பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணியைப் புறக்கணிக்க முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் முடிவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 20, 2018

பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணியைப் புறக்கணிக்க முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் முடிவு

மேல்நிலை பொதுத்தேர்வுகளுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகளை ஏப்ரல் மாதத்துக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்கவுள்ளதாக முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் மாநிலக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநிலத் தலைவர் கே.பி.ஓ. சுரேஷ் தலைமை வகித்தார். இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து கே.பி.ஓ. சுரேஷ் செய்தியாளர்களிடம் கூறியது:-இந்த ஆண்டு முதல் பிளஸ் 1 வகுப்பு பொதுத் தேர்வு நடத்த தமிழக பள்ளிக் கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ளது.போதிய திட்டமிடுதல், அனுபவம் இல்லாதது போன்ற பல்வேறு காரணங்களால் இந்தத் தேர்வு மிகுந்த குளறுபடிகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தநிலையில் பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணிகள் கோடை விடுமுறையில் மே 19-ஆம் தேதி வரை திருத்துவதற்கான அட்டவணை கல்வித் துறையின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ளது.

மே மாதத்தில் விடைத்தாள் திருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டால் ஆசிரியர்களின் கோடை விடுமுறை பாதிக்கப்படும். மேலும் கடும் வெயில் காலத்தில் விடைத்தாள் திருத்துவதற்கு ஏற்ற சூழல் இருக்காது. எனவே, தமிழக தேர்வுத் துறை மொழிப்பாட ஆசிரியர்களை உடனடியாக தேர்வுப் பணியிலிருந்து விடுவித்து உடனடியாக பிளஸ் 1, பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும். இதன் மூலம் ஒட்டுமொத்தமாக விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் இறுதிக்குள் முடிவடையும்.

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களின் இந்தக் கோரிக்கையை பள்ளிக் கல்வித்துறை பரிசீலிக்காவிட்டால் வரும் மே 1-ஆம் தேதி முதல் பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணியைப் புறக்கணிப்பது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார். இந்தக் கூட்டத்தில் மாநிலப் பொதுச்செயலாளர் பி.மனோகரன், பொருளாளர் எம்.ஜம்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி