இடைநிலை கல்வி செயலாளர் அனில் ஸ்வரூப் நேற்று கூறினார்.அதேநேரம் 10-ம் வகுப்பு கணித தேர்வுக்கான மறுதேர்வு குறித்து அவர் கூறுகையில், '10-ம் வகுப்பு கணித தேர்வுக்கான மறுதேர்வை பொறுத்தவரை, அந்த வினாத்தாள் கசிவானது டெல்லி மற்றும் அரியானாவுடனேயே மட்டுப்படுத்தப்பட்டது. எனவே மறுதேர்வு நடத்துவதாக இருந்தால் இந்த 2 மாநிலங்களில் மட்டுமே நடத்தப்படும். அது குறித்து அடுத்த 15 நாட்களுக்குள் முடிவு எடுக்கப்படும். அப்படி மறுதேர்வு நடத்துவதாக இருந்தால், அது ஜூலை மாதத்தில் நடத்தப்படும்' என்றார்.

இதைப்போல இந்தியாவுக்கு வெளியே நடத்தப்படும் தேர்வுக்கான வினாத்தாள் எதுவும் கசியவில்லை என்று கூறிய அனில் ஸ்வரூப், எனவே அங்கும் மறுதேர்வு எதுவும் நடத்தப்படாது என்றும் தெரிவித்தார். உள்நாடு மற்றும் வெளிநாடு வினாத்தாள்களுக்கு இடையே வேறுபாடுகள் உண்டு எனவும் அவர் கூறினார். இதற்கிடையே தமிழகத்தில் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு நேற்று ஒரு சுற்றறிக்கை வந்தது. சி.பி.எஸ்.இ. நிர்வாகம் சார்பில் அனுப்பப்பட்ட அந்த கடிதத்தில், 'தமிழகத்தில் 10-ம் வகுப்பு கணித பாடத்துக்கு மறுதேர்வு இல்லை' என கூறப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் உயர்கல்வி நிறுவனங்களுக்கான நுழைவுத்தேர்வுகளை நடத்துவதற்கு உருவாக்கப்பட்டு உள்ளதேசிய திறனாய்வு நிறுவனத்துக்கு (என்.டி.ஏ.) முதல் இயக்குனராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான வினீத் ஜோஷியை மத்திய அரசு நியமித்து உள்ளது. தற்போது சி.பி.எஸ்.இ., ஏ.ஐ.சி.டி.இ. போன்ற அமைப்புகள் நடத்தி வந்த மேற்படி நுழைவுத்தேர்வுகளை இனிமேல் இந்த தேசிய திறனாய்வு நிறுவனமே நடத்தும். இதற்காக சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட அமைப்புகளை தேர்வு நடத்தும் பொறுப்பில் இருந்து விடுவிப்பதுடன், மாணவர்களின் திறன்களை கண்டறியும் வகையில் தேர்வுகளில் அதிக நம்பகத்தன்மை, தரநிலை அதிகரித்தல் போன்ற நடவடிக்கைகளை என்.டி.ஏ. மேற்கொள்ளும்என அறிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி