காவிரித்தாயே - கைவிரித்தாயே!!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 1, 2018

காவிரித்தாயே - கைவிரித்தாயே!!!

அன்றொரு நாள்
அகத்தியரால் அடைபட்டவளே
இன்றைய நாள் -
அரசியலால் தடைபட்டவளே!


இந்த அரசியலில்தான்
எத்தனை"கரு நாடகம்"?
இரங்காதோ அந்தக்
கர்நாடகம்?

விநாயகனால்
விடுவிக்கப்பட்டவளே
வெறிநாய்களால் - மணல்
விற்றழிக்கப் பட்டவளே

இப்போதிருப்பது - நாங்களும்
எங்கள்
கண்ணீர்ச் சுரப்பிகளும் மட்டுமே

பசுமையாயிருந்த
விவ"சாயம்" வெளுத்து விட்டது.

முப்போகம் முளைத்த பூமியில்
வெறும் சோகம் - அங்கே
வறட்சியின் வைபோகம்

காவிரி என்றாலே
"கை விரி" என்கிறது அரசியல்

நீர்ப்புடவை அணிந்து
நெடுக நடந்தவளே - இங்கு
துச்சாதன விரல்களுக்குத்
துணி இழக்க மறுத்து
தூரமாய் நின்றாயோ!

நரிகள் என்று இங்கு
நாடாளத் தொடங்கிற்றோ-அதுமுதலே
நதிகள் இப்பூமியை
நனைக்க மறுத்தன.

காவிரித்தாயே - நீ
உதித்த இடம் வேறாயினும் -உன்னைத்
துதித்த இடம் இப்பூமி - நீ
குதித்த இடம் எம் இதயம்!
விதித்தவறால் சில வீணர்களை
மதித்தமையால் - இன்று
நதித்தடத்தை இழந்து
நடுத்தெருவில் நிற்கின்றோம்.

மாநில அரசும்
மத்திய அரசும் இணைந்து - ஒரு
பூ நிலப் பொய்கையின்
புனலழித்து விட்டீரே !

வேளாண்மை செய்த ஜனம்- இன்று
மேலாண்மை அமைப்பிற்காய்
மெய் வருந்தி நிற்கிறது.

பெற்றதாயின் கற்பையே
பேசி விற்பவர் மேல்
பற்று வைத்து வாக்களித்தால்
புற்று வைக்கும் பூமியெங்கும்.

வாக்களிக்கக் காசு வாங்கி
வக்கற்றுப் போனவரால்
நெல்கொழிக்கும் நிலமெல்லாம்
செல்லரித்துச் சீரழியும்.

வாய்ப்புக்களைத் தவறவிட்டு -வெறும்
வாய்ப் பூக்களால் வசியம் செய்தோரை
வாழவைத்த காரணம்தான் - இன்று
உடம்பெங்கும் புண் - ரணம்தான்

இருமாநில அரசியலாரும்
எட்ட நில்லுங்கள் - இனி
கன்னட உழவனும் - மனம்
கன்றிய தமிழனும்
கலந்து பேசட்டும்.

நதியன்னையே! எம் நிலத்திற்கு
நீரூற்ற வா! -
தவறினால் உழவரின் சவத்திற்குப்
பாலூற்றும் பரிதாபப்
பாவம் உனைச் சேர்ந்துவிடும்

-------------------------------------------------------------

சமர்ப்பணம்: கவர்ச்சியில் மயங்காமல்
                        காசு வாங்காமல் வாக்களித்த
                        கண்ணியத் தமிழர்களுக்கு...

Thanks to Mr.Radhakrishnan

4 comments:

  1. நெகிழ வைக்கும் வரிகள்...
    காவிரித் தாயே கருணை காட்டு
    விடியலுக்காய் ஏங்கும் எம்
    ஏழை விவசாயிகளுக்கு..😢😢😢


    ReplyDelete
  2. நரிகள் என்று இங்கு
    நாடாளத் தொடங்கிற்றோ-அதுமுதலே
    நதிகள் இப்பூமியை
    நனைக்க மறுத்தன. Vounmai

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி