"நல்லா வாழ்ந்த நாட்கள்" - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 15, 2018

"நல்லா வாழ்ந்த நாட்கள்"

காத்துல வுளுந்த மாங்காய்களை பிறக்கியாந்து வைக்கலு வச்சு பழுக்க வச்சிருக்கேம்.

பத்தம்பது காய்கள் வுளுந்திட்டு.பூராத்தையும் அரிசிப்பானைக்குள்ள பூத்து வைக்கனுமினாக்கி அரை கோட்டை அரிசில்லா வேணும்.



இப்ப வாங்குததே பத்துகுலோ அஞ்சுகுலோ அரிசிப்பைதானே.

அந்தக் காலத்திலேன்னா ஒரு கோட்டை புழுங்கலையும் சக்கடா வண்டியிலே ஏத்தி ரைஸுமில்லுக்கு கொண்டுட்டு போயி நெல்லைக்குத்தி அரைகோட்டை அரிசிய வீட்டுக்கு கொண்டாருவோம்.

உமியை  வெளில ஒரு மூலையிலே தட்டி ஒரு வறட்டியில கங்கு உண்டாக்கி உள்ள போட்டாய்க்க..ரெண்டுமூனு நாளையிலே வெள்ளவெளேருன்னு உமிக்கரி ரெடியாவிரும்.மனுசாளுக்கு பூராம் பல்லு தேய்க்க உமிக்கரி தான்.வெரல வச்சு தேய்க்கயிலேயே பல்லு கிச்சு கீச்சுன்னு சத்தம் போட்டுகிட்டு மினுங்குமிங்ஙேன்.
சட்டிபானை கழுவவும் அந்த சாம்பலு தான்.சுத்தமா மினுங்கும் சட்டி பானையெல்லாம்.

தவிடு பூராம் மாட்டுக்கு.
மாட்டுத்தொட்டியிலே ரெண்டு சொளவு தவிட்டை கொட்டி பனைமட்டையக் கொண்டி கரைச்சு குடுத்தமுன்னா மாடுகள் போட்டிபோட்டுகிட்டு ஒரு சொட்டுத் தண்ணி தொட்டியில இல்லாம உறிஞ்சி குடிச்சுருமில்லா.அத பாக்கதே ஒரு ஆனந்தமில்லாய்ய்யா.!!

பருத்திகொட்டைய நனைய வச்சு தவிட்டையும் கலந்து பனைவோல பெட்டியிலே போட்டு தொழுவுல கொண்டு போயி மாட்டுக்கு குடுத்தா...கடுக்கு..முடுக்கு..ன்னு நாமொ மிச்சர் சாப்பிடுதமாறி நொறுக்கி தள்ளிரும்.

அம்புட்டு அரிசியையும் பொங்கி திங்கதுக்கும் வீடு நெறைய ஆளும்..போறாளும் வாராளுமா விருந்தாடிகளும் வந்து தின்னுட்டு போவாங்க.

பழையதுன்னாலும் மூனு பெரிய மண்பானையில மூனு நாளு பழையது தண்ணியும் கஞ்சியுமா வரிசைகெட்டி ஒலமூடி போட்டு மூடி அடுக்களகுள்ள இருக்கும்.

அவ்வொஅவோ தேவைக்கு தக்கன கும்பாவுலேயோ தாளத்திலேயோ போட்டு திங்க வேண்டியது தான்.

வயக்காட்டு போறொவொ கொஞ்சம் புளிச்ச பழையதை கஞ்சியுந்தண்ணியுமா பெரிய தூக்குசட்டியிலே ஊத்திகிட்டு போவாவொ.பித்தாளை தூக்குசட்டிதான்.உள்ளுக்கு ஈயம் பூசியிருக்கும்.தூக்குச்சட்டியோட ஒரு காதுல ஒரு கிழிஞ்சதுணியில உப்பு கெட்டி கொண்டு போவாவொ.

தொடுகறி இருந்தா அதுக்கொரு தனிச்சட்டி.இல்லன்னா வயக்காட்டிலேயே விளைஞ்சு நிக்கும் ஈராங்ஞ்யத்தையோ பச்சமிளகாயையோ ஆஞ்சு உப்புல முக்கி தூக்குசட்டி சோத்தை காலிபண்ணிட்டு நீத்தண்ணிய குடிச்சாங்கன்னா..பிறவு சாங்காலம் வீட்டுக்கு வந்துதான் சோத்தை பாக்கனும்.

சாங்காலமுன்னா சுடுசோறும் எல்லா காய்கறிகளும் போட்ட ஒரே குழம்பும் கொதிக்க கொதிக்க பித்தாள கும்பாவுலேயோ மண் கும்பாவுலேயோ போட்டு முத்தத்துக்கு கொண்டாந்து வட்டஞ்சேந்து வுக்காந்து சாப்பிடுவோம்.கீழோட்டு மேலோட்டு புள்ளக்காடுவொளும் வருவாவொ.எல்லாரு பேச்சிலேயும் சிரிப்பாணி அள்ளும்.செரமமெல்லாம் ஓடிப்போவும்.

அந்த நாட்கள் நல்லா வாழ்ந்த நாட்கள்.

நன்றி
திரு.பரிமேலழகர் பாரி

6 comments:

  1. இது கவிதை இல்லவோய்...வாழ்ந்த வாழ்வ தொலச்சிட்டு தேடுர குமுறல்..நல்லா சொன்னவோய்..நெஞ்சினிக்க..

    ReplyDelete
  2. இந்த வாழக்கை மீண்டும் வருமா .

    ReplyDelete
  3. We have lost that life. Because farming farmers are slowly being destroyed by the politicians

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி