தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள மருத்துவ பட்டமேற்படிப்புகளுக்கு விண்ணப்ப விநியோகம் தொடக்கம்: விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் மார்ச் 26 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 17, 2018

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள மருத்துவ பட்டமேற்படிப்புகளுக்கு விண்ணப்ப விநியோகம் தொடக்கம்: விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் மார்ச் 26

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள மருத்துவப் பட்ட மேற்படிப்புகளுக்கு விண்ணப்ப விநியோகம் ஆன்லைனில் தொடங்கியது.
நாடுமுழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் எம்டி, எம்எஸ் பட்ட மேற்படிப்பு, பட்டய மேற்படிப்பு (டிப்ளமோ) மற்றும் பல் மருத்துவப் பட்ட மேற்படிப்புக்கு (எம்டிஎஸ்) தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (NEET - நீட்) தகுதி பெறுபவர்களைக் கொண்டு நிரப்பப்படுகிறது. தேசிய தேர்வுகள் வாரியம் நடத்திய 2018-19-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு கடந்த ஜனவரி 7-ம் தேதி நடந்தது.தமிழகத்தில் 25,000 பேர் உட்பட நாடுமுழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் முடித்துவிட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட டாக்டர்கள் நீட் தேர்வை எழுதினர். கடந்த ஜனவரி 23-ம் நீட் தேர்வு முடிவுகளும், அகில இந்திய அளவிலான தரவரிசைப் பட்டியலும் www.nbe.edu.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு www.mcc.nic.in என்ற இணையதளத்தில் விரைவில் தொடங்க உள்ளது. மாநில அரசுகளுக்கான தரவரிசைப் பட்டியல் தனியாக வழங்கப்பட உள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும்தனியார் மருத்துவக் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் ராஜா முத்தையா மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மாநில அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான எம்டி, எம்எஸ் பட்ட மேற்படிப்பு, பட்டய மேற்படிப்பு (டிப்ளமோ) மற்றும் பல் மருத்துவப் பட்ட மேற்படிப்பு (எம்டிஎஸ்) ஆகிய இடங்களுக்கு விண்ணப்ப விநியோகம் ஆன்லைனில் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது.26-ம் தேதி நிறைவுவரும் 23-ம் தேதி மாலை 5 மணி வரை www.tnhealth.org மற்றும் www.tnmedicalselection.org என்ற இணையதளங்களில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும் 26-ம் தேதி மாலை 5 மணிக்குள் கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.மேலும் இதுதொடர்பான விவரங்களுக்கு இணையதளங்களைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் எம்பிபிஎஸ் முடித்துவிட்டு அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் டாக்டர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் வழங்கப்பட்டு வந்த 50 சதவீத இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு, மதிப்பெண்வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

அரசு டாக்டர்கள் பாதிப்பு

அதன்படி கடினமான மற்றும் தொலைதூரம், மலைப்பிரதேசங்கள், டிஎன்ஆர் (திருவாரூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம்) மற்றும் கிராமங்களில் ஓர் ஆண்டு பணியாற்றிய டாக்டர்களுக்கு 10 சதவீதம், இரண்டு ஆண்டுக்கு 20 சதவீதம், மூன்று ஆண்டுக்கு 30 சதவீதம் மதிப்பெண் கொடுக்கப்பட்டது. அவர்கள் நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண்களை வைத்து, இந்த சதவீத மதிப்பெண் கணக்கிட்டு வழங்கப்பட்டது.மாவட்ட, தாலுகா அரசு தலைமை மருத்துவமனைகள் உள்ளிட்ட நகர்ப்புறப் பகுதிகளில் பணியாற்றும் அரசு டாக்டர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கப்படவில்லை. இதனால் அங்கு பணியாற்றும் டாக்டர்கள் பாதிக்கப்பட்டனர்.

அரசு டாக்டர்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் விதமாக மதிப்பெண் வழங்குவது தொடர்பான முடிவுகளை எடுப்பதற்காக தமிழக அரசு 6 பேர் கொண்ட குழுவை அமைத்து, தமிழக மருத்துவ சேவை கழக நிர்வாக இயக்குநர் பி.உமாநாத் தலைமையிலான குழுவினர் கடந்த ஆண்டைப் போல் இல்லாமல் கூடுதல் இடங்களைச் சேர்த்து அரசுக்கு அறிக்கை கொடுத்தனர்.குழுவின் அறிக்கைப்படி அரசு டாக்டர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட உள்ளது. இந்த முறைக்கு எதிர்ப்புதெரிவித்து 50 சதவீத இடஒதுக்கீட்டு முறையைமீண்டும் கொண்டுவர வலியுறுத்தி அரசு டாக்டர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி