தமிழகத்தில் கூட்டுறவு தேர்தலை தொடர்ந்து நடத்துவதில் சிக்கல்: தற்போதைய நிலை தொடர உயர் நீதிமன்றம் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 10, 2018

தமிழகத்தில் கூட்டுறவு தேர்தலை தொடர்ந்து நடத்துவதில் சிக்கல்: தற்போதைய நிலை தொடர உயர் நீதிமன்றம் உத்தரவு.

கூட்டுறவு சங்க தேர்தல் தொடர்பாக தற்போதையநிலை தொடரவும், அடுத்த கட்ட தேர்தல் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என உத்தரவிட்ட உயர் நீதிமன்றம்,
இது தொடர்பாக தேர்தல் ஆணையர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை நாளைக்கு (ஏப். 11) ஒத்திவைத்தது. இதனால் பாக்கியுள்ள 3 கட்ட தேர்தல்களை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தொகுதி திமுக எம்எல்ஏ சக்கரபாணி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:தமிழகத்திலுள்ள 18,435 கூட்டுறவு சங்கங்களுக்கான பலகட்ட தேர்தல் குறித்த அறிவிப்பு கடந்த மார்ச் 5-ம் தேதி வெளியிடப்பட்டது. எனக்கு கிடைத்த ஆவணம், தகவல்கள் அடிப்படையில் கூட்டுறவு தேர்தல்கள் முறையாக நடக்கவில்லை. ஆளுங்கட்சியினருக்கு சாதகமாகவே நடத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான சங்கங்களில் ஆளுங்கட்சியினரே தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இந்த தேர்தலுக்கு முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் மாநில பொறுப்பாளர்களாகவும், அதிமுக அமைச்சர்கள், எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க் கள் மாவட்ட பொறுப்பாளர்களாகவும் அறிவிக்கப்பட்டு தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன. இவர்கள் தங்களது அதிகார துஷ்பிரயோகத்தை பயன்படுத்தி ஆளுங்கட்சியினரை மட்டுமே தேர்வு செய்துள்ளனர். பல இடங்களில் வாக்குப்பதிவே நடத்தாமல் தேர்வு செய்துள்ளனர்.முதல் கட்ட தேர்தலில் பெரும்பாலும் ஆளுங்கட்சியினரை தேர்வு செய்துள்ள நிலையில், தற்போது அடுத்த கட்ட தேர்தலுக்கு தயாராகியுள்ளனர். விதிமீறல்கள் மற்றும் முறைகேடுகள் தெரிந்தும், புகார்கள் வந்தும்தேர்தல் அதிகாரிகள் ஆளுங்கட்சியினர் மீது நடவடிக்கை இல்லை.எனவே, கூட்டுறவு தேர்தல் தொடர்பாக கடந்த மார்ச் 5-ல் வெளியிடப்பட்ட அறிவிப்பும், அதன்படி நடந்த தேர்தல்களும் சட்டவிரோதம் என்பதால், செல்லாது என அறிவித்து, சட்டவிதிகளுக்கு உட்பட்டு முறையாகவும், நேர்மையாகவும் தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

இந்த மனு நேற்று நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர் அகமது முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது இருதரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள் கூட்டுறவு தேர்தலில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் எனவும், அதாவது கூட்டுறவு சங்க தேர்தல் தொடர்பாக வேட்பு மனுக்களை வாங்கவோ, பரிசீலிக்கவோ அடுத்த கட்ட தேர்தல் தொடர்பாக எந்தவித தேர்தல் நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என உத்தரவிட்டு ஏப். 11-ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டனர். மேலும், இது குறித்து தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களுக்கான மாநில தேர்தல் ஆணையர் விரிவான பதில் மனு தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.மனுதாரர் சார்பாக இவ்வழக்கில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வீரகதிரவன் கூறுகையில், கூட்டுறவு தேர்தல்கள் 5 கட்டங்களாக நடக்கின்றன. ஏற்கெனவே 2 கட்டங்கள் முடிந்துள்ளன. தற்போதைய நிலை தொடர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தற் போது 2 கட்டங்களாக நடந்த தேர்தல்களில் இயக்குநர் குழு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இக்குழுவிலிருந்து தலைவர், துணைத்தலைவர் தேர்வு செய்யப்பட வேண்டும். அந்த தேர்தலை இனி நடத்த முடியாது. மேலும் இதுவரை தேர்தல் பணி தொடங்கப்படாத 3, 4, 5 கட்ட தேர்தல்களில்எந்த பணியையும் மறுஉத்தரவு வரும்வரை தொடரக்கூடாது என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி