கூட்டுறவு சங்கத் தேர்தலை ரத்து செய்யக் கோரும் வழக்கு: தமிழக அரசின் பதில் மனு மீது உயர் நீதிமன்றம் அதிருப்தி! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 12, 2018

கூட்டுறவு சங்கத் தேர்தலை ரத்து செய்யக் கோரும் வழக்கு: தமிழக அரசின் பதில் மனு மீது உயர் நீதிமன்றம் அதிருப்தி!

கூட்டுறவு சங்கத் தேர்தல் தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனு மீது அதிருப்தி தெரிவித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, முழு விவரங்களையும் தெரிவிக்க உத்தரவிட்டு விசாரணையை வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்தது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதி திமுக எம்எல்ஏ ஆர்.சக்கரபாணி தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் கூட்டுறவு சங்கப் பதவிகளுக்கு ஆளுங்கட்சியினர் அதிகாரத்தைப் பயன்படுத்தி தங்களது கட்சியைச் சார்ந்தவர்களை மட்டுமே தேர்வு செய்து வருகின்றனர். பிற கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களின்மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. திண்டுக்கல்லில் பொதுமக்கள் மற்றும் எதிர்கட்சியினர் எதிர்ப்பால் சில இடங்களில் இரண்டாம் கட்டத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையரின் கவனத்துக்கு கொண்டு சென்றும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே கூட்டுறவு சங்கத் தேர்தல் தொடர்பாக மார்ச் 5 -ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பை ரத்து செய்து உத்தரவிடவேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, வழக்கின் தற்போதைய நிலை தொடர நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர் அகமது ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் தரப்பில் பதில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில், கூட்டுறவு சங்கங்களுக்கானத் தேர்தல் அறிவிக்கப்பட்டு ஒரு கட்டம் நிறைவடைந்த நிலையில், நீதிமன்றம் தலையிட்டு தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும், மனுதாரர் கூட்டுறவு சங்கத் தேர்தலில் நேரடியாக பங்கேற்று பாதிக்கப்பட்டவர் கிடையாது. அவர்எதிர்கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். எனவே அவரது மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.இதற்கு ஆட்சேபம் தெரிவித்து மனுதாரர் தரப்பு வழக்குரைஞர் வாதிடுகையில், முதல் மற்றும் இரண்டாம் கட்டத் தேர்தலில் 9 ஆயிரத்து 241 பேர் போட்டியிட்டனர். அதில் 7 ஆயிரத்து 699 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

இது கூட்டுறவு சங்கத் தேர்தலில் ஆளுங்கட்சியின் ஆதிக்கத்தை காட்டுகிறது. தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது என்பதற்கு இதுவே சாட்சி. மேலும், எதிர்கட்சியைச் சேர்ந்தவர்களின் மனுக்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டுள்ளன என்றார்.இதைத்தொடர்ந்து கூட்டுறவு சங்கங்களுக்கான மாநில தேர்தல் ஆணையர் தரப்பில் தேர்தல் குறித்த விபரங்கள் தாக்கல் செய்யப்பட்டது. அதில், முதல் கட்டத் தேர்தலில் 1350 கூட்டுறவு சங்கங்களிலும், இரண்டாம் கட்டத் தேர்தலில் 899 கூட்டுறவு சங்கங்களிலும் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

152 கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிடப்பட்டிருந்தது.ஆனால், ஒவ்வொரு கூட்டுறவு சங்கத்திலும் உள்ள வேட்பாளர்கள் விபரம், நிராகரிக்கப்பட்ட மனுக்கள் விபரங்கள் உள்ளிட்டவை பதில் மனுவில் இல்லை எனக்கூறி நீதிபதிகள் ஏற்க மறுத்தனர்.அப்போது அரசு வழக்குரைஞர் வாதிடுகையில், வேட்பாளர்கள் பட்டியலை ஏப்ரல் 12 -ஆம் தேதி வெளியிட வேண்டும். எனவே நீதிமன்றம் விதித்துள்ள தடையை நீக்கிமனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரினார்.

இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், கூட்டுறவு சங்கத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், ஏற்கப்பட்ட மனுக்கள், நிராகரிக்கப்பட்ட மனுக்கள் உள்ளிட்டவற்றின் விபரங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வியாழக்கிழமைக்கு (ஏப்ரல் 12) ஒத்திவைத்தனர். அதுவரை வழக்கில் தற்போதைய நிலை தொடர உத்தரவிட்டனர்.

4 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. Poda dubakooru 2013 porata grpe poi padingada next examku

      Delete
  2. 2013 க்கு பின் தேர்வு எழுத வாய்ப்பு கிடைக்காமல் 4 வருடங்கள் பாதிக்கப்பட்டு பின் 2017 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் சலுகை மதிப்பெண் கோரினால் அவர்களுக்கும் அது பொருந்தும்.... 2017 இல் இதை வைத்து எவரேனும் வழக்கு தோடுத்தால் அவர்களுக்கும் இது சலுகை வளங்கப்படும்..... நேரத்தை வீணடிக்காமல் படிங்க....

    ReplyDelete
  3. கூட்டுறவு சங்க தேர்தலை நடத்த விதிக்கப்பட்ட இடைக்கால தடை ஏப்ரல் 23-ம் தேதி வரை தொடரும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.


    மாநில கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையம் விரிவான ஆவணங்கள் தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    எதிர் மனுதாரரான அதிமுக தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி